ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டுமென்ற இந்திய அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படி இந்தியாவில் 1952, 1963, 1973 ஆண்டுகளில் மூன்று முறை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, 1973இல் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. 1975இல் நெருக்கடி நிலை காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் தொகை நிலைபெறும் வரை தொகுதி மறுவரையறையை நிறுத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது. எனவே அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறை செய்யாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தபோது 2002இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடப்பட்டது. 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில் 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடந்தால், அது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் 58 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விழுக்காடான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றக்கூடாது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்ச் 22ஆம் தேதி கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள சூழலில் ‘தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டைப் பாதிக்காது’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொகுதி குறைக்கப்படாவிட்டாலும் வடமாநிலங்களில் கணிசமான தொகுதிகள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுவும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒருவகை செயல்திட்டமே! மும்மொழிக் கொள்கை வாயிலாக இந்தித் திணிப்பு, நிதி மறுப்பு, தொகுதி சீரமைப்பு என தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி அச்சுறுத்தி, மிரட்டி வருவது ஜனநாயக கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டை மிரட்டிப் பணிய வைக்கும் பாஜகவின் கொல்லைப்புற அரசியலை தமிழ்நாடு அரசு வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.