மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஹஜ்:ஒரு பெண்மணியின் வரலாற்றுப் பின்னணியில்!
- ஜ. ஜாஹிர் உசேன், ஜூன் 01 - 15. 2024




ஹஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது இப்ராஹீம்(அலை), ஹாஜிரா(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகிய மூவர்தான். இறைவனின் ஏற்பாட்டின்படி பார்த்தால் மூவருக்கும் இந்த வரலாற்றில் சமபங்கு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது.

ஹஜ் வரலாற்றைப் பேசும்போது இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) அவர்களைப் பேசுகின்ற அளவுக்கு நாம் ஹாஜிரா(அலை) அவர்களின் வரலாற்றை நினைவு கூர்வதில்லை. ஒரு பெண்மணியின் கோணத்தில் ஹஜ்ஜின் வரலாறை நாம் பார்க்க வேண்டும்.

ஹாஜிரா(அலை) யார்? அவர்களின் பின்னணி என்ன? எப்படி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கைக்கு வந்தார்கள்? அவர்கள் வாழ்ந்த இடம் எது? ஃபலஸ்தீனிலிருந்து மக்காவிற்கு எப்படி வந்தார்கள்? மக்காவில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தது? அது எப்படி பின்னாளில் தலைகீழாக மாறியது? இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜிற்காகப் போய் வருகின்ற இடமாக முக்கியத்துவம் பெற்றது எப்படி? அந்தப் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவர் யார்? ஹாஜிரா(அலை) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எப்படி முழுமை பெறும் என்றால் ஹஜ், கஅபா நிர்மாணம் செய்யப்பட்ட வரலாற்றைக் குர்ஆன் வசனங்களின் மூலமும், ஹதீஸ்களின் மூலமும், ஆதாரப்பூர்வமான வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகள் மூலமாகவும் நமக்குக் கிடைத்திருக்கின்ற தகவல்களை ஒன்று சேர்த்தால் தான் கிடைக்கும். இந்த மூன்றையும் வைத்துத் தான் ஹாஜிரா(அலை) அவர்களின் வரலாறு முழுமை பெறும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை இப்ராஹீம்(அலை) அவர்களின் வரலாற்றை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். ஒரு முக்கியப் பணியை பெண்ணிடம் கொடுத்து, அதை எடுத்து நடத்தக்கூடிய பொறுப்பை எப்படி இறைவன் கொடுத்திருக்கிறான் என்பதை வரலாற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

ஹாஜிரா(அலை) வரலாறு

நபி இப்ராஹீம்(அலை) அவர்களும், சாரா(அலை) அவர்களும் ஒருமுறை பயணம் செய்தார்கள். முக்கோணமாக அமைந்த பகுதிகள் - ஏமன், ஷாம், மக்கா. ஷாம் என்பது இன்றைய சிரியா, ஃபலஸ்தீன பகுதிகள் அடங்கிய நாடு. ஷாமிலிருந்து மக்கா வழியாக ஏமன் நாட்டிற்குச் செல்வது அந்தக்கால வியாபாரிகள் செல்லும் பாதை (கேரவன் ரூட்). இப்ராஹீம் (அலை) அவர்கள் எகிப்து போன்ற பல பிரதேசங்களுக்குப் பயணம் செய்து அழைப்புப் பணி செய்து இருக்கிறார்கள்.

பயணம் செல்லும் வழியில் கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிகின்ற பகுதிக்குள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தக் கொடுங்கோலனின் பிடியிலிருந்து விவேகமான முறையில் தப்பி வருகின்றார்கள். அவர்களின் விவேகத்தைப் பார்த்த அரசன் தன்னிடமிருந்த ஓர் அடிமைப் பெண்ணான ஹாஜிரா(அலை) அவர்களை அன்பளிப்பாக அவர்களுக்கு வழங்கினான். ஹாஜிரா (அலை) அவர்கள் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சாரா(அலை) அவர்களோடு பணிப்பெண்ணாகத் தன் பயணத்தைத் தொடங்கிய ஹாஜிரா(அலை) அவர்கள், சாரா(அலை) அவர்களுக்குக் குழந்தை இல்லாத காரணத்தால், சாரா(அலை) அவர்களாலேயே இரண்டாவது மனைவியாக இப்ராஹீம் நபிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். இரண்டாவது மனைவியாகிய ஹாஜிரா(அலை) அவர்களுக்குக் குழந்தையாக இஸ்மாயீல்(அலை) அவர்கள் பிறந்தார்கள். பிறகு முதல் மனைவியான சாரா
(அலை) அவர்களுக்கும் குழந்தை பிறந்தது. அவர்கள்தாம் இஸ்ஹாக்(அலை) அவர்கள்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் ஹாஜிரா(அலை) அவர்களையும், கைக்குழந்தையாக இருக்கும் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் அழைத்துக் கொண்டு மக்காவிற்குப் பயணமானார்கள். இது முதல் முறை. இப்ராஹீம்(அலை) அவர்களுடைய வாழ்க்கையில், மொத்தம் மூன்று முறை மக்காவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்கள். இரண்டாம் முறை வருவதற்கு முன்னால் ஹாஜிரா(அலை) அவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டாம் முறை வந்த பொழுது, இஸ்மாயீல்(அலை) திருமணம் முடித்து, தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார்கள். மூன்றாம் முறை வந்து நீண்ட நாள்கள் தங்கி விடுகிறார்கள்.

முதல் முறை வந்து விட்டுப் போன பின்னர் இரண்டாவது முறை வரும் வரை கைக்குழந்தையாக இருந்த இஸ்மாயீல் (அலை) அவர்களை ஹாஜிரா(அலை) அவர்கள் தான் தன்னந்தனியாக வளர்த்து, வாலிபனாக ஆகும் வரை ஆளாக்கினார்கள். முழுக்க முழுக்க தாயின் அரவணைப்பில், வழிகாட்டலில் வளர்ந்த குழந்தை தான் இஸ்மாயீல்(அலை) அவர்கள். கைக்குழந்தையாக இருந்த இஸ்மாயீல்(அலை) அவர் களுடன் ஹாஜிரா (அலை) இப்ராஹீம்(அலை) அவர்களுடன் தொலைதூரப் பயணம் செய்து மக்காவிற்கு வந்தார்கள்.

ஹாஜிரா(அலை) அவர்களின் நம்பிக்கையும் மன உறுதியும்

மக்காவை அடைந்த பின்னர் இருவரையும் குடியமர்த்தும் வேலையில் இப்ராஹீம் (அலை) ஈடுபட்டார்கள். ஜம்ஜம் கிணறு இருக்கும் இடத்திற்கு அருகே ஒரு மரம் இருந்தது. அந்த இடத்தைத் தேர்ந்தெடுந்தார்கள். உயரமான மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குதான் அந்தப்பகுதி. பள்ளமும் மேடும் நிறைந்தது அது. ஹாஜிரா(அலை) அவர்களிடம் கொஞ்சம் பேரீச்சம்பழங்களும், தோல் பையில் தண்ணீரும் இருந்தது. குடியமர்த்திய பின் இருவரையும் விட்டு விட்டு இப்ராஹீம்(அலை) சென்றார்கள்.

தன்னை ஒரு பாலைவனத்தில் தன்னந்தனியாக, கைக்குழந்தையோடு விட்டுவிட்டுப் போகின்ற கணவனைப் பார்த்து, ஹாஜிரா(அலை) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய தரப்பிலிருந்து வந்த செய்தியின் அடிப்படையில் தான் எங்களை விட்டு விட்டுப் போகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம்(அலை)அவர்கள் ‘ஆம்.!’ என்று பதிலளித்து விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்றுள்ள சூழலில் பூட்டிய வீட்டிற்குள் தனியாக இருப்பதற்கே பயப்படுகின்ற நிலையில் தன்னந்தனியாக யாரும் இல்லாத பாலைவனத் தில் ஒரு கைக்குழந்தையோடு விட்டு விட்டுச் சென்றால் யார் இருப்பார்கள்?

வேறு மனிதர்களே இல்லாத இடம். எவ்வளவு தைரியம் வேண்டும்? எந்த அளவிற்கு அல்லாஹ்வை முழுவதுமாகச் சார்ந்து இருக்க வேண்டும்? மிகப்பெரிய தவக்கலும், துணிச்சலும், தைரியமும் கொண்ட பெண்மணி ஹாஜிரா(அலை) அவர்கள். இன்றைய மக்கா மாநகரில், இரண்டே இரண்டு மனித உயிர்கள் மட்டும்(அதுவும் ஒரு பெண்மணி, ஒரு கைக்குழந்தை) இருந்தால் கற்பனை செய்து கூட நம்மால் பார்க்க முடியாது. இந்த நிலையில் தான் இப்ராஹீம்(அலை) விட்டுச் சென் றார்கள். அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தான் விட்டுச் செல்லும்போது அவன் தங்களை அனாதரவாக கை விட்டு விட மாட்டான் என்று அல்லாஹ்வையே முற்றிலுமாக நம்பித் தங்கிய பெண்மணி ஹாஜிரா அம்மையார்.

இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருக்கும் காலத்திலேயே க்ரிடிட் கார்டு, டெபிட் கார்டு, இண்டெர்நெட், விமான டிக்கெட், ரூம் புக்கிங், மொபைல் என்று ஒரு பயணத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகளை எல்லாம் நாம் செய்கிறோம் என்பதை யோசித்தால், மனதில் பயம் தன்னாலே வந்து விடுகிறது. ஹாஜிரா(அலை) அவர்களின் தியாகம், நிலைகுலையாத தன்மை, எந்த அளவிற்குப் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந் தார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் பல படிப்பினைகள் பெறலாம்.

ஜம் ஜம் வரலாறு

இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த துஆவின் பரக்கத்தால் அல்லாஹ்வின் பெரிய உதவி அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. ‘எங்கள் இறைவனே! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத் தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, அவர்கள்மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!’ (திருக்குர்ஆன் 14:37)

இப்ராஹீம்(அலை) விட்டுச் சென்ற பின், பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு, தோல் பையில் இருந்த தண்ணீரையும் அருந்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பேரீச்சம் பழங்களும், தண்ணீரும் தீர்ந்து விடுகிறது. பிறகு அவர்களுக்கும் தண்ணீர் தாகம் எடுத்தது. குழந்தை பசியால் அழுதது. யாருமில்லாத இடத்தில் உணவும், தண்ணீரும் தீர்ந்த நிலையில், என்ன செய்வது என்று அறியாமல் நின்றார்கள். தண்ணீரைத் தேடி அலைந்தார்கள். அருகில் இருந்த ஸஃபா, மர்வா மலைக் குன்றுகளுக்கிடையே தண்ணீரைத் தேடி இங்கும் அங்குமாக ஓடினார்கள்.

மலைக்குன்றின் மேலே ஏறி யாராவது வருகிறார்களா போகிறார்களா என்று உதவி பெற வேண்டி நோட்டமிட்டார்கள். கண்களுக்குத் தெரிந்தவரை யாரும் இல்லை. வியாபாரக் கூட்டம் இந்த வழியே போனா
லும் யாரும் மக்காவில் தங்குவதில்லை.

ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடும் பொழுது தெரியும் கானல் நீரைப் பார்த்து தண்ணீர் இருக்கிறது என்று நம்பிப் போகிறார்கள். ஆனால் அது கானல் நீர். ஏமாற்றமடைகிறார்கள். அவர்கள் ஓடிய இடத்தில் தான் அதை நினைவு கூரும் விதமாக இன்றும் ஹஜ்ஜில் ஆண்கள் தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தரப்பில் ஏதாவது உதவி வரும் என்ற நம்பிக்கையில் (ஏழாவது முறையாக) ஓடி மர்வா மலையில் ஓய்ந்து நிற்கும் பொழுது, இதுவரை அந்தப் பகுதியில் கேட்டிராத சலசலப்பான சத்தம் கேட்டது. அதைக் கூர்ந்து கவனித்தவராக, ‘அல்லாஹ் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்க வைக்கிறாய். இது உன்னுடைய ஏற்பாடுதானா? இந்தச் சத்தத்தைக் கேட்க வைப்பதன் மூலம் எனக்கு உதவி செய்ய இருக்கிறாயோ’ என எண்ணினார்கள்.

குழந்தை தன் காலால் உதைத்து தண்ணீர் வந்தது என்று கேள்விப்பட்டிருப்போம். இன்னொரு அறிவிப்பில், ஜிப்ரீல்(அலை) அவர்கள் அந்த இடத்திற்கு வந்து தரையில் குதிங்காலால் தட்டினார்கள் அல்லது இறக்கையைக் கொண்டு தரையில் அடித்தார்கள். தண்ணீர் பீறிட்டுக் கொப்பளித்து எழுந்தது. இதைப் பார்த்த ஹாஜிரா(அலை) அவர்கள் ஓடோடிச் சென்றார்கள். தண்ணீர் ஓடுவதைத் தடுக்க, ஒரு குழியைத் தோண்டினார்கள். அழுகின்ற குழந்தைக்குப் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரைக் கொடுத்தார்கள். தானும் அதிலிருந்து அருந்தினார்கள். இருவரது தாகமும் தீர்கிறது.

ஆனால் தண்ணீர் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. தண்ணீர் கிடைக்காமல், தவியாய் தவித்துக் கொண்டிருந்த ஹாஜிரா(அலை) அவர்கள் தண்ணீர் வழிந்து ஓடுவதைப் பார்த்து, ‘ஜம்(நில்), ஜம்(நிறுத்து)’ என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்த ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் இந்த வரலாற்றைச் சொல்லும் பொழுது, இடையே நிறுத்தி விட்டு, ‘அல்லாஹ் ஹாஜிரா(அலை) அவர்கள் மீது அருள் புரிவானாக! ஒரு வேளை ஹாஜிரா(அலை) கேட்டிரா(நிறுத்தியிருக்கா) விட்டால், அந்தத் தண்ணீர் வழிந்தோடி, இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி மூழ்கடித்திருக்கும். அவர்கள் கேட்டதால் தண்ணீர் நின்று விட்டது!’.

அல்லாஹ்வுடைய ஏற்பாடு என்னவென்றால் அந்த இடத்திற்கு அருகில் தான் கஅபா கட்டப்பட்டது. ஜம் ஜம் தண்ணீர் வந்த இடத்திலேயே தன் குழந்தையை வைத்துக் கொன்டு தங்கி விடுகிறார்கள். அந்தச் சமயத்தில் தான் ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவைக் கடந்து ஏமனை நோக்கிச் செல்கிறது. அவர்களுக்கும் தண்ணீர் தாகம். அப்பொழுது எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தண்ணீரைத் தேடியவர்கள் வானத்தைப் பார்த்த பொழுது பறவைகள் பறப்பதைக் கண்டார்கள். பறவைகள் பறந்தால் அங்கே தண்ணீர் இருக்கும் என்று நம்பி அந்தப் பகுதிக்கு இரண்டு நபர்களை அனுப்பி பார்த்து வரச்சொல்கிறார்கள்.

வந்தவர்கள் அங்கு ஒரு தாயும், பிள்ளையும் தண்ணீருக்குப் பக்கத்தில் இருப்பதைப் பார்த்த பின், தன் கூட்டத்தாரிடம் சென்று சொல்கிறார்கள். அந்த ஒட்டு மொத்தக் கூட்ட மும் புறப்பட்டு ஹாஜிரா(அலை) அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தது. ‘இந்தத் தண்ணீரை நாங்கள் அருந்தலாமா?’ என்று கேட்டார்கள். ஹாஜிரா(அலை) அவர்கள், ‘எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் இந்தத் தண்ணீருக்குச் சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்ற நிபந்தனையை விதித்தார்கள். ‘நாங்கள் அப்படி உரிமை கொண்டாட மாட்டோம். எங்களுக்கு இந்த இடத்தில் ஒன்றும் கிடைக்க வில்லை. எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்’ என்று பதில் அளித்தார்கள்.

அந்த நிபந்தனையை அவர்கள் ஒப்புக்கொண்ட பின் அனுமதி கிடைத்தது. தாகம் தீர தண்ணீர் அருந்தினார்கள். பிறகு ‘இங்கே நாங்கள் தங்கிக்கொள்ளலாமா?’ என்று அனுமதி கேட்டு, அங்கேயே குடும்பத்தோடு தங்கினார்கள். பின்னர் ஜுர்ஹும் கூட்டத்தார் வரும் பொழுதும் போகும் பொழுதும் தங்கியவர்கள், காலப்போக்கில் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றனர். அல்மாரித் என்ற இன்னொரு கூட்டத்தாரும் தங்கினார்கள். இப்படி அங்கே மக்கள் தங்கும் இடமாக மாறி விடுகிறது. ஜுர்ஹும் குலத்தவர்களிடமிருந்து இஸ்மாயீல்(அலை) அரபி மொழியைக் கற்றார்கள். ஜுர்ஹும் குலத்தவர்களில் இருந்தே ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்கள்.

பெண்களின் முக்கியத்துவம்

‘நிச்சயமாக ஸஃபா, மர்வா(எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால், யார் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அந்த இரண்டுக்குமிடையே ஸயீ செய்வதில் குற்றமில்லை’ என்ற வசனத்தில்(2:158), ஹாஜிரா(அலை) அவர்கள் ஓடிய ஓட்டத்தை ஸயீ என்று அல்லாஹ் பதிவு செய்து இருக்கிறான். மேலும், அது ஹஜ்ஜின், உம்ராவின் கிரியைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. அது மறுமை வரை நீடிக்கும்.

ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பெண்ணோடு ஒரு குழந்தையையும் சேர்த்து, யாரும் இல்லாத பாலைவனத்தில் ஒன்றுமில்லாத நிலையில் தங்க வைத்து அங்கே அந்தப் பெண்மணி மூலம் ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்ற ஏற்பாட்டை அல்லாஹ் செய்து இருக்கின்றான்.

ஏன் இந்தக் காரியத்தை ஒரு இறைத்தூதரின் மூலம் செய்யாமல் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்கும் உறுதியான இறைநம்பிக்கை கொண்ட ஒரு பெண்மணியின் மூலம் செய்தான் என்பதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை இருக்கின்றது.

ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் தந்திருக்கும் முக்கியத்துவமும், கண்ணியமும் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்றாவது முறை மக்காவிற்கு வந்த பொழுது, தான் கண்ட கனவில் அறுத்துப் பலியிடுவதற்காகத் தன் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களிடம் கேட்ட பொழுது, மறுப்பேதும் சொல்லாமல் உடன்பட்டார்கள். பலியிடுவதற்காகத் தந்தை கேட்டபொழுது, ‘பலியிடுங்கள் தந்தையே! நான் தயாராய் இருக்கிறேன்’ என்று சொன்னார்கள் என்றால், எப்படிப்பட்ட இறையச்சம் இருந்திருக்க வேண்டும்? அந்த அளவு ஹாஜிரா(அலை) அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களை வளர்த்திருக்கிறார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய பொறுப்பை செவ்வனே நிறைவாகச் செய்து முடித்திருக்கிறார்கள். பொறுமை, அர்ப்பணிப்பு, நிலைகுலையாத தன்மை, தவக்கல், தன்னை முன்னிருத்தி ஒரு சமூகத்தையே கட்டமைத்து, வழி நடத்திய பண்புகள் என அல்லாஹ் ஒரு பெண்மணிக்குக் கொடுத்து கண்ணியப்படுத்தி இருப்பதைப் பார்க்கும் பொழுது, இன்று பெண் உரிமைகள் பேசித் திரிபவர்களுக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் ஹாஜிரா(அலை) அவர்களின் வரலாறு இருக்கிறது என்பது தான் சரியாக இருக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்