மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தி குஜராத் ஸ்டோரி
16-31 மே 2023


காணமால் போனது 32 ஆயிரம் பெண்கள் அல்ல, நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பெண்கள்! தொலைந்தது கேரளாவில் அல்ல. இரட்டை என்ஜீன் ஆட்சி, குஜராத் மாடல் என்று பாஜக ஆட்சியின் முன்மாதிரியாகச் சொல்லப்படுகின்ற குஜராத்தில்..! இந்தத் தரவுகள் வன்மத்தில் புனையப்பட்ட போலியான தகவல் அல்ல. NCRB தருகின்ற புள்ளி விவரம். இது தி கேரள ஸ்டோரி சினிமா அல்ல. உண்மையான தி குஜராத் ஸ்டோரி.

2016  2020ஆம் ஆண்டு வரை குஜராத்தில் 41,621 பெண்கள் காணாமல் போனதாகத் தேசிய குற்றப் பதிவு காப்பகம்(NCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் படி, குஜராத் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டில் 7,712 பெண்களும், 2018ஆம் ஆண்டில் 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டில் 9,268 பெண்களும், 2020ஆம் ஆண்டில் 8,290 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.

201920ஆம் ஆண்டில் மட்டும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அஹமதாபாத், பிரதமர் நரேந்திர மோடி தொகுதியான வதோதரா பகுதிகளில் இருந்து 4,722 பெண்கள் தொலைந்து போயிருக்கின்றார்கள். இது 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட விவரம். "இது போன்ற வழக்குகள் கொலையை விடத் தீவிரமானவை. சிறுமிகள், பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாகக் கையாளவில்லை' என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா குற்றம் சாட்டுகிறார். பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்ற திட்டத்தில், ஒலிம்பிக்கில் 2016இல் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 26 ஆகஸ்ட் 2016 அன்று இத் திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் பதக்கம் வென்ற தங்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று சாக்ஷி மாலிக், டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஏப்ரல் 23ஆம் தேதி முதல் இரவு, பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் போராடி வருவதன் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு பாஜக ஆட்சியில் என்னவாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

20162019 காலகட்டத்தில் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.446.72 கோடியில் 78.91 விழுக்காடு விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப் பட்டதாக பார்ல் கமிட்டி தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிக் கொண்டிருப்பது நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. கவர்ச்சிகரமான முழக்கங்களாலும், விளம்பரங்களாலும் பெண்குழந்தைகளைப் பாது காக்க இயலாது. பிரிஜ் பூஷன் சரண் சிங் போன்ற பெண்கள் மீது வன்மம் கொள்பவர்களின் மீது உண்மையான நடவடிக்கை எடுப்பதன் மூலமும், மத இன வேறுபாடின்றி அனைத்து பெண்களுக்கும் உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்குவதன் மூலமும்தான் பெண் களைப் பாதுகாக்க முடியும். குஜராத் மாடலை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பு இங்கு ஒருபோதும் சாத்தியமில்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்