உலகிலுள்ள தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மோசடிகளை ஆய்வு செய்து அம்பலப்படுத்துகிற அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து 88 கேள்விகளை முன்வைத்து 106 பக்கங்களுக்குக் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறது. முறைகேடாகப் பங்குகளைக் கையாளுதல், கணக்கு மோசடி போன்ற தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்க முடியாத அதானி குழுமம் 413 பக்கப் பதிலில் ’இந்தியாவின் வளர்ச்சி, இலட்சியத்தின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்' என்று திசைதிருப்ப முயற்சித்துள்ளது.
பிப்ரவரி 2ஆம் நாள் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் விளக்கம் கேட்டபோது பிரதமர் மோடி உரிய விளக்கமளிக்காமல் ’நேரு குடும்பத்தினர் காந்தியின் பெயரை பின்னொட்டாக இணைப்பது ஏன்?' என்று தொடர்பில்லாமல் பேசினார். ஹிண்டன் பர்க் அறிக்கை மீது நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.
நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த 13 ஆண்டுகளில் குஜராத் அதானியின் வசமாகியது. 2014 முதல் 19 ஆண்டுகளில் அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு 50,004 கோடியிலிருந்து 1,10,100 கோடியாக 121% உயர்ந்தது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 313ஆவது இடத்திலிருந்த அதானி 12ஆவது இடத்திற்கு முன்னேறினார். ஒன்பது ஆண்டுகால (2014 முதல் 2023) மோடி ஆட்சியில் அதானியின் சொத்து 183% அதிகரித்து 12,00,000 கோடியாக உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2015 முதல் 2019 வரையிலான 6 ஆண்டுகளில் 4.86 இலட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறையின் சொத்துகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. மோடி தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்களில் அதானியை அழைத்துச் சென்று நாட்டுக்குக் கிடைக்க வேண்டியவற்றை அதானிக்கு மாற்றிக் கொடுத்தார். 2014ஆம் ஆண்டு இந்திய இரயில்வேக்குக் கிடைக்க வேண்டிய ஆஸ்திரேலியாவின் 200 கி.மீ இரயில் திட்டம், 2015ஆம் ஆண்டு இந்திய அனல்மின் கழகத்திற்குக் கிடைக்க வேண்டிய வங்கதேசத்தின் 36,000 கோடி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம், 2016ஆம் ஆண்டு கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய ஜப்பானின் ஆட்டோமொபைல் சரக்கு இரயில்களை இயக்கும் ஒப்பந்தம், 2017இல் மலேசியாவின் துறைமுகத் திட்டம் அனைத்தையும் அதானி குழுமத்திற்குச் சேர்த்து பெரும் சேவகம் செய்தார் பிரதமர்.
குஜராத்தின் முந்த்ரா பகுதியில் துறைமுகம் கட்டுவதற்காக 14,000 ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு குஜராத் அரசு கொடுத்ததை ஒரு சதுர மீட்டர் 600 ரூபாய்க்கு அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அதானி வாடகைக்கு விட்டார். எஸ்பிஐ வங்கி ரூ.22,000 கோடியும், பஞ்சாப் நேசனல் வங்கி ரூ.7000 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.7000 கோடியும் அதானி நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கியுள்ளது. இவையெல்லாம் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படும்.
வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்து நாட்டை திவாலாக்கிக் கொண்டிருக்கும் இந்திய பிரதமர் யாருக்கானவர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நாட்டு மக்களின் மீது அக்கறையற்ற வகுப்புவாத ஃபாசிஸத்தின் கையில் ஆட்சி அதிகாரம் சென்றால் நாடு என்னவாகும் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் எதுவுமில்லை.