மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

இந்த வெட்டுக்காயங்களுக்கு என்னதான் மருந்து?
வி.எஸ்.முஹம்மத் அமீன், September 1 - 15, 2023


17. Sep 1-15, 2023_page-0006.jpg

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவிலுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த +2 மாணவர் சின்னத்துரையை உடன்படிக்கும் மாணவர்களே ஆகஸ்ட் 9ஆம் நாள் இரவு வீடுதேடிச் சென்று சாதிவெறியால் சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இவர்களைப் பார்த்த உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

சின்னதுரையுடன் படிக்கும் சுப்பையா, செல்வரமேஷ் இருவரும் சாதி ரீதியாக சின்னதுரையை மிகவும் இழிவுபடுத்தி, துன்புறுத்தியுள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளான சின்னதுரை பள்ளிக்குச் செல்லவில்லை. அதற்கான காரணத்தை அறிந்த ஆசிரியர்கள் அதுகுறித்த புகாரை எழுதி வாங்கியுள்ளனர். ‘பட்டியலினத்தைச் சார்ந்தவன் எங்கள் மீதே புகார் கொடுப்பதா?' என்ற சாதிய வன்மம் இவர்களை அரிவாள் தூக்க வைத்திருக்கிறது.

கொலைவெறித்தாக்குதல் நிகழ்த்திய மாணவர்கள் சுப்பையா, செல்வ ரமேஷ், 11ஆம் வகுப்பு படிக்கும் சுரேஷ் வானு இவர்களுக்கு உதவிய செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய ஆறுபேரை காவல்துறை கைது செய்துள்ளது. இனி இத்தகைய சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சின்னதுரையையும், அவரது சகோதரியையும் விடுதியுடன் கூடிய வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. மாணவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான அடையாளங்கள் அணிந்தும், குறிப்பிட்ட வண்ணக் கயிறுகள் கட்டியும், ஆடைகள், புத்தகம், புத்தகப் பை, சைக்கிள் போன்றவற்றில் அவ்வாறான அடையாளங்களுடனும் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்டறிந்து அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல் ஆலோசனைகள் வழங்கி மேம்படுத்த வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மருத்துவம், கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

ஆனால் இவை எதுவுமே தீர்வல்ல.

சாதிய நச்சரவம் மாணவர்களிடமும் ஊடுருவி இருப்பது நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் படிக்க வைத்தால் சாதியக் கொடுமைகள் நிகழ்ந்துவிடும் என அஞ்சி அருகிலுள்ள வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி அங்கும் இக்கொடுமை நடந்துள்ளதே என்று பதறும் சின்னத்துரையின் தாயார் அம்பிகாவதியின் குரல் சாதிய வன்மத்தின் பரவலை நமக்கு உணர்த்துகிறது.

'அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார் அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்' என்ற கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வயதைக் காரணம் காட்டி அவர்கள் சிறுவர் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் இவர்கள் ஆத்திரத்தினால் உந்தப்பட்டு இக்காரியத்தில் ஈடுபட வில்லை. சாதி வெறியால் இவர்கள் கொலைத் திட்டம் தீட்டியுள்ளனர்.

13/07/2020 நிர்பயா வழக்கில் நீதியரசர்கள் தினேஷ், விக்ரம் நாத் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் குற்றம் இழைக்கின்ற பட்சத்தில் அவர்களின் குற்றத்தன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பெரியவர்களாகவே பாவித்து தண்டனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் சாதிய வன்மம் கொண்ட இந்த மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சாதி என்பது அழகிய சொல் என்றும், குடிப்பெருமை பேசித் திரிவதும், சாதிய அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கும் போக்கும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதி, மதங்களை அரசியல் ஆதாயங்களுக்காப் பயன்படுத்தும் வகுப்பு வாதிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். சாதி மோதல்கள், ஆணவப்படுகொலைகள், சாதிப் படுகொலைகளுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் 'மனித குலம் அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை' என்ற உணர்வு பள்ளிக்கூடங்களிலே ஊட்டி வளர்க்கப்பட வேண்டும். அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

சிந்தனை மாற்றம் நிகழாதவரை இந்த சாதிவெறியை முழு முற்றாகப் போக்கி விட முடியாது. சந்திரயான் நிலவைத் தொட்டு நின்றாலும் சாதிய அழுக்குகளைக் களையவில்லை என்றால் இந்தியா ஒருகாலும் தலை நிமிர்ந்து நிற்க இயலாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்