மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கல்வியைத் திணிக்காதீர்கள்!
வி.எஸ்.முஹம்மத் அமீன், மே 16-31, 2025


தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைத் திருத்தியமைத்து டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் பற்றிய பாடங்களை நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத, கலாச்சார மரபுகள், புனிதத் தலங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பூமி எவ்வாறு புனிதமாகிறது என்ற புதிய பகுதி மத மரபுகள், புனித யாத்திரைத் தலங்களை ஆராய்கின்றன. 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், சார்தாம் யாத்திரை, சக்தி பீடம், நதிகளின் சங்கமம், மலைகள், காடுகள் குறித்து இடம் பெற்றுள்ளன. உ.பியின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மஹா கும்பமேளா குறித்தும், ஒன்றிய அரசின் மேக் இன் இந்தியா, பெண்களைக் காப்போம்; பெண்களுக்குக் கல்வி அளிப்போம் திட்டம், அடல் சுரங்கம் உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளன.

NCERT மட்டுமல்லாமல் பல மாநில பாடத்திட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் முகலாய வரலாறு, மேற்கத்திய வரலாறு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு சிவாஜி மன்னரைச் சுற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு புதிய தேசியக் கொள்கை அடிப்படையில் கல்வித் திட்டத்தைச் சிதைத்து வருகிறது. மாணவர்கள் மத்தியில் மத வேறுபாடு, வெறுப்பைத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் நீட் தேர்வின் மூலம் எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்குக்கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் நீட் தேர்வு மையங்களில் நடைபெறும் உளவியல் தாக்குதல்களையும் ஒருபுறம் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. ‘குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன’ என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முறைகேட்டைத் தடுக்க முடியாதவர்கள்தாம் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் தாலி, மூக்குத்தியைக் கழட்டச் செய்தல், மூக்கு காதுகளில் டார்ச் அடித்துப் பார்த்தல், ஆடைகளைச் சோதித்தல் என்ற உளவியல் தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்களில் மாணவிகளின் ஆடையிலுள்ள பட்டன்களை அறுத்தெறிந்துள்ளனர்.

கல்வி என்ற பெயரில் மாணவர்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் சூழலில் கோடை விடுமுறைகள் கூட அவர்களுக்கு இல்லாத வகையில் 10, +2, வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தத் தொடங்கி கல்விச்சுமையை அதிகப்படுத்தியுள்ளனர். பாடச்சுமையை அதிகரித்து படிப்பைத் திணிக்கும் சூழலில் ஒரு தலைமுறையே உளவியல் சிக்கலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கின்றது. பாடங்களைக் குறைத்தல், கற்றல் முறையை இனிதாக்குதல், அதிகத் தேர்வுத் திணிப்புகளிலிருந்து விடுவித்தல், மனப்பாட பாரத்தைக் குறைத்தல், நன் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த மனித மாண்புகளைப் போற்றும் கல்வித்திட்டத்தை உருவாக்குதல் என்று கல்வித் திட்டத்தை மாற்றினால்தான் வளரும் தலைமுறையை மகிழ்வுள்ளவர்களாய், பயனுள்ளவர்களாய் மாற்ற முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்