மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

பொள்ளாச்சி தீர்ப்பு தரும் செய்தி
வி.எஸ்.முஹம்மத் அமீன், June 1-15, 2025


2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும், ‘அண்ணா.. அடிக்காதீங்கண்ணா’ எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டு கதறிய பெண்களின் அழுகுரலும், விம்மலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதைக் காணொளியாகப் பதிவு செய்து வாட்ஸ்அப் குழு மூலம் ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்து வந்த காமக் கொடூரர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து காமக் கொடூரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பல தரப்பிலிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட பிறகு 2019 மார்ச் மாதத்தில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரல் 25இல் சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1,500 பக்கங்கள் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் இறுதிவரை உறுதியுடன் நின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயந்து பின்வாங்கிவிடக் கூடாது, இறுதிவரை போராட வேண்டும் என்ற தன்னம்பிக்கைப் பாடத்தை பொள்ளாச்சி நிகழ்விலிருந்து நாம் பெறமுடியும்.

ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் 2025 மே 13ஆம் நாள் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி குற்றவாளிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேருக்கும் 376D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) 376(2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனையும், மொத்தமாக ரூ.85 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும், பெண்களுக்கு நம்பிக்கையையும் தந்ததாக தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்று விதிக்கப்பட்டாலும் நன்நடத்தை, மேல்முறையீடு, குடும்பச்சூழல் என்று கூறி இந்தக் கயவர்கள் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்கள் அனைவரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும். அதுவே முழுமையான நீதியாக இருக்கும். பாதுகாப்பற்ற இந்த உலகில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும். உடை, பேச்சு, ஆண்பெண் கலப்பு, சமூக வலைதள ஆபாசப் பயன்பாடு போன்ற குற்றத்திற்கான அனைத்து வாசல்களையும் அடைக்க வேண்டும். ஒழுக்க மாண்புகளும், இறையச்சமும் கொண்ட சமுதாயத்தில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். பெண்களைக் குறித்த பார்வையும், மதிப்பீடும் சமூகத்தில் உயர்ந்தெழும் வண்ணம் சிந்தனை மாற்றம் நிகழ வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்