மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பூரண மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு
வி.எஸ்.முஹம்மத் அமீன், ஜூலை 01-15, 2024




2024 ஜூன் 19ஆம் நாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் கண்பார்வை, உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளனர்.

கள்ளச்சாரய வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி, சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், எஸ்.ஐ, எழுத்தர், சிறப்பு எஸ்.ஐ ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி,
எஸ்.பி ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.ஜி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளினால் கள்ளச்சாராயம் ஒழிந்துவிடாது. மேலும் அதிகரிக்கும் என்பதற்கான உதாரணம்தான் கடந்த ஆண்டு நிகழ்வும் இதுபோன்ற நடவடிக்கைகளும். 2023 மே 13ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் 1842 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1,500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 19,000 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 8 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு எந்தப் பலனும் இல்லை. அதே நடவடிக்கைகளைத் தான் இப்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இதுவும் எந்தப் பலனையும் தரப் போவதில்லை.

இதுவரை கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள் மீது 4,63,710 வழக்குகள் பதியப்பட்டு 4,61,084 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 565பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளனர். 16,51,633 லிட்டர் கள்ளச் சாராயம், 1,42,019 லிட்டர் எரிசாரயம், 28,79,605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளது. மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், தொழிற்சாலைகள் தணிக்கை செய்யப்பட்டன. ஆனாலும் எந்தப் பயனும் இல்லை.

தமிழ்நாட்டில் 2003-04 ஆண்டில் 3,639.33 கோடிக்கு விற்ற டாஸ்மாக் மதுவிற்பனை 2023-24 ஆண்டில் 45,855.67 கோடியாக 12 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் 1,734 கோடிக்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது. மதுக்குடியர்களைப் பெருக்கிவிட்டு கள்ளச்சாராயத்தை ஒழிப்பது சாத்தியமில்லை. பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும், குடிப்பவர்கள் நோயாளிகளாகி விடுவார்கள், வேறு போதை வஸ்துகள் பெருகிவிடும் என்ற காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையே இந்த கள்ளச்சாராயப் பெருக்கம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் மது ஆறு ஓடியபோதும் கள்ளச்சாரய விற்பனை கொடிகட்டித்தான் பறக்கிறது.

மதுவினால் வருமானம் வருகிறது என்ற காரணம் அவமானமானது. குஜராத், நாகலாந்து, மிசோராமைத் தொடர்ந்து பீஹார் மாநிலத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது. அந்த மாநிலங்களெல்லாம் வருமானத்திற்கு என்ன செய்கின்றன? பீஹாரில் 2016 ஆம் ஆண்டு மதுவிலக்கு கொண்டுவந்த பிறகு 2023 ஆண்டில் 20 விழுக்காடு குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் 1.8 கோடிப்பேர் குடியிலிருந்து மீண்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கள்ளச்சாரய மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அரசு விற்கும் சாராயத்தால் தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் செத்து மடிகின்றனர். இவர்களை மெல்ல மெல்லக் கொன்ற குற்றவாளிகள்
யார்? அரசு மதுவினால் இதுவரை எத்தனை மக்களைக் கொன்றிருக்கிறது?

கள்ளச்சாராயம் அன்று கொல்லும், சாராயம் நின்று கொல்லும். குடி நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். குடும்பங்களில் பிரச்னை, அடிதடி, கொலை, தற்கொலைகள், விபத்து என மாநிலத்தின் வளர்ச்சியே சீரழிந்துள்ளது. மது அனைத்துத் தீமைகளின் வாசல். மதுக்கடைகளைத் திறந்துவிட்டு போதையில்லா தமிழ்நாடு படைப்பது என்பது பகல் கனவு.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. தங்கள் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்து குரல்கள் எழும்பி, அடங்குகின்றன. ஆனால் இதில் எல்லாருக்குமே பொறுப்பு இருக்கிறது. இதற்கு அனைவருமே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை, அரசுக்குத் தெரியாமல் இந்தத் தொழில் நீண்டகாலம் செழிப்பாய் நடைபெற வாய்ப்பில்லை. இந்தக் குற்றத்தை மறைக்கவும்,
திசை திருப்பவும் 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி அரசு தப்பிக்க நினைக்கிறது. ஆனால் இவையாவும் தீர்வல்ல.

கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்காகக் குரல் எழுப்புவதைப்போல அனைவரும் ஒன்றிணைந்து மதுவுக்கு எதிராக மாபெரும் குரல் எழுப்ப வேண்டும். பூரண மதுவிலக்கைக் கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் தீவிர கவனம் செலுத்தி பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுவை ஒழிக்காத வரை இங்கே தீமைகளைக் களைய வழியே இல்லை. மக்களுக்குத் தேவை நிவாரணங்களும், தற்காலிக நடவடிக்கைகளும் அல்ல. நிரந்தரத் தீர்வு வேண்டும். பூரண மதுவிலக்கே அதற்கான ஒரே வழி.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்