மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் பாஜக
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1-15 மார்ச் 2024


ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் பாஜக

தனிநபர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்காகத் தேர்தல் பத்திரங்கள்(Electoral Bonds) திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. இத் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க விரும்பியவர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI) மூலம் பணத்தைத் தேர்தல் பத்திரங்களாக மாற்றி அதைத் தாங்கள் விரும்பும் கட்சிகளுக்குக் கொடுத்தனர்.

இத்திட்டத்தில் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற வெளிப்படைத் தன்மை இல்லாததால், இதற்கெதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், Common Cause என்ற இரு அமைப்புகள் 2017ஆம் ஆண்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுட்சி 2018ஆம் ஆண்டிலும் மனுத்தாக்கல் செய்தது.

'கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்கவும் தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும், பண மோசடி நடக்கலாம்' என்றும் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) பலமுறை எச்சரித்தது.

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி 15ஆம் நாள்' தேர்தல் பத்திரத் திட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், தகவல் அறியும் உரிமை பிரிவு 19(1) (a)க்கு எதிரானது என்றும் கூறி ரத்து செய்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை SBI மார்ச் 6க்குள் வழங்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018 முதல் 2023 மார்ச் வரை ரூ.12008 கோடி மதிப்புக்கு 21171 தேர்தல் பத்திரங்கள் விற்கப் பட்டிருக்கின்றன. மொத்த தேர்தல் பத்திரங்களில் 54 விழுக்காடு அதாவது 6570 கோடி பாஜக நிதியாகப் பெற்றிருக்கிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிய பாஜக சட்டவிரோதப் பணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்கும் முயற்சியாகவே இத்திட்டத்தைக் கொண்டுவந்ததுடன் கார்ப்பரேட்களிடமிருந்து பெரும் தொகை பெற்றதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. 

இந்தத் திரைமறைவுப் பணப்பறிமாற்றம் கட்சித்தாவலுக்கும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கும், தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கும் வித்திட்டு ஜனநாயகத்தையே ஆட்டம் காணச் செய்கின்றன. கோடிகளில் அள்ளிக் கொடுத்தவர்கள் அரசைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.

இது ஒருபுறமென்றால் சண்டிகர் மாநகராட்சிக்குக் கடந்த மாதம் நடைபெற்ற மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி அனில் மசிக் தில்லுமுல்லு செய்து ஆம் ஆத்மியின் 8 வாக்குகளை பேனாவால் கிறுக்கி செல்லாததாக்கியது தெரியவந்துள்ளது. வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திக்க அஞ்சுகிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவிலுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதையை நீக்கிவிட்டு ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பாஜக மதவாதக்கட்சி மட்டுமல்ல. ஊழல், முறைகேடு, குறுக்குவழி என்று நெறிதவறி நடைபோடும் கட்சி என்பதால் EVMக்கு எதிரான குரல்களும் வலுப் பெற்று வருகின்றன. நெறிதவறிய ஃபாசிஸ பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்