மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

விழுமம் சார்ந்த கல்விக் கொள்கையை எப்போது வகுக்கப்போகிறோம்?
1-15 June 2023


தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை உயர்நிலைக் குழுவின் ஒருங்கிணைப் பாளரான ஜவஹர் நேசன் அக்குழுவிலிருந்து விலகியுள்ளார். இக்குழு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக ஜவஹர் குற்றம் சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை மறுத்து உயர்நிலைக் குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் "அனைத்துக் குழந்தைகளும் அச்சமில்லாத சூழலில் கல்வி கற்கும் நிலையை உருவாக்குவதுதான் புதிய கல்விக் கொள்கையின் பிரதான நோக்கம்.

அந்த வகையில் ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமான முறைகளில் தன் படைப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையே இந்தக் குழு கவனம் கொள்கிறது' என்று பதிலளித்திருக்கிறது. ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை ஆபத்து நிறைந்ததாகவும் குருகுலக் கல்வியைப் புகுத்த முனைவதாகவும் குற்றம் சாட்டிய திமுக அரசு அதற்கு மாற்றமான மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காகவே இந்த உயர்நிலைக் குழுவை அமைத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மாநிலக் கல்விக் கொள்கை முறையாக வகுக்கப்படவில்லை என்பதுடன் இல்லம் தேடிக் கல்வி போன்ற புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டை வெறுமனே புறம்தள்ளிவிட முடியாது. தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். புதிய தேசியக் கொள்கையின் தீய அம்சம்கள் எவ்வகையிலும் இதில் ஊடுருவாமல் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அச்சமில்லாத சூழலில் கல்வி கற்கும் நிலை அவசியம் எனினும் விழுமம் சார்ந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கற்றவர்கள்தாம் இன்று பெருமளவில் இலஞ்சம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றார்கள்.

கல்வியாளர்களையும், கல்வி நிலையங்களையும் ஒழுக்கச் சீர்கேடுகள் சூழ்ந்து நிற்கின்றன. கல்வி முழுக்க முழுக்க வணிகமாக்கப்பட்டு பெரும் சந்தையாக மாறிவிட் டது. இச்சூழலில் ஒழுக்கம் சார்ந்த, நீதியையும் நற்பண்பையும் மையப்படுத்திய கல்வித் திட்டமே அவசியமாகிறது. ஒழுக்கமற்ற கல்வியால் சமுதாயமும் நாடும் பயனடைவதை விட பாழடைவதுதான் அதிகம். எனவே ஒழுக்கம் சார்ந்த விழுமம் நிறைந்த கல்விக் கொள்கையே இன்றைய அத்தியாவசிய அவசரத் தேவை.

மனித மாண்புகளை வார்த்தெடுக்கின்ற, சேவை மனப்பான்மையை வளர்த்தெடுக்கின்ற, தமது திறமைகளையும் ஆற்றல்களையும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்கின்ற கல்வியாளர்களை விழுமம் சார்ந்த கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும். தமிழ்நாடு அரசு அறம் சார்ந்த கல்விக் கொள்கையை விரைந்து வகுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டை உண்மையான சமூக நீதியின் பூமியாகக் கட்டியெழுப்ப முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்