மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

இவர்களா நாட்டைக் காப்பாற்றுவார்கள்?
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1 - 15 ஜனவரி 2024


இவர்களா நாட்டைக் காப்பாற்றுவார்கள்?

2001 டிசம்பர் 13ஆம் நாள் பாஜக ஆட்சியின்போது நாடாளுமன்றத்துக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவுநாளில் நாடளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக்குப்பி வீசப்பட்டுள்ளது. பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து மேசைகளின்மீது தாவிக் குதித்து ஓடிக் கொண்டே சாகர் சர்மாவும், மனோ ரஞ்சனும் மஞ்சள் நிற புகையைக் கிளப்பும் குப்பிகளை வீசினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம், அமோல் ஷிண்டே இருவரும் இதேபோன்ற புகைக்குப்பிகளை வீசினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட (UAPA) பிரிவுகள், IPC சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் தொடர்புடைய லலித் ஷாவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய மைசூர் பாஜக எம்.பி. பிரதாப் சின்கா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

940 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் நாட்டின் உச்சபட்ச நான்கடுக்கு பாதுகாப்பு கொண்ட 176 பாதுகாவலர்களையும் தாண்டி (வழக்கமாக 301 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். ஆனால் சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் இருந்தவர்கள் 176 காவலர்கள்) மெட்டல் டிடக்டர், ஸ்கேனர் சோதனைகளைத் தாண்டி இவர்கள் புகைகுப்பிகளை வீசியுள்ளார்கள். வீசியது விஷவாயுவாக இருந்தால், வீசப்பட்டவர்களின் பெயர்கள் இஸ்லாமியப் பெயர்களாக இருந்தால், அனுமதி வழங்கிய எம்.பி. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் இன்னேரம் பிரதமரும், உள்துறை அமைச்சரும், பாஜகவினரும், ஊடகவியலாளர்களும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள்! என்ன நடந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இச்சம்பவத்திற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், எம்.பிக்கள் குரல் எழுப்பினர். கேள்வி கேட்டவர்களுக்குப் பதில் சொல்லாமல் மக்களவை, மாநிலங்களைவை என இரு அவைகளிலும் சேர்த்து ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாகக் கூறி 14, 78, 49, 2 என கட்டம் கட்டமாக மொத்தம் 143 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக 11 எம்.பிக்களை உரிமைக்குழு அறிக்கை அளிக்கும் வரை மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே நுழையக்கூடாது என்ற கடுமையான நடவடிக்கையை பாஜக அரசு எடுத்துள்ளது.

பெரும்பான்மையான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷா மசோதா ஆகிய மூன்று குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை குரல் வாக்கெடுப்பின் மூலம் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ‘அதிகாரமற்ற நாடாளுமன்றத்தில் நாட்டை போலீஸ் அரசாக மாற்றும் அரக்கத்தனமான சட்டத்தை நிறைவேற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நாட்டை போலீஸ் ராஜ்யமாக மாற்றிவிடும்’ என்ற காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரியின் கூற்று கவனிக்கத்தக்கது.

நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், அவர்களின் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படும் நிலையை நாட்டுமக்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களையே பாதுகாக்கத் தவறிய இவர்களா நாட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்பதையும் ஒவ்வொரு வாக்காளரும் எண்ணிப்பார்க்க வேண்டும். 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்