அயோத்தியில் இராமர் கோயில் திறப்புவிழா நடந்து முடிந்த அதிர்வுகள் அடங்கும் முன்னே காசியிலுள்ள ஞானவாபி பள்ளிவாசலின் பாதாள அறையில் பூஜை தொடங்கிவிட்டது. 'முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கு இடமா இல்லை. பாபர் மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தால் என்ன?' என்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அறிவுரை கூறியவர்களிடம், 'இது பாபரி மஸ்ஜிதோடு நின்றுவிடப்போவதில்லை. மதுரா, காசி என்று பள்ளிவாசல் ஆக்ரமிப்புத் தொடரும்' என்று நாம் கூறினோம். அந்த எச்சரிக்கை நடந்துவிட்டது. அதுவும் இவ்வளவு சீக்கிரத்திலேயே!'
1947 ஆகஸ்ட் 15 அன்று நாட்டில் எங்கெல்லாம் வழிபாட்டுத் தலங்கள் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களுடைய உரிமையின் கீழ் அவை தொடரும் என்றும் எவ்விதத் தகராறுகளுக்கும் ஆக்கிரமிப்பு களுக்கும் அனுமதி இல்லை' என்று 1991 ஏப்ரலில் வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் மட்டுமே விதி விலக்காக இருக்கும் என்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பிலும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்தச் சட்டத்தை நீதிமன்றமே மீறி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
முகலாயப் பேரரசர் ஒளரங்கஜேப்பின் கட்டளையின் பேரில் விஸ்வேஷ்வர் கோயிலை இடித்துவிட்டு ஞானவாபி மஸ்ஜித் கட்டப் பட்டதாக 1991 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. ஒளுச் செய்யும் இடத்தில் சிவலிங்கம் இருப்பதாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பள்ளிவாசல் வளாகத்தை வீடியோ, சர்வே எடுக்கவும், கள ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் 'அது ஒளுச் செய்வதற்காகக் கட்டப்பட்டுள்ள நீர்த் தொட்டியில் உள்ள ஒரு நீரூற்றுதான்' எனப் பள்ளி நிர்வாகக் குழு சுட்டிக்காட்டியது. அப்படியிருந்தும் கூட அந்தப் பகுதியைச் சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஞானவாபி மஸ்ஜித் வளாகத்தை ஆய்வு செய்ய 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொல்லியல் துறையின் நான்கு மாத கால ஆய்விற்குப் பிறகு அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், அம்சங்கள், கலைப்பொருட் கல்வெட்டுகள், கலை, சிற்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 839 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு துறைசார் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்கும் முன் அவசர கதியில் மிகப் பிழையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
'காசி விஸ்வநாதர் அறங்காவலர் குழுவால் பரிந்துரைக்கப்படும் மனுதாரர், அர்ச்சகர் ஆகியோர் பாதாள அறையில் பூஜை செய்ய வசதியாக இரும்பு வேலி போன்றவற்றை அமைத்து 7 நாள்களுக்குள் முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார். தீர்ப்பு வெளியான எட்டுமணி நேரத்தில் ஞானவாபி மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் அடித்தளத்தில் இந்து சமய வழிபாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இந்தத் தவறான தீர்ப்பை எதிர்த்து அன்ஜுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஏற்கனவே மதுரா ஷாஹி ஈத்கா பள்ளியைக் குறிவைத்து 'கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா மசூதியில் அபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரி மதுரா நீதிமன்றத்தில் இந்து மகா சபா மனுத்தாக்கல் செய்துள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் மதநம்பிக்கை எனும் அடிப்படையில் பிற மத வழிபாட்டுத்தலங் களுக்கு உரிமை கோரினால் நாடு என்னவாகும்?
84,000க்கும் அதிகமான பௌத்த விகார்களையும் சிலைகளையும் அழித்துவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான ஜைனக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப் படையில் இந்துக் கோயில்களுக்கு ஜைனர்களும், பௌத்தர்களும் உரிமை கோரத் தொடங்கினால் என்னாகும்?
மத்தியப் பிரதேசத்திலுள்ள கமால் மௌலா மஸ்ஜித், டெல்லியிலுள்ள குவ்வத்துல் இஸ்லாம் மஸ்ஜித், நவாப் அலீ மஸ்ஜித் என்ற பட்டியலும் ஆக்கிரமிப்புத் திட்டமும் இருக்கின்ற சூழலில் டெல்லி மெஹ்ரலி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத உணர்வுகளுக்குள் மோதல் போக்கை விளைவிக்கும் வகுப்புவாதிகளின் தீய திட்டத்தை நீதிமன்றத்தின் மூலமே அரங்கேற்றுவது நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் ஒரு வரலாற்றுக் களங்கத்தை முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு சுமத்தப்படுவதை பொதுமனம் வேடிக்கை பார்ப்பது நாட்டின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து விடும்.
ஜனவரி 22ஆம் தேதிக்குப்பிறகு புதிய யுகத்தின் தொடக்கம் என்று மோடி குறிப்பிட்ட இந்த யுகத்தில் சிறுபான்மையினருக்கான இடம் என்ன? இந்த மதவெறிப்போக்கு இந்தியாவை அழிவுக்கு இட்டுச் செல்லும். அதற்கு முன் இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனைவரின் கடமை.