மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

அரசியல்

தீவிரவாதத்திற்கு இந்த மண்ணில் இடமில்லை!
நவம்பர் 16-30


கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23ஆம் நாள் அதிகாலையில் மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரிலுள்ள எரிவாயு உருளை வெடித்ததாகக் கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் காரில் வெடிபொருள் இருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கு இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுடனும், ஐஎஸ் தீவிரவாதிகளுடனும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடையை ஆறு பேரை சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு(UAPA) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன், இந்த வழக்கை ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமை(NIA) விசாரிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. அதனடிப்படையில் இந்த வழக்கு NIAவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறை துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதும், இந்தப் பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் தந்ததும் பாராட்டுக்குரியது. இச்சம்பவத்தை முன்வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது பெரும்பழியைச் சுமத்தி, சோதனை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிப்பதையும், கோவையை பதட்டத்தில் ஆழ்த்தி அரசியல் அறுவடை செய்யக் காத்திருந்த வகுப்புவாத சக்திகளின் தீய எண்ணமும் இதன் மூலம் முடிவுக்கு வந்தது.

தீவிரவாதச் செயலுக்கு இஸ்லாத்தில் இம்மியளவும் இடமில்லை. ’தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாயினும் அவர்களுக்கு இங்கு இடமில்லை' என்று கோவை ஜமாஅத்தினர் அறிவித்ததுடன் முபீனின் உடலை அடக்கம் செய்வதற்கும் மறுத்தனர். கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன் கோவையில் பதட்டத்தைத் தணிக்கவும், இயல்பான சூழ்நிலையைக் கொண்டு வரவும் உண்மைக் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவும் பல்வேறு ஒத்துழைப்புகளை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் வழங்குவதாக அறிவித்தது.

இது போன்ற செயல்களில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்கவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் முஸ்லிம் சமுதாயத்தினர் முன்வந்ததைப் போல இந்துத்துவவாதிகள் செய்யும் வெறுப்புச் செயலையும், வன்முறைகளையும் இந்துமதத் தலைவர்கள் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஜமேஷா முபீன் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு NIA அமைப்பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். NIA விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் தொடர்ந்து NIAவின் கண்காணிப்பு வட்டத்துக்குள்ளேயே இருக்கும்போது ஜமேஷா முபீன் இத்தகைய வன்முறைச் செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜமேஷா முபீனை NIA கண்காணிக்கவில்லையா? அல்லது மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிந்தே இந்தக் குற்றம் நடைபெற்றுள்ளதா? என்ற கேள்வி பலதரப்பிலிருந்தும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. ஒன்றிய ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் NIA கலைக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்துவரும் நிலையில் இந்த வழக்கை NIA சரியான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில் ஐயத்தின் பேரில் அப்பாவிகள் கைது செய்யப்படக் கூடாது.

கோவையை மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த நாட்டையும் தீவிரவாதிகளிடமிருந்தும், தீவிரவாதச் செயல்களின் மூலம் ஆதாயம் அடையத் துடிப்பவர்களிடமிருந்தும் காக்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்