மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

வெறுப்புப் பிரதமருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்
வி.எஸ்.முஹம்மத் அமீன், மே 01 - 15, 2024
வெறுப்புப் பிரதமருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏழுகட்ட வாக்குப்பதிவில் முதல் கட்ட வாக்குப்பதிவு 2024 ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 இடங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கிறது. வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்குப் பெரும் பின்னடைவைத் தருவதாகத் தெரிவித்துள்ள சூழலில் பாஜக கடும் அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் உள்ளது. இந்த அச்சம் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரிடம் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் 26 அன்று நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரையில் இந்த அச்சமும், பதட்டமும் வெளிப்படுவதை உணர முடிகிறது. தேர்தல் பத்திரம், உங– என்ற தந்திரங்கள் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட நிலையில் வெறுப்பாயுதத்தை பாஜக கூர் தீட்டியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு தகுதி நீக்கம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மிரட்டல், சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் வாபஸ் மூலம் ஆபரேஷன் நிர்விரோத் எனும் கீழ்த்தரமான நாடகத்தின் வழியே இந்தப் போலி வெற்றியை பாஜக ஈட்டியுள்ளது. தேர்தல் முறையையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கும் தரம் தாழ்ந்த செயல் இது.

இந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2006 டிசம்பர் 9 ஆம் நாள் புது தில்லியில் நடந்த தேசிய மேம்பாட்டுக் கூட்டத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிப் பேசிய பேச்சை அப்பட்டமாகத் திரித்து பொய்த் தகவல்களைக் கூச்சமே இல்லாமல் பேசியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதைத் திரித்துப் பேசியதுடன் முஸ்லிம்களின் மீதான வெறுப் பையும் வன்மத்தையும் மோடி உமிழ்ந்துள்ளார்.

அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்பவர்கள், ஆக்ரமிப்பாளர்கள், ஊடுருவல்காரர்கள் என்ற மலிவான, அபத்தமான சொல்லாடலை தம் குடிமக்களை நோக்கி இந்தியப் பிரதமர் மோடி வீசியுள்ளார். முஸ்லிம்களை நோக்கி அவர் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் பிழையானவை. கீழ்த்தரமானவை. உண்மைக்கு மாறானவை. முஸ்லிம்கள் இந்த மண்ணின் பிள்ளைகள். ஆண்டாண்டுகாலமாய் தங்கள் மீது சுமத்தப்பட்ட அடிமைத் தளையை அறுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவும் இந்திய முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.

வெறுப்பையும் பகைமையையும் ஊக்குவித்தலை தேர்தல் தொடர்பான குற்றமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்(கீகஅ) வரையறுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து மோடி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு இருபதாயிரத்திற்கும் அதிகமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி யுள்ளது. ஆனால் உறுதியான, கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்வதையும், தேர்தலில் போட்டியிடுவதையும் தடை செய்ய வேண்டும். ஆனால் பாஜக வின் கைப்பிள்ளையாகச் செயல்படும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

ஆணையம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ வாக்கின் மூலம் மக்கள் இத்தகைய வெறுப்பு மனிதரைப் புறக்கணிக்க வேண்டும். மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி நாட்டைத் துண்டாட நினைக்கும் பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கான நல்வாய்ப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தல்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்