பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா, துணைவேந்தர்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இம் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 2023 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த நிலையில் 10 மசோதாக்களையும் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். அந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசு மறு நிறைவேற்றம் செய்து இரண்டாவது முறை ஆளுநருக்கு அனுப்பியது. அம் மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பினார் ஆளுநர் ரவி. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தது.
கடந்த பிப்ரவரி 11ஆம் நாள் ஆளுநரின் செயலைக் கண்டித்து உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பிறகும் ஆளுநரின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கில் நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி ஆர்.மகாதேவன் இருவர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் 2025 ஏப்ரல் 8ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. ஆளுநருக்கு தனி அதிகாரம் (வீட்டோ) எதுவும் இல்லை. சட்டத்தை மீறி ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது நேர்மையற்ற செயல். எனவே நீதிமன்றம் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 மசோதாக்களும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசமைப்பின் 200ஆவது விதியில் ஆளுநர் ‘கூடிய விரைவில் பதில் அளிக்க வேண்டும்’ என்பதை வைத்துக் கொண்டு ஆண்டுக்கணக்கில் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வந்ததை திருத்தி, ‘ஒரு மசோதா மீது ஆளுநர் ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். நிறுத்தி வைப்பதாக இருந்தாலோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தாலோ 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மறுபரிசீலனை செய்வதற்காக அனுப்பப்பட்டால் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கால நிர்ணயத்தை விதித்ததுடன் ஆளுநருக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.
கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநில அரசுகளும் இதேபோன்று ஆளுநர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள நிலையில் இத்தீர்ப்பு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநில சுயாட்சிக்குக் கிடைத்த வெற்றி. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளுக்கு நெருக்கடியையும், மிரட்டலையும் விட்டுக் கொண்டிருந்த பாஜகவின் கொல்லைப்புற அரசியலுக்குக் கிடைத்த சம்மட்டி அடி இந்தத் தீர்ப்பு.
பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூழலில் இத்தீர்ப்பு ஆளுநரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத் துள்ளது. அரசைச் செயல்பட விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை கொடுத்து வந்த, சட்டத்தை மீறிச்செயல்பட்ட ஆளுநர் ரவிக்கான தண்டனை எதுவுமில்லை. குறைந்தபட்சம் இதற்காக அவர் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அந்தப் பதவியில் அவர் ஒட்டிக் கொண்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.