2023 மே 3ஆம் நாள் பற்றி எரியத் தொடங்கிய மணிப்பூர் நெருப்பு இரண்டரை மாதங்களைக் கடந்தும் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புத் தீ இப்போது மிசோரமிற்கும் பரவியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவைக்கான தடை தளர்த்தப்பட்டதும் மணிப்பூரில் அரங்கேறிய அவலம் வெளியுல கிற்குத் தெரியவந்தது. மே 4ஆம் தேதி இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வீதியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ 76 நாள்களுக்குப் பிறகு ஜூலை 20ஆம் தேதி வெளியாகி இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 'இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றமே இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும்' என்று எச்சரித்தார். இத்தனைக்குப் பிறகுதான் நாட்டின் பிரதமர் மோடி 30 விநாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசினார். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து இதுவரை ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 62 நாள்களுக்கு முன்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது. ஆனால் மணிப்பூர் முதல்வரும், இந்தியப் பிரதமரும் இப்போதுதான் கேள்விப்படுவதாகக் காட்டிக் கொள்வது எத்தனை வெட்கக்கேடு. உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நேரடியாகச் சென்றபோது அங்குள்ள நிலைமையை அவர் அறியவில்லை எனில் மாநிலத்திலும், ஒன்றியத்திலும் பாஜக ஆட்சி முழுமுற்றாகத் தோல்வியடைந்துவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. பிரதமரும், மாநில முதல்வரும் இந்தக் கேடுகெட்ட மிருகத்தனத் திற்காக 3 தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும்.
'நாட்டைக் காப்பாற்ற இராணுவத்தில் பணிபுரிந்தேன். என்னுடைய மனைவியைப் பாது காக்க ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையே' என்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் மனக்குமுறலுக்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது? மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சைகோட்டை தொகுதி பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் பேசியுள்ளார். 10 எம்.எல்.ஏக்கள் கடந்த மே மாதம் கடிதம் எழுதியிருக்கின்றார்கள். இப்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு நாடாளுமன்ற அவைகள் முடங்கிப் போய் உள்ளன.
செய்தி முகமையான ஏ.என்.ஐ இந்த கேடுகெட்ட இழிசெயலில் அப்துல் ஹலீம் என்ற முஸ்லிம் கைது செய்யப்பட்டதாக பொய்த் தகவலை ட்வீட் செய்துவிட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளது. அதற்குள் முஸ்லிம்களைக் குறித்த இந்த வன்மத்தை என்.டி.டி.வி, புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிட்டன. வெறுப்பின் நெருப்பு நாட்டைச் சூழ்ந்துள்ள இச்சூழலில் மணிப்பூரை காப்பாற்றுவதற்கும், இந்தியாவின் மகள்களைப் பாதுகாப்பதற்கும் ஒரே வழி ஃபாசிஸ ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.