மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கடிதங்கள்
-, மே 16-31, 2024



விதைகளை விருட்சமாக்கும் சமரசம்

சிறார் உலகம் பகுதியில் ‘பறக்கும் பட்டத்தை’ எனக்குப் பிடித்துக்கொடுத்த சமரசம் இதழுக்கு நன்றி. இந்தியாவை வீழ்த்த பா.ஜ.கவின் இழிவான வழிமுறைகளை முஹம்மது சாதிக் பட்டியலிட்டு எழுதிய விழிப்பு உணர்வுக் கட்டுரை வாக்குச் சாவடி செல்லும் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்துச் செயலாற்றும் வண்ணம் சிறப்பாக இருந்தது.

கோடைக்காலமென்பது மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல, மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகளை விடுமுறைகாலக் குறிப்புகளாக வெளியிட்டு விதைகளை விருட்சங்களாக்கும் சமரசத்தின் பணிக்கு வாழ்த்துகள்!

- சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்

என் அனுபவத்தைப் பிரதிபலித்த சிறுகதை

‘இரயில் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்’ என்று பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்ற வரிகள் சிறுகதையின் முத்தாய்ப்பாய் இருந்தது. நான் அனுபவித்து அலுத்துப்போனதை அப்படியே எழுதியிருக்கிறார் முஹம்மத் அமீன். எந்த முஸ்லிமும் பிறருக்குத் தொல்லை தரமாட்டார்கள் என்ற கதையின் மையம் உயர்வு.

- பீர் இலாஹி, உத்தமபாளையம்


தோலுரித்துக் காட்டிய கட்டுரை

பாஜகவின் அட்டூழியங்களை மிக விரிவாகத் தெளிவான முறையில் எழுதிய கப்ளிசேட்டுக்குப் பாராட்டுகள். ஃபாசிஸத்தின் கொடூர முகங்களைத் தோலுரித்துக் காட்டி விட்டார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கர்நாடக மக்கள் புரிந்து கொண்டதைப்போல வட இந்திய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். கடைசிப் பக்கம் அஸ்மா முஸ்தஃபாவின் அரிய பணியை எடுத்துரைத்தது. இறைவன் அவருக்கு அருள்புரிவானாக!

- T.M. புரோஸ்கான், தேனி

அடிவானிலிருந்து தொடுவானம் வரை

மொக்கு மலர்வது போன்று, அடிவானில் இருந்து தொடுவானம் வரை சமரசத்தின் கருத்துகள் நிறைவாய் இருக்கின்றன. கால்ப்படியிலிருந்து முழுப்படியாகச் செய்திகளை அள்ளிக் கொட்டுகிறீர்கள். லைட் ஹவுஸாய் இருந்து பெட்ரோமாஸ் லைட்டுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறீர்கள். வாழ்த்துகள்.

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன், சென்னை

உலகநாடுகள் குரல் கொடுக்க வேண்டும்

வி.பி.கலைராஜன் எழுதிய ‘உலக நாடுகளே! இனப்படுகொலையைத் தடுத்திடுங்கள்’ கட்டுரை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் அட்டூழியம் எப்போது ஓயப்போகிறது என்று உலகமே ஏங்கித் தவிக்கிறது. உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.

- அ. காஜாமைதீன், நெய்க்காரன்பட்டி

இலவசமாய் ஓர் இரயில் பயணம்

தூக்கம் தொலைத்தவர்கள் சிறுகதை மூலம் இரயில் பயணிகளின் வலிகளை யும், கற்றுக்கொள்ள வேண்டிய பயண இங்கிதங்களையும் மிக அழகாக வரைந்துள்ளார் முஹம்மத் அமீன். ரயிலில் ஏறி பெட்டியில் படுத்து உறங்கி எழுந்து இறங்கிய அனுபவத்தை அப்படியே வார்த்தைகளில் வடித்து, பயண அனுபவத்தை டிக்கெட் வாங்காமல் இலவசமாக வழங்கி இருக்கிறது இந்தச் சிறுகதை. இறுதி வார்த்தைகளை அனைவரும் பாடமாக எடுத்துப் பின்பற்ற வேண்டும். தான் ஒருவன் பாதிக்கப்படுவதை விட சக பயணிகளின் நலத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தந்திருத்தமாகப் பொட்டில் அடித்தாற் போல ஓங்கி ஒலித்திருக்கிறது இறுதி வைர வரிகள். வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

- ஜ.ஜாஹிர் உசேன், ரியாத்

ஃபலஸ்தீனுக்காய் குரல் கொடுப்போம்

ஃபாசிஸ பாஜகவிடமிருந்து நாடு தப்பிக்க மிகமுக்கியமான ஒரு வாய்ப்பு இந்தத் தேர்தல். பாஜக ஆட்சியின் தோல்விகளையும், அவலங்களையும் கப்ளிசேட் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இளைஞர்களை இலக்கு நோக்கி தயார்படுத்தி வரும் சாலிடாரிட்டி தலைவரின் நேர்காணல் சிறப்பு. ஃபலஸ்தீன மக்களின் பக்கம் நாம் நிற்க வேண்டும். உலகம் திரண்டெழ வேண்டும் என்ற கலைராஜனின் குரலுக்கு நாமும் செவிசாய்ப்போம். தூக்கம் தொலைத்தவர்கள் சிறுகதையும், இறுதி ஆசை கவிதையும் இதழுக்கு அழகு சேர்த்திருக்கிறது.

- ப.குருசாமி, தேனி

பரவலாக்கப்படவேண்டிய திட்டங்கள்

இந்தியா கூட்டணியை வீழ்த்த பாஜக கையிலெடுக்கும் மலிவான, இழி வான வழிமுறைகளை முஹம்மது சாதிக் தெளிவு பட விளக்கியுள்ளார். ஜகாத் என்றால் 2.5 விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே விளங்கி வைத்துள்ளோம். ஆனால் ஜகாத் குறித்த விரிவாக நாம் புரிந்து கொள்ளவில்லை. அப்துர் ரகீப் அவர்களின் ஜகாத் குறித்த 10 அம்சத் திட்டம் பரவலாக்கப்பட வேண்டும்.

நஸீருல்லாஹ் சாஹிபின் இறப்புச் செய்தி வருத்தமளித்தது. மிகச் சிறந்த இயக்கவாதியை இழந்து விட்டோம். அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தை வழங்குவானாக!

ரயில் பயணிகளின் மன வலிகளை முஹம்மது அமீனின் சிறுகதை சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது. ஃபலஸ்தீனக் குழந்தைகளுக்குக் கல்விபுகட்டும் அஸ்மா முஸ்தஃபா வின் கல்விச் சேவை மகத்தானது.

- டி.சபினா பேகம், எஸ்.மகுதணன், லைலா, ஏ.வகாப் பர்வீன், ஏ.நபிஷா பேகம், எஸ்.நஸ்ரீன், எஸ்.அஜித்தா, தேனி

நூலகத்தில் சமரசம்

செங்குன்றம் அடுத்த பவானிநகர் ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றிருந்த பொழுது, அங்கு சமரசம் இதழ் கண்டேன். தொடர்ந்து சமரசம் இதழை வாசித்து வருகின்றேன். இஸ்லாமியச் செய்திகள், நாட்டு நடப்புகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை சமரசம் இதழ் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

- எம்.முஹம்மத் ஃபாசில், சென்னை


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்