மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அயோத்தி அரசியலுக்குப் பலியாகி விடாதீர்கள்
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1 - 15 பிப்ரவரி 2024


அயோத்தி அரசியலுக்குப் பலியாகி விடாதீர்கள்

இந்துத்துவர்களின் கொடுங்கனவு நிறைவேறியிருக்கிறது. ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜிதைச் சட்டவிரோதமாக இடித்துவிட்டு, கூட்டுமனசாட்சியின் மூலம் சட்டப்பூர்வமாக மீண்டும் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கிவிட்டு அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்திருக்கிறது.

குழந்தை இராமர் சிலையைத் திறந்துவைத்துவிட்டுப் பேசிய பிரதமர் மோடி '2024ஆம் ஆண்டு ஜனவரி 22 என்பது வெறும் தேதியல்ல. ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இராமர் தான் இந்தியா என்ற சிந்தனை. இராமர்தான் இந்தியாவின் சட்டம். அடுத்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவிற்கான அடிக்கல்லை நாம் நட வேண்டும்' என்று பேசியிருக்கின்றார்.

இராமரின் பெயரால் இந்தியாவில் சிந்தப்பட்ட இரத்தமும், கொல்லப் பட்டவர்களும் அதிகம். கடந்த ஆறு ஆண்டுகளில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கத்தைச் சொல்லச் சொல்லி வடமாநிலங்களில் இதுவரை அடித்துக் கொல்லப்பட்டவர்களும், எரித்துக் கொல்லப்பட்டவர்களும் நூற்றுக்கும் அதிகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவரான பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு கலந்து கொள்ளாத கோயில் திறப்புவிழாவில் தான் கார்ப்ரேட் முதலாளிகளான அதானி, அம்பானி உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியப் பிரமுகர்கள் 7000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர்.

இந்துமதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவிலுள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரியரான நிச்சலானந்தா சரஸ்வதி 'அயோத்தியில் எல்லா வற்றையும் மோடி செய்துவிட்டால், பிறகு மத குருமார்களுக்கு என்ன வேலை?' என்று கேட்டிருக்கிறார். உண்மையில் அங்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்குத்தான் வேலை இருந்தது.

உத்தரகாண்டிலுள்ள ஜோதிஷ் பீடத்தின் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, 'இராமர் கோவிலில் ஒரு பகுதியில் மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன. இந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்துவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே' என்று விமர்சித்திருக் கின்றார். நாடளுமன்றத் தேர்தலுக்கு முன் கோயிலைத் திறந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்பது பாஜகவின் கணக்கு. அவர்கள் இராமரை வைத்துச் செய்யும் அத்தனையும் பக்தியினால் அல்ல.

மக்களிடம் குடிகொண்டிருக்கும் ஆன்மிக உணர்வை இராமரை முன்னிறுத்தி பாஜக அறுவடை செய்து கொண்டிருக்கின்றது. அபகரிக் கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதை அழுத்தமாகச் சொல்வதற்கு இங்கு பலருக்கும் மனத்தடை இருக்கின்றது. ஏதேதோ காரணங்களைப் பட்டும் படாமல்தான் இங்குள்ள அரசியல் தலைவர்களால் சொல்ல முடிந்திருக்கின்றது.

இது வெறும் நிலப் பிரச்னை அல்ல. முஸ்லிம்களின் இருப்பையும் வரலாற்றையும் அழித்தொழிக்கும் தீயதிட்டத்தின் ஒரு பகுதி. காசி, மதுரா என இந்த வரலாற்று அழிப்பு தொடர்வதைத்தான் புதிய தொடக்கம் என மோடி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அவை ஆன்மிக அடையாளங்களாக மட்டுமே பார்க்கப்படு கின்றன. ஆனால் இராமர் கோயில் இந்துத்துவத்தின் அடையாளமாகிப் போனது. எனவேதான் 'மலர வேண்டும் இராம ராஜ்ஜியம்' என்று தினமணி தலையங்கம் எழுதுகிறது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பரிவார மனங் கொண்ட பலர் வலிந்து வாழ்த்துச் சொல்லித் தங்களின் அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவின் கடன் பல மடங்கு உயர்ந்து, ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்து, வேலையிழப்பு அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், பொதுத்துறைகள் தனியார் மயமாகி நாடே திவாலாகிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக மட்டுமே பாஜக இந்த அஸ்திரத்தைக் கையிலெடுக்கவில்லை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இனி செல்லுபடியாகாது என்பதைத்தான் பிரதமர் 'இராமர்தான் இந்தியாவின் சட்டம்' என்கிறார். மனுதர்மமும் சனாதனமும் இந்தியாவின் சிந்தனை என்பதைத்தான் புதிய யுகத்தின் தொடக்கமாக மோடி குறிப்பிடுகின்றார்.

மக்கள் இதனை உணரவேண்டும். ஆன்மிகத் தேடலில் பாஜகவின் இந்த மாயவித்தையில் மக்கள் மயங்கிவிடக்கூடாது. இந்தியா ஒரு பன்மைச் சமூகம். இந்தியா எல்லாருக்குமான ஜனநாயக பூமி. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும். இந்த பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்தை மதவெறியைக் கொண்டு அழிக்கத் துடிக்கும் தீய திட்டத்திற்குச் சகோதர சமுதாயச் சொந்தங்கள் பலியாகி விடக்கூடாது.

தங்களுக்கு எல்லாவகையிலும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருப் பதைச் சகித்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கத் துடிக்கும் முஸ்லிம் சமுதாயத்துடன் நிற்க வேண்டும் என்பதைவிடவும் நீதியின் பக்கம் பொதுமக்கள் நிற்க வேண்டும். அறம் இந்த மண்ணில் ஆன்மிகத்தின் பெயரால் அறுபட்டுப் போய்விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்