ஜூன் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்குத் தன் தாயாருடன் வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா காரில் வைத்திருந்த தன்னுடைய 9 சவரன் நகை தொலைந்து போனதாகவும், கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வரும் அஜித்குமார் மீது ஐயம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த 6 காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை இரண்டு நாள்களாக அடித்துச் சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அஜித்குமார் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகக் காவல்துறை வழக்கமாகக் கதை கட்டியது. அஜித்குமாரைத்தாக்கிய வீடியோ வெளியாகி காவல்துறையின் போலிமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நிகிதாவிற்குப் பழக்கமான உயர் அதிகாரியின் அழுத்தத்தால் இந்தப் படுகொலை நடந்ததாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தனிப்படையினர் இரண்டு நாள்களாக அஜித்குமாரை விசாரித்திருக்கமுடியாது. எனவே இந்த விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? விசாரணைக்குச் சென்ற நபர் இறக்கும்படியாகத் தாக்கியது ஏன்? காவல்துறையினருக்கு இவ்வளவு அதிகாரத்தை வழங்கியது யார்? மாஜிஸ்திரேட்டுக்கு ஏன் உடனடியாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை அனுப்பப்படவில்லை?
காவல்துறை, நீதித்துறையினரின் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை விசாரிக்க ஏன் அனுமதிக்கப்படவில்லை? விசாரணை என்ற பெயரில் ஏழைகளைத் தாக்குவதற்குத்தான் காவல்துறையினர் உள்ளார்களா? பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுதான் அவர்களின் கடமை. அப்படியிருக்கும்போது இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது’ என்று கூறி இந்தக் கொலை வழக்கை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டு, சிபிசிஐடி சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு நடந்த நிகழ்விற்காக மன்னிப்புக் கோரி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதிஅளித்ததுடன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தவிட்டார்.