மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

எல்லாருக்கும் எதிரான பொது சிவில் சட்டம்
July 16 -31 2023


2023 ஜூன் 27ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, 'பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றோர் உறுப்பினருக்கு வேறொரு சட்டமும் இருந்தால் அந்தக் குடும்பத்தை நடத்த முடியுமா? இந்தக் கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். இரண்டுவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்' என்று குறிப்பிட்டார்.
 
மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் நியாயம் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதனுடைய அபாயத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தினர் வாழும் நாட்டில் பொது சிவில் சட்டம் சாத்தியமற்றது. நம் நாட்டில் 98 விழுக்காடு சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகத் தான் உள்ளன. குற்றவியல் சட்டங்கள் எல்லாருக்கும் பொதுவானதுதான். சிவில் சட்டத்திலும்கூட ஒப்பந்தம், சொத்துப் பரிமாற்றம், சாட்சியம் அளிக்கும் சட்டம் எல்லாருக்கும் பொதுவானவைதான். திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், பாகப்பிரிவினை, நன்கொடை அளித்தல், வக்ஃப் ஆகியன தான் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனியாக இருக்கின்றன.
 
தனியார் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் இருப்பதைப்போல் இங்குக் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் இந்து திருமணச் சட்டங்கள், கிறித்தவ தனியார் சட்டம், ஃபார்ஸி போன்று 300க்கும் மேற்பட்ட பிரிவினருக்குத் தனியார் சட்டங்கள் இருப்பதுபோல்தான் முஸ்லிம்களுக்கு தனியார் சட்டம் இருக்கின்றது. பிரிவு 371A முதல் 3711 வரைக்கும் மராட்டி, குஜராத், நாகாலாந்து, மிசோரம், சிக்கிம், கோவா போன்ற பல மாநிலங்களுக்குத் தனியாகச் சட்டங்கள் உள்ளன.
 
பழங்குடியினருக்கென்று தனியார் சட்டங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் பன்மைச் சமூக நாட்டின் பெருமைமிகு அடையாளங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனியார் சட்டங்கள் இருப்பதால் இந்த நாட்டில் இதுவரை எந்தக் குழப்பமும் இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்தியா பொது சிவில் சட்டத்திற்கான தேவை இல்லாமல் தான் இருந்தது. இப்போதும் அதற்கான தேவை எதுவும் இல்லை.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பெரும் பான்மை இந்துக்களைக் கவர்ந்துவிடலாம் என்ற தீய எண்ணத்துடன் பாஜக பொது சிவில் சட்டப் பூச்சாண்டியைக் கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே 1970, 1985ஆம் ஆண்டுகளில் பொது சிவில் சட்டப் பிரச்சினை எழுந்து அடங்கியது. 2016ஆம் ஆண்டு எழுந்த பொது சிவில் சட்டப் பிரச்சினையின் போது 21ஆவது சட்ட ஆணையம் பொது மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்து 'பன்முகத் தன்மை கொண்ட நம் இந்திய நாட்டுக்குப் பொது சிவில் சட்டம் தேவையில்லை' என்று 2018ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.
 
ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, வழிபட, பரப்புரை செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளபோதும், வழிகாட்டு நெறிமுறை 44ஐ நடைமுறைப்படுத்தத் துடிப்பது தேவையற்றது. பிரிவு 45 அனைவருக்கும் இலவசக் கல்வியையும், பிரிவு 47 மதுவை முற்றாகத் தடை செய்வதையும் பேசுகிறது. பிரிவு 44 இல் காட்டும் அக்கறையை 45, 47இல் காட்டினால் அது நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.
 
'பிரிவு 44ஐ நடைமுறைப்படுத்துவதற்காக எந்த அரசும் தன் அதிகாரத் தைப் பயன்படுத்தி முஸ்லிம்களை அச்சமடையச் செய்யும் வகையில் செயலாற்றக் கூடாது. அவ்வாறு செயலாற்ற முனைந்தால் அது புத்தி சுவாதீனமற்ற அரசாகத்தான் இருக்கும்' என்று 1948 டிசம்பர் 2ஆம் நாள் பொது சிவில் சட்ட விவாதத்தை நிறைவு செய்யும் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் கூறியதைப் பிரிவு 44ஐ நடைமுறைப்படுத்தக் கோருவோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
இஸ்லாம் என்பது வழிபாடுகளுடன், சடங்குகளுடன் முடிந்து விடுகின்ற மதம் அல்ல. வாழ்க்கை முழுமைக்குமான வழிகாட்டுதல்களை இறைவன் வழங்கியுள்ளான். தொழுகைக்கு எப்படி வழிகாட்டப்பட்டுள்ளதோ அதுபோலவே திருமணம், விவாகரத்து, பாகப் பிரிவினை யாவும் மார்க்கத்தின் ஒரு பகுதியே எனவே முஸ்லிம்கள் பொதுவான சட்டத்தைப் பின்பற்றுவது ஒருகாலும் சாத்தியமில்லை.
 
பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், சுயமரியாதைத் திருமணம் செய்பவர்கள் போன்ற எல்லாருக்கும் எதிரானது தான். எனவே நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது சிவில் சட்டத்தையும், இதனைக் கொண்டுவரத் துடிப்பவர்களையும் எதிர்த்து நிற்க வேண்டும். நாட்டைத் துண்டாட நினைக்கும் வகுப்பு வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டும் என்றால் நியாயத்தின் குரல் உரத்து எழ வேண்டும்.

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்