மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஜனநாயக அமைப்பைச் சீர்குலைக்கும் முயற்சி
வி.எஸ். முஹம்மத் அமீன், செப்டம்பர் 1-15, 2025


2025 ஜூலை 21ஆம் நாள் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் கூச்சல் குழப்பத்துடன் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் கூட்டத் தொடரின் பெரும்பாலான நாள்கள் முடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடைபெற்ற இரு நாள்கள் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் வைத்த எந்தக் கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்(குஐகீ) குறித்த விவாதங்களும் நாடாளுமன்றத்தை முடக்கியது.

இதற்கிடையில் வருமான வரி சட்டத்திருத்த மசோதா, மணிப்பூர் மாநில சரக்கு, சேவை வரி மசோதா, இந்தியத் துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சில மசோதாக்களுக்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களைவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல், முறைப்படுத்துதல் மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்றது. எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்த பிறகு கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் இத்தடைச் சட்டம் வரவேற்கத்தக்கது. இத்தடைச் சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கும், ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் போன்றவர்களுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்கான தடையில் ஓட்டைகளை ஏற்படுத்தி இந்த விளையாட்டுகள் மறைமுகமாகத் தொடரா வண்ணம் சட்டம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை 30 நாள்களுக்குள் பதவி நீக்கம் செய்யப்படும் 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025 கடும் எதிர்ப்புக்கு உள்ளானதுடன் இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு(ஒகஇ) அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைப்புகளான ED, NIA, வருமான வரித்துறை போன்றவை எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்க தவறாகப் பயன்படுத்தப் பட்டதைப் போலவே தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை வீழ்த்துவதற்காகவே பாஜக இந்த மசோதாவைக் கையிலெடுத்துள்ளது. ஜனநாயக அமைப்பைச் சீர்குலைக்கும் இதுபோன்ற முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்காக ஜனநாயக சக்திகளின் ஒருமித்த குரல் வலுவாக எழவேண்டும். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் இதனை எதிர்க்க வேண்டும். ஜனநாயக அமைப்பு சீர்குலைந்தால் மக்களாட்சிக்குப் பதில் காவல் அதிகார ஆட்சிக்கு (Police State) இந்தியா தள்ளப்பட்டு விடும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்