ஃபாசிஸத்தின் வீழ்ச்சி‘காங்கிரஸ் இல்லாத இந்தியா, எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சி, எங்களை மிஞ்சியவர்கள், எங்களை வெல்பவர்கள் எவரும் இல்லை, இந்து ராஷ்டிரம், ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் பெருங்கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்.
காங்கிரஸின் வங்கிக் கணக்கு முடக்கம், இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்து சிறையிலடைப்பு, குவிக்கப்பட்ட அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு உஈ, வருமானவரித்துறை, இஆஐ மூலம் தொடர் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள். எதிரணியை பலவீனப்படுத்த இந்தியா கூட்டணியை முன்னின்று நடத்தியவரையே வளைத்துப் போடுதல், ஆபரேஷன் நிர்விரோத் போன்ற தேர்தலுக்கு முந்தைய குதிரைபேரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராதரவுடன் பெரும் பண விளையாட்டு, தேர்தல் பத்திர முறைகேடு, தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவிலுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையத்தை வைத்து ஆட்டுவித்தல், உங மூலமான முடிந்தவரை முறைகேடு, போலி வாக்குப் பதிவுகள், வாக்குச்சாவடி தில்லுமுல்லு, ஊடகங்களை விலைக்கு வாங்கி தங்களை பூதாகரப்படுத்துதல், தவறான தேர்தல் கணிப்புகளை வழங்கவைத்தல் என்ற பாஜகவின் அசுரத்தனமான பெரும்பெரும் திட்டங்கள் அனைத்தையும் தாண்டித்தான் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது.
இராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிஏஏ, பொது சிவில் சட்டப் பூச்சாண்டி என்ற பாஜகவின் அஜெண்டாவை மக்கள் அறவே விரும்பவில்லை என்பதைத் தான் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. உ.பியில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி ஃபைசாபாத்தில் பாஜகவைத் தோற்கடித்து ஒரு தலித் வேட்பாளரை மகத்தான வெற்றி பெறச் செய்ததன் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.
வகைதொகையற்ற பொய்கள், கட்டற்ற வெறுப்புப் பேச்சுகள், பிளவுவாத அரசியல், கடவுளின் அவதார ஆன்மிக வேடங்கள் அனைத்தையும் மக்கள் வெறுத்து ஒதுக்கியதன் விளைவுதான் இந்தத் தேர்தல் முடிவுகள். 400க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று மார்தட்டிய பாஜக தனிப் பெரும்பான்மை இல்லாமல் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் தயவை நாடி மண்டியிட்டு நிற்க வேண்டிய நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எந்த இடமும் இல்லை என்ற அழுத்தமான செய்தி மீண்டும் ஒருமுறை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் இந்த வெற்றியைத் தக்கவைத்து முன்னேற வேண்டும். இந்தியா கூட்டணி ஃபாசிஸத்திற்கு எதிராகத் தங்கள் கைகளை இறுதிவரை இணைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் ஆட்சியாளர்களை விடவும் வலுவான எதிர்க்கட்சியை நம்பி யிருக்கின்றார்கள். ஃபாசிஸத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஃபாசிஸம் வீழட்டும், ஜனநாயகம் ஓங்கட்டும்.