18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஏப்ரல் 19ஆம் நாள் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1ஆம் நாள் நிறைவடைய உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளிவரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்களிப்பவர்கள் தேர்தல் முடிவுக்காக ஒன்றரை மாதமாகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நீண்ட இடைவெளி பல ஐயங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று முழங்குபவர்களால் இந்தியா முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த இயலவில்லை. உத்திரப் பிரதேச மாநிலத்தில்கூட ஒரே கட்டமாக நடத்த இயலாமல் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகின்றது.
பாஜக ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தில்லு முல்லு வேலைகளைச் செய்து வருகிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவிலுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குக் கொண்டுவந்துள்ளது. குதிரைபேர அரசியல், கொல்லைப்புற அரசியல், தேர்தல் பத்திர முறைகேடு என்று குறுக்குவழியில் பயணிக்கும் பாஜக இந்தத் தேர்தலை நேர்மையாகச் சந்திக்க அஞ்சுகிறது. வாக்குச் சீட்டு முறைக்காகப் பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மின்னணு வாக்குப் பதிவு (EVM) மூலமாகத் தேர்தல் நடைபெறுவதிலும் வாக்காளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.
அதிகாரம், பணபலம், குறுக்குவழி என்ற பல முயற்சிகளை பாஜக எடுத்தாலும் இந்தத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி விட்டது. 67 இலட்சம் குழந்தைகள் பட்டினியோடு உறங்கச் செல்கிறார்கள். 2019-2021ஆம் ஆண்டிற்கான இ கிளினிகல் மெடிக்கல் இதழின் ஆய்வு குழந்தைகள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவன ஆய்வு அறிவிக்கிறது.
சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் விலைவாசி உயர்வாலும், வேலை இல்லாத் திண்டாட்டத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மதவாதத்தைக் கையிலெடுத்து நாட்டை நாசப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ள ஃபாசிஸ பாஜகவின் கைகளில் நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவின் ஜனநாயகம் புதைக்கப்பட்டுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் அழுத்தமாக எச்சரிக்கின்றனர். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது நாட்டையும், ஜனநாயகத்தையும் மீட்கின்ற ஒரே வழி.
இந்தத் தேர்தல் ஃபாசிஸத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறவழி யுத்தம். வாக்குச் செலுத்த பணம் வாங்குவது, குறுகிய அரசியல் இலாபக் கணக்குகள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு ஒவ்வொரு குடிமகனும் வாக்காயுதம் ஏந்திப் போராட வேண்டிய காலம் இது. அனைவரும், குறிப்பாக சிறுபான்மைச் சமுதாயத்தினர் நூறு விழுக்காடு வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும். வாக்குகளை ஒருமுகப்படுத்த வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். இந்தியா வெல்ல வேண்டும்.