மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்அரசியல்

வெறுப்பு வணிகர்களின் வதந்தி அரசியல்
16-31 மார்ச் 2023


ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உ.பி, இராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் சாலை, கட்டடம், ஜவுளி, உணவகங்கள் போன்ற பல்வேறு பணிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள்.

அதுபோல வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வணிக முதலாளிகளாகக் காலூன்றியவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றார்கள். மறுபுறம் இரயில்வே, வங்கிகள், தபால் துறை, தொலை தொடர்புத்துறை போன்ற மத்திய அரசுத் துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் மட்டுமே இங்கு ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.

வடமாநிலத்தவர்கள் தங்களுக்கான வேலைகளைப் பறித்துக் கொள்வதாகவும், இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இவர்களால் ஹிந்தி மொழியின் தாக்கம் அதிகரிப்பதாகவும், விட்டால் இவர்கள் இங்குள்ள வாக்காளர்களாகி விடுவார்கள் என்றெல்லாம் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து செய்திகளாகவும், கேலி வீடியோக்களாகவும் அண்மைக்காலமாக வலைதளங்களில் பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டியடித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலானது. ஆனால் அது தேநீர் கடையில் நடந்த சாதாரண தகராறு என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

ஹிந்தி பேசியதற்காக 12 வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டதாகவும், 15 தொழிலாளர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாகவும் உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் உமாராவ் கடந்த வாரம் டுவிட்டரில் பதிவிட அந்தச் செய்தியை டைனிக் பாஸ்கர் இந்தி நாளிதழ் வெளியிட விவகாரம் பற்றிக்கொண்டது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ட்வீட் செய்திருந்தார். பீகார் சட்டப் பேரவையில் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பியபோது அம்மாநில துணைமுதல்வர் தேஜஸ்வி, இந்தப் பொய்ச்செய்தி திட்டமிட்டு பரப்பப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட விளக்கங்களைப் பதிவு செய்து பாஜகவின் வதந்தி அரசியலைத் தோலுரித்துக் காட்டினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை அலைப்பேசியில் தொடர்புகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதுடன் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கடிதமும் எழுதியுள்ளார். அக்கடிதத்தை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு நிதிஷ்குமாரிடம் வழங்கினார்.

வதந்தியை பரப்பிய பீகாரைச் சார்ந்த சிபிஎல் மீடியா ரூபேஷ்குமார், அமன் குமார் கைது செய்யப்பட்டதுடன் தன்வீர் போஸ்ட்டின் தன்வீர் உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உ.பி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காக பொய், வெறுப்பு, துவேஷம், வன்மம் கொண்டலையும் பாஜக இப்போது வதந்தி அரசியலையும் கையிலெடுத்துள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வகுப்புவாதிகளின் உண்மை முகத்தை உற்றுநோக்கி விழித்துக் கொள்ள வேண்டிய தருணமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்