2025ஆகஸ்ட் 7ஆம் நாள் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக’ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்ற ஐந்து வகைகளில் வாக்குகள் திருடப்படுவதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்குக் குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முடிந்து, வரைவுப் பட்டியலைக் கடந்த 1ஆம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் குறித்த தகவல்களைச் சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி வைத்துள்ள குற்றச்சாட்டு மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்றால் நாடு முழுவதும் என்ன நடந்திருக்கும்? பாஜக எப்படி வெற்றி பெற்றிருக்கும் என்பதை நம்மால் எளிதில் உணர முடியும். ‘30, 40 பேர் இடைவிடாமல் ஆறு மாதங்கள் வேலை செய்து பெயர்கள், முகவரிகள், படங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். இப்போது எங்களிடம் நூறு விழுக்காடு ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன’ என்று ராகுல் காந்தி கூறியதுடன் பத்திரிகையாளர்கள் முன் ஆதாரங்களைத் திரையிட்டுக் காட்டினார். மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்தியத் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்குப் போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரியின் கதவு எண் ‘0’ என்று இருக்கிறது.
ஒரே முகவரியில் பலர் என்ற அடிப்படையில் 10,452 வாக்காளர்களும், போலி புகைப்படத்துடன் 4,132 வாக்காளர்களும் உள்ளனர். ஒரு வாக்காளரின் பெயர் பல மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் உள்ளது. மகாதேவபுரா தொகுதியிலுள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் குர்கிராத் சிங் டாங் என்ற ஒரே வாக்காளரின் பெயர் உள்ளது. வாக்காளரின் தந்தை பெயர் dfigoidf என்று உள்ளது என்றால் இது எத்தகைய தில்லு முல்லு என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஓர் அறை கொண்ட வீட்டில் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 80 வாக்காளர்களின் பெயர் இருந்தது. புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6இல் 95,96,98 வயதானவர்களின் பெயர்களில் வாக்காளர் அட்டைகள் உருவாக்கப்பட்டு 33,692 வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் தரவுகள்தாம். ‘தேர்தல் ஆணையம் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள், மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும்’ என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அவற்றை வழங்க வேண்டும். ராகுல்காந்தி வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் முறையான பதில் அளித்தே ஆக வேண்டும். தவறும்பட்சத்தில் இந்த தில்லுமுல்லுகளுக்குக் காரணமான தேர்தல் அதிகாரிகள், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக தேர்தல் ஆணையத்தையும் தங்களது கைப்பாவையாக வைத்து இந்தத் தில்லு முல்லு வேலைகளில் இறங்கியுள்ளது. நேர்மையற்ற முறையில் வென்று பதவி வகிக்கும் பிரதமர் மோடி பதவி விலகுவதுடன் பாஜக ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் நீடிக்க இவர்களுக்கு எந்தத் தார்மிக உரிமையும் இல்லை. நீதிமன்றம் தலையிட்டு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
இதை ஒரு நிகழ்வாகக் கடந்து விடாமல் அறிக்கைகள், விவாதங்கள் என்று சிலநாள் சலசலப்புகளுடன் அடங்கி விடாமல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் போராட்டமாகப் பெருமளவில் இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் சென்று இந்த ஓட்டுத் திருடர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். EVM மூலம் தேர்தல் முறைகேடு நடப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வரும் சூழலில் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்துவதற்கு இச்சூழலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.