மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

சிந்தனை நாற்றத்தை எப்படித் துடைத்தெறியப் போகிறோம்?
16-31 ஜனவரி 2023


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வேங்கைவயலில் உள்ளது. அத்தொட்டியைச் சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இறையூர் கிராமத்தில் உள்ள ஐயனார் கோவிலில் பட்டியலின மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த மூக்கையா நடத்தும் தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதையும் அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பட்டியலின மக்களை ஐயனார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிங்கம்மாள் என்பவர் சாமியாடும் போர்வையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என்று இழிவாகப் பேசியுள்ளார். உடனடியாக சாமியாடி சிங்கம்மாள், தேநீர் கடை உரிமையாளர் மூக்கையா, அவர் மனைவி மீனாட்சி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே வேளையில் குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூர மனம் கொண்ட சாதி வெறியர்கள் ஒரு வாரமாகியும் கைது செய்யப்படவில்லை. மனித அறமற்ற இச்செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியில், பெரியார் மண்ணில், சமூகநீதிக்கான விழிப்பு உணர்வு முழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன் திண்ணியம் கிராமத்தில் பட்டியலினத்தவர் வாயில் திணித்த மலத்தை இன்று தண்ணீரில் கலந்திருக்கின்றார்கள். சிந்தனையில் ஊறிய சாதிய முடைநாற்றம் மாறவில்லை. "சாதிதான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' என்றார் அம்பேத்கர். இப்போது நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றது.

அரசு தரும் தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 2009 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் 27.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கின்றது.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, இரட்டைக் குவளை, தனிச் சுடுகாடு, சுடுகாட்டிற்குப் போக தனிப் பாதை, தீண்டாமைச் சுவர், பட்டியலினத்தவர் சமைத்த உணவை உண்ண மறுத்தல், பட்டியலினக் குழந்தைகளைக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துதல், அவர்களைப் பள்ளி வகுப்பறையில் தனியாக உட்கார வைத்தல், பொதுக் கோவிலில் நுழைய விடாமல் தடுத்தல், பறை அடிக்க கட்டாயப்படுத்துதல், பட்டியலின முதியவர்களைக்கூட மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைத்தல் என்ற இந்த சாதியக் கொடுமைகளின் வடிவங்கள்தான் எத்தனை எத்தனை?

கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்ட இராமையாவின் குடிசையில் கருகிச் செத்த உயிர்களாகட்டும், ஆணவப் படுகொலையில் வெட்டி எறியப்பட்ட தலைகளாகட்டும் இந்த சாதி வெறிக்கு எத்தனை எத்தனை உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தச் சாதிய வன்கொடுமைகளுக்குத் தீர்வுதான் என்ன? பிறப்பின் அடிப்படையில் சக மனிதனை இழிவாகக் கருதும் இழி சிந்தனையை எப்படி மாற்றப் போகிறோம்?

பட்டியலினத்தவர் கல்வி கற்பதனால், ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்வதனால் இத்தகைய சாதிய இழிவுகளிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்களின் வளர்ச்சிக்கு மாவட்டத்திற்கு ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அரசு ஆணை பிறப்பிப்பதனால் இந்தச் சாதிய அழுக்குகளை அகற்றிவிட முடியுமா என்ன?

இந்த இன இழிவு நீங்க வேண்டுமெனில் சிந்தனை மாற்றம் நிகழ வேண்டும். சிந்தையில் படிந்துள்ள நாற்றத்தைத் துடைத்தெறிய வேண்டும். எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம். எல்லாரும் ஓர் நிறை. எல்லாரும் ஒரே இறைவனின் படைப்புகள். எல்லாருக்கும் ஆதிப்பெற்றோர் ஒருவரே! என்ற ஓரிறைத் தத்துவத்தை ஆய்ந்தறிய வேண்டும். அந்த ஓரிறைக் கொள்கை உருவாக்கிக் காட்டிய சாதிகளற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் இன்றும் நம் கண்முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதுகுறித்தும் விருப்பு வெறுப்பற்று நாம் அறிந்து தெளிய வேண்டும். இன இழிவு நீங்க இது ஒன்றே தீர்வு.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்