மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மருத்துவத்தைக் காப்பாற்றுவோம்
16-31 டிசம்பர் 2022


சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மாணவி பிரியா, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான பிரியாவின் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பிற்காக கொளத்தூர் பெரியார் நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் நவம்பர் 7ஆம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். காலில் இறுக்கமாகக் கட்டுப் போடப்பட்டு உரிய நேரத்தில் கட்டு அவிழ்க்கப்படாததால் இரத்தம் உறைந்து சவ்விலிருந்த திசுக்கள் அழுகிவிட்டன. உடனடியாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியாவைக் கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் காலை உடனே அகற்றினர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா நவம்பர் 15ஆம் நாள் உயிரிழந்தார்.

இது குறித்த விசாரணையில் முதலில் மருத்துவம் செய்த மருத்துவர்கள் கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகியோரின் கவனக் குறைவால் இந்த மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. சந்தேக மாரணம் என்ற பிரிவிலிருந்து கவனக் குறைவால் மரணம் விளைவித்தல் ( IPC-304A ) என்ற பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற மரணங்கள் சிவில் நெக்லிஜென்ஸ் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால் இங்கு கிரிமினல் நெக்லிஜென்ஸாக வழக்கு பதியப்பட்டதால் மருத்துவர்களைக் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று கூறி மருத்துவர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த மரணத்தைத் தொடர்ந்து எழுந்த பல கண்டனக் குரல்களையடுத்து மருத்துவத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தணிக்கை செய்வதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது வரவேற்கத்தக்க முடிவு என்றாலும் இது மட்டுமே தீர்வாகாது. மருத்துவர்களுக்கான சுய பொறுப்பை உணர்த்துவதுடன், அவர்களுக்கான கட்டமைப்பையும், போதிய வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அதுபோல சமூக ஊடகங்களின் வழியாக மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் போக்கு அதிகரித்துள்ளது. சில தவறான வழிகாட்டுதல்களினால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாற்று சிகிச்சை என்ற பெயரில் பாரம்பரிய சிகிச்சை, இயற்கை வைத்தியத்தின் பக்கம் மக்கள் செல்லத் தலைப்பட்டுவிட்டனர். முறையாக வைத்தியம் படிக்காத பல போலிகளும் இதில் உள்ளே நுழைந்துவிட்டனர். இதனால் உடல் எடைக் குறைப்பு, உணவுக் கட்டுப்பாடு போன்ற சிகிச்சை முறைகளில் பலர் பெரும்பாலான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுபோல போலி மருத்துவர்கள், காலாவதியான மருந்துகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளன. அண்மையில் இந்தியாவிலிருந்து காம்பியாவிற்கு அனுப்பப்பட்ட இருமல் மருந்தினால் 89 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரைக் காப்பதற்கான மருத்துவமே உயிரைப் பறித்துவிடும் அபாயத்திலிருந்து காப்பாற்ற உரிய கூடுதல் கவனத்தை அரசு செலுத்த வேண்டும். மருத்துவத்துறையின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைக் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும். மருத்துவர்களும் மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமே கருதாமல் உயிர்காக்கும் உன்னதக் கடமையென உணர்ந்து சுய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்