தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, தொலைதூரக் கிராமங்களிலுள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இத்திட்டம் 2023 ஆகஸ்ட் 25 முதல் தமிழ்நாட்டிலுள்ள 31,0008 தொடக்கப் பள்ளிகளுக்கும் ரூ.404 கோடி செலவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள்.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், ஊட்டச்சத்தை அதிகப்படுத்துதல், வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் போன்ற உயரிய நோக்கங்களைக் கொண்ட இத்திட்டம் தமிழ்நாட்டு கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல் திட்டமே!
காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக, தினந்தோறும் முட்டை வழங்கும் திட்டமாக, இப்போது காலை உணவுத் திட்டமாக மாறியிருப்பதைப் போல இத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பயிலும் +2 மாணவ, மாணவிகள் வரை விரிவுபடுத்த வேண்டும்.
தொலைதூரங்களிலிருந்து பேருந்து வசதியில்லாமல் நடந்தே வருவதால் காலையில் பசியுடன் மயங்கிவிழும் துவரங்குறிச்சி அரசுப்பள்ளி மாணவிகளைக் குறித்து சமரசம் 16-30 ஏப்ரல் 2019 இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இப்போது அங்குள்ள தொடக்கப்பள்ளி மாணவிகளுக்குக் காலை உணவு கிடைத்தாலும் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவிகளுக்கான காலை உணவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துவரங் குறிச்சி கிளையினரே வழங்கி வருகின்றனர். எனவே இத்திட்டம் 12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகள் வரை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அதுபோல அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் காலை உணவுத் திட்டம் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த பாரபட்சத்தைப் போக்கி அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் வழங்கப்பட வேண்டும்.
An Uncertain Glory & India and its Contradictions என்ற நூலில் மதிய உணவுத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டி பொருளாதார அறிஞர்கள் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாகக் குறிப்பிட்டுள்ளனர். இத்திட்டமே தேசிய மதிய உணவுத் திட்டமாக விரிவடைந்தது. உலகமே பாராட்டும் இந்த அற்புதத் திட்டத்தை எள்ளி நகையாடியிருக்கிறது தினமலர் நாளிதழ்.
‘காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு: ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்ற தலைப்பில் ஈரோடு, சேலம் தினமலர் பதிப்பில் வெளியான செய்தி கடுமையான கண்டனத்தைப் பெற்றது. ஏழைக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதை இழிவுபடுத்தும் கேடுகெட்ட சிந்தனையை வெளியிட்ட தினமலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைவன் கண்ணியமாகப் படைத்த மனித இனத்தையே இழிவுபடுத்தும் போக்கு இது. நிரம்பி வழிவது கக்கூஸ் அல்ல. தினமலரின் வன்மம். இந்த வன்மம் களையப்பட வேண்டும். தினமலரின் இந்த அழுக்குச் சிந்தனை பத்திரிகை தர்மத்திற்கு மட்டுமல்ல மனித தர்மத்திற்கே எதிரானது!