புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 9 வயது மகள் ஆர்த்தி மார்ச் 2ஆம் தேதி மாலை வீட்டருகே விளையாடச் சென்றவள் தொலைந்துபோனாள். காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் சாலைமறியல், கடையடைப்பு என்ற தொடர் போராட்டம் செய்த பிறகு மூன்றுநாள்கள் கழித்து அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மார்ச் 5ஆம் நாள் பிணமாக அழுகிய நிலையில் அச்சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்.
உடல்கூராய்வில் சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது உறுதியானதைத் தொடர்ந்து குற்றவாளிகளான கருணாஸ்(19), விவேகானந்தன்(59) இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மிருகங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோருக்கு ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த 11 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இதுவல்ல தீர்வு. இக் கொடிய மிருகங்கள் தூக்கிலடப்பட வேண்டும். மது, போதை நாட்டையே நாசப்படுத்தும். எனவே மது, போதை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2022ஆம் ஆண்டு தேசிய ஆவணக் காப்பக அறிக்கையின் படி 1,69,449 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 39.7 விழுக்காடு போக்சோ வழக்குகள். இன்னும் பதிவாகாத வழக்குகள் எத்தனையோ?
இதுபோன்ற மற்றொரு நிகழ்வு. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெர்ணான்டாவும் அவரது கணவரும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 66 நாடுகளில் ஒரு இலட்சத்து 70ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா வந்தடைந்தனர். மார்ச் 1ஆம் நாள் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டத்திலுள்ள குர்மஹாட் என்ற கிராமத்தில் அவர்கள் தங்கியபோது எட்டுபேர் கொண்ட கும்பல் கணவரைத் தாக்கி அவரது கண்முன்னே ஃபெர்ணான்டாவைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன் அவர்களின் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். எட்டுப்பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பல நாடுகளிலும் பாதுகாப்பாகப் பயணித்தவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை, அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்திலிருந்த இந்தியா இப்போது முதல் இடத்திற்கு வந்துள்ளது என்ற தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவன ஆய்வின் முடிவை இச்சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மதப் பாகுபாடுகள், வெறுப்பு, மோதல்கள், கார்ப்பரேட் நலன் என்று நாட்டைச் சீரழிக்கும் ஃபாசிஸத்தின் ஆட்சியில் சிறுபான்மையினர் மட்டுமல்ல எவருக்குமே இங்கு பாதுகாப்பில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனில் ஃபாசிஸ ஆட்சியாளார்கள் அகற்றப்பட வேண்டும். இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்ட மிருகங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாகாத வரை குற்றங்களைக் குறைக்க முடியாது.