மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வரலாறுதான் இவர்களை விடுவிக்குமா?
வி.எஸ். முஹம்மத் அமீன், செப்டம்பர் 16-30, 2025



பாஜக அரசால் UAPA கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர், குல்ஃபிஷா ஃபாத்திமா, காலித் சைஃபி, தாஹிர் ஹுஸைன், ஷிஃபாவுர் ரஹ்மான், தஸ்னீம், சலீம் கான் ஆகியோரின் பிணை மனுக்களை 2025 செப்டம்பர் 02ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட (CAA) எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் வெடித்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். மாபெரும் சதியின் ஒரு பகுதி இந்தக் கலவரம் என்றும் இதனைத் தூண்டியது உமர் காலித் உள்ளிட்ட மாணவர் தலைவர்கள் என்றும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

‘இன்குலாபி  சலாம்’,  ‘கிராந்திகாரி  இஸ்திக்பால்’  (புரட்சிகர வாழ்த்துகள்) என்ற சொற்களைப் பயன்படுத்தியதைத்தான் குற்றமாக நீதிபதிகள் எடுத்துரைத்தனரே தவிர இவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் சர்ஜீல் இமாம் போராட்டத்தின் போது Chaka Jam என்று சாலை மறியலுக்கு வித்திட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒரு வழக்கில் உமர் காலிதுக்கு ஏப்ரல் 2021இல் பிணைகிடைத்தது. வன்முறையின்போது உமர் காலித் அங்கு இல்லை என்பதையும், வன்முறையில் அவர் ஈடுபட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அவருக்கு எதிராக இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. பிணை வழங்கும்போது, ‘இந்த வழக்கில், முழுமையடையாத விஷயங்களின் அடிப்படையில், உமர் காலித் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் கூறியது. ஆனாலும் இரண்டாவது வழக்கில் அவர் மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் அவரது பிணை மனுவை இதற்கு முன் இரண்டு நீதிமன்றங்கள் நிராகரித்து உள்ளது. 2023ஆம் ஆண்டில் உமரின் மனுமீது ஒரு நாள் கூட விசாரணை நடத்தப்படவில்லை.

சஃபூரா சர்கார் 2020 ஏப்ரல் 13 அன்று கைது செய்யப்பட்டபோது அவர் 13 வாரக் கர்ப்பிணியாக இருந்தார். இருந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 2020இன் FIRகள் 83, 50 போன்ற பல வழக்குகளில் குல்பிஷா மீது FIR பதிவு செய்துள்ளனர். FIR 58 தொடர்பான ஒரு வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தாலும் க்அகஅ வழக்கு உட்பட மற்ற வற்றில் அவரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இரட்டை நீதி வழங்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு  சிறையிலடைக்கப்பட்ட  பாஜக  முன்னாள் MP  பிரக்யா  சிங் தாக்குர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேரும் ‘ஐயங்களால் மட்டுமே வழக்கை முன்னோக்கிக் கொண்டு சென்று விட முடியாது’ என்று கூறி NIA சிறப்பு நீதிமன்றத்தால் 2025 ஜூலை 30ஆம் நாள் விடுவிக்கப்பட்டனர்.

அன்வே நாயக் தற்கொலை வழக்கில் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை பிணையில் விடுவிக்கக் மும்பை உயர் நீதிமன்றம் மறுத்த போது உச்சநீதிமன்றம் அவசர வழக்காக, முதல் வழக்காக எடுத்து அர்ணாப் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கியது.

ஆசிபாவை வன்புணர்வு செய்து கொலை செய்த கொலைகாரர்களுக்கும், பிரக்யாசிங்கிற்கும் விடுதலை வழங்கி, அர்ணாப் கோஸ்வாமிக்காக பிணை வழங்கிய நீதிமன்றம்தான் குற்றம் நிரூபிக்கப்படாத நிராபராதிகளான நாட்டுப்பற்று மிக்க மாணவர் தலைவர்களுக்கு நீதியை மறுத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக உமர் காலித் உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான மாணவர் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி அனைத்து சமூக செயற்பட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும்.

பீமா கோரேகான் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பழங்குடியின உரிமைப் போராளி பாதிரியார் ஸ்டான் சுவாமி சித்ரவதைக்கு உள்ளாகி சிறையிலேயே உயிரிழந்தைப் போல, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான ஜி.என். சாய்பாபா போலி வழக்குகளால் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் கொடும் சித்ரவதைகளை அனுபவித்து பல நோய்களுக்கு ஆளாகி உயிரிழந்ததைப் போல இவர்களின் நிலையும் ஆகிவிடக் கூடாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்