மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஃபாசிஸத்தின் உண்மை முகம்
வி.எஸ்.முஹம்மத் அமீன், ஜூன் 01 - 15. 2024





2024 நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பரப்புரை நெருங்க, நெருங்க பாஜகவினர், குறிப்பாக நட்டா, அமித்ஷா, ஆதித்யநாத், பிரதமர் மோடியின் பொய்யும், வன்மமும் நிறைந்த பேச்சுகள் வகை தொகையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. மோடியின் பேச்சைக் கேட்டு வலதுசாரி ஆதரவாளர்களே ‘பிரதமரின் பேச்சு புதிய தாழ்வு (‡ஞுதீ டூணிதீ)’ என்று நெளிகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கொடுத்ததுடன் தன் கடமையை முடித்துக் கொண்டது.

மோடி இராஜஸ்தானில் பேசும்போது ‘இந்துக்களின் சொத்தைப் பிடுங்கி இஸ்லாமியர்களுக்குக் கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்’ என்று வன்மத்தை உமிழ்ந்தார். ‘உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்து முஸ்லிம்களிடம் கொடுத்து விடும்’ என குஜராத் பரப்புரையில் இழிவான குற்றச்சாட்டை வெட்கமின்றி முன்வைத்தார்.

‘பட்ஜெட்டில் 15 விழுக்காடை முஸ்லிம்களுக்குக் காங்கிரஸ் கொடுப்பதாகவும் இந்து பட்ஜெட், முஸ்லிம் பட்ஜெட் என காங்கிரஸ் பிரிக்க முயற்சிக்கிறது’ என்றும் பிரதமர் என்ற தகுதியின் தரம் தொலைத்துப் பேசினார். தெலுங்கானாவில் பேசும்போது ‘இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது’ என்று குறிப்பிட்டார். மேற்கு வங்காளத்தில் பேசும் போது ‘மேற்கு வங்க அரசு ஏன் இந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த வேண்டும்’ என்று வினா எழுப்பி பிளவு ஆயுதத்தை வீசினார்.

சத்தீஸ்கரில் பேசும்போது ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே அதில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாகக் கூறியிருந்தேன். நாட்டின் அரசமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி ஒதுக்கீட்டில் 15 விழுக்காட்டை மத அடிப்படையில் காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் முஸ்லிம்களுக்கு வழங்கத் திட்டமிட்டு வருகிறது. என் உயிர் உள்ளவரை முஸ்லிம்களுக்கு நான் இடஒதுக்கீடு கொடுக்க மாட்டேன்’ என்று தம் வெறுப்பைத் தீர்த்துக் கொண்டார்.

‘பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்’ என்று குஜராத்தில் பேசும்போது பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்தார். உத்தரப்பிரதேசத்தில் பேசும்போது ‘காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஆணவத்தின் உச்சத்தில் நின்று உரக்கக் கத்தினார்.

ஒடிசாவில் பேசும் போது ‘ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பூரிஜெகன்நாதர் கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாக’ தமிழ்நாட்டின் மீது குற்றப்பழி சுமத்தினார். மோடியின் பிதற்றல்களின் உச்சமாக ‘என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பாரத்மாதா தான். நான் பயாலஜிக்கலாகப் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை’ என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மூன்றாம் கட்டத் தேர்தலில் 60 முறை இந்து முஸ்லிம் குறித்த வெறுப்பை பேசிய பொய்யின் மன்னன் மோடி ‘இந்து முஸ்லிம் என பிளவுபடுத்தி தன் வாழ்நாளில் அரசியல் செய்ததில்லை’ என்று பெரும்பொய் பேசினார். ஃபாசிஸத்தின் உண்மை முகத்தை ஒவ்வொருவரும் நன்கு உணரும் தருணம் இதுதான். இந்தியாவின் அவமானமாக மாறிய மோடியின் பேச்சுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்