தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய பள்ளிப் பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. பாடச்சுமை குறைப்பு, புதிய பாடத்திட்டம் என்ற பெயரில் NCERT தொடர்ந்து உண்மையான வரலாற்றுக்குப் பதிலாக வெறுப்பை விதைக்கும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
பாடப்புத்தகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பகுதிகளை நீக்குகிறோம் என்ற போர்வையில் முகலாய மன்னர்கள், சுல்தான்கள் இந்தியாவிற்குச் செய்த மகத்தான பணிகளை நீக்கி வருகின்றது. கடந்த மே மாதம் 2025-26 கல்வியாண்டிற்கான 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைத் திருத்தியமைத்து டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் பற்றிய பாடங்களை நீக்கியதுடன் அதற்குப் பதிலாக மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத, கலாச்சார மரபுகள், புனிதத் தலங்கள்பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டன.
இப்போது எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் Exploring society: Indian and beyond பகுதி 1இல் முகலாய மன்னர்கள் பாபர், அக்பர், ஔரங்கஜேபைக் கொடூரர்களாகச் சித்திரித்து வரலாற்று மோசடியைச் செய்துள்ளது. அக்பர் சித்தோர்கரின் ராஜபுத்திர கோட்டையைத் தாக்கிச் சுமார் 30,000 பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டபோது, அவர் ஒரு வெற்றிச் செய்தியை அனுப்பினார், அதில் ‘நாங்கள் காஃபிர்களுக்குச் சொந்தமான பல கோட்டைகளையும் நகரங்களையும் ஆக்கிரமித்து அங்கு இஸ்லாத்தை நிலைநாட்டியுள்ளோம். எங்கள் இரத்தவெறி கொண்ட வாளின் உதவியுடன், நாங்கள் அவர்களின் மனதிலிருந்து காஃபிரின் அடையாளங்களை அழித்துவிட்டோம், இந்துஸ்தான் முழுவதும் உள்ள கோயில்களை அழித்துள்ளோம்’ என்று கூறியதாகப் பொய்யை பதிவு செய்து நச்சை விதைத்துள்ளது.
ஔரங்கஜேப் கோயில்களை இடிக்க மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவிட்டார். பனாரஸ், மதுரா, சோம்நாத், சமண கோயில்கள், சீக்கிய குருத்வாராக்களில் உள்ள கோயில்களை அழித்ததாக வரலாற்றுத் திரிபு செய்துள்ளார்கள். பாபர் கொடூரமான, இரக்கமற்ற வெற்றியாளராகவும் இருந்தார். பெண்கள், குழந்தைகளை அடிமைப்படுத்தி, கொள்ளையடிக்கப்பட்ட நகரங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ‘மண்டை ஓடுகளின் கோபுரங்களை’ எழுப்புவதில் பெருமை கொண்டார்’ என்றும் இந்தப் பாடப்பகுதிகள் உண்மைக்கு மாறாகப் போதிக்கின்றன.
மாணவர்களுக்குச் சீரான, ஒருங்கிணைந்த, தரமான கல்வியை வழங்குவதற்கான பாடத்திட்டத்தை வடிவமைத்து வழங்க வேண்டிய NCERT மத வெறுப்பையும், வரலாற்றுத் திரிபையும் கைக் கொள்வதுடன் மாணவர்கள் மத்தியில் தவறான செய்திகளையும், பொய்யான வரலாற்றையும் திட்ட மிட்டு செயல்படுத்துவது வேதனைக்குரியது. கடும் கண்டனத்திற்குரியது. முஸ்லிம்கள் மீதான வெறுப்பைக் கட்டமைப்பதற்காக இந்தியாவின் வரலாற்றையே அழித்தொழிக்கும் முயற்சியை பள்ளிப் பாடத்திட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசு முயல்வது அறிவுசார் படுகொலையாகும்.
எல்லா மட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைக் கட்டமைத்து நாட்டைத் துண்டாட நினைக்கும் பாஜகவின் தீய திட்டத்தை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். திருத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு உண்மையான வரலாறு இணைக்கப்பட வேண்டும்.