மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இளம்பருவத்தினர் சந்திக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்
- ஐ.ஜலாலுதீன், தாளாளர், குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், சென்னை, ஜூலை 01-15, 2024



கல்வியின் நோக்கம் ஒழுக்க நெறியையும் மனிதப்பண்பையும் முறைப்படுத்துவதாகும். ஒரு சமூகம் வழிகெடுவதற்கும் நல்வழியில் பீடுநடை போடுவதற்கும் ஊடகமாகத் திகழ்வதே கல்வியின் தலையாயப் பண்பு. ஆனால் இன்று மாறிவரும் சூழல் இந்த நோக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.

எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து கூறினாலும் தவறான பாதையைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதே இளம் தலைமுறை இளைஞர்களின் தற்காலப் பண்பாக உள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தில் கல்வியின் தாக்கங்களைக் காட்டிலும் தவறான முன்னுதாரணங்களின் தாக்கங்களே முந்தி நிற்கின்றன.

உலகிற்குப் பல சவால்களை விட்டுச் சென்ற கொரோனா பெருந்தொற்று தொடர்ச்சியாகக் கற்று வந்த கல்வியின் சூழலைப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது. இது ஏற்படுத்திச் சென்ற பெரும் தாக்கங்களில்
சிக்கிக் கொண்ட இளைய சமூகம் தங்களை அறியாமலே தவறான பாதைக்குச் செல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பள்ளி, கல்லூரிகளில் பாடம் படிக்கவும், தேர்வு எழுதவும் பயன்படும் என்று அனுமதிக்கப்பட்ட அலைப்பேசிகளில் இன்றளவும் இளைஞர்கள் சிக்கி அடிமைபட்டுக் கிடப்பதைக் காணமுடிகிறது. கல்வித் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டிய இணையமும் ஊடகங்களும் தவறுகளைச் செய்யத் தூண்டும் விதமாக மாறியுள்ளன. இளைய சமூகத்தைத் தொடர்ச்சியான அலைப்பேசி பயன்பாடு, சமூக வலைதளச் செயல்பாடுகள் தவறுகளையும் சரிதான் என வாதாடவும் போராடவும் வைக்கின்றன!

இதன் சாதக பாதகங்களை எடுத்துக் கூற அக்குழந்தைகளுக்கு யாருமில்லையோ என்ற கேள்வி எழுவதும் இயற்கையே! ஏனெனில் ஒரு வயதுக் குழந்தையும் கூட பிஞ்சுக் கைகளால் தொடுதிரை தள்ளு
வதையும் தானாக அலைப்பேசியைப் பயன்படுத்துவதையும் பெருமையாகப் பாவிக்கும் தலைமுறையாக நாம் மாறிவிட்டோம்.

பரவலாக ஊடகங்களில் பேசப்படும் இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகளும் பாடல்களும் உடல்மொழிகளும் சமூகத்தில் கண்டிக்கப்படுவதைக் காட்டிலும் இரசிக்கப்படுகின்றன. இவை பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் நல்லொழுக்கத்தையும் சிதைத்து வருகின்றன.

கொரோனா காலத்திற்குப் பிறகான சிறார்களின் மனநிலையும் ஒரு வித எதிர்மறை குணங்களையே வெளிப்படுத்துவதாய் உள்ளன. தேவையில்லா கவலைகள், பயஉணர்வு, பொறுப்பற்ற தன்மை, அதீத கோபம் ஆகியவற்றை தொடர்பில்லாத நேரங்களிலும் சூழல் களிலும் வெளிப்படுத்துவதையும் ஆங்காங்கே காண முடிகிறது. அவ்வப்போது சில தற்கொலைச் செய்திகளையும் கேட்க முடிகிறது.

இன்றைய நவீன சமூக ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் சிறார்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவையாவன:

நேர விரயம் (Time Consumption)

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் திரும்பத் திரும்ப பயன்படுத்தத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறார்கள் இவற்றில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். அவர்களது ஆரோக்கியமான நேரங்கள் வீணாகி வருகிறது. போதைப் பொருளை உட்கொண்டால் எப்படி தன்னை மறந்து இருப்பார்களோ அதைப் போலவே தான் செய்வது என்னவென்று தெரியாமல் அடிமையாகியுள்ளனர். தொடர்ந்து இவற்றில் மூழ்கி இருப்பதால் கவனச் சிதறல்கள் ஏற்பட்டு யாரிடமும் எந்த விவகாரத்திலும் நிதானமாக இருப்பதில்லை.

கூடுதல் தகவல் சுமை (Information Overload)


தேவையைவிட மிக அதிகமான தகவல்கள் கிடைப்பதால் எதன் பக்கம் முடிவு எடுக்க வேண்டும் என்ற தெளிவில்லாமல் மிகவும் சிரமப்படுகிறர்கள். எந்தத் தகவல் சரியானது எது தவறானது என்ற முடிவுக்கு வருவதும் மிக சிரமமாகிறது.

ஒப்பீடு மூலம் அழுத்தம் (Comparison and Pressure)

நம்முடன் ஒப்பீடு செய்யக் கூடாத நபர்களுடன் ஒப்பீடு செய்தே வாழவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மிக அதிகமான மன அழுத்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இது முதலாம் வகுப்பு பயிலும் மாணவனிலிருந்து தொடங்கி ஆராய்ச்சி பயிலும் மாணவர்கள் வரை இந்தத் தாக்கம் ஏற்படுகிறது.

உணர்வுத் தாக்கம் (Emotional Impact)


தேவையற்ற தவறான தொடர்புகள் அதிகமாகி எதிர்மறையான சிந்தனைகள் நாளுக்கு நாள் அதிகமாகிறது. மறைவாக எல்லாக் காரியங்களையும் செய்யும் பழக்கம் அதிகமாவதால் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் பதற்றமும் மன அழுத்தமும் நாளுக்கு நாள் மாணவர்களின் நிதானத்தை இழக்கச் செய்கிறது. முடிவு எடுக்க முடியாமல் இது சரியா அல்லது அது சரியா எனத் தடுமாறும் நிலையில் வீழ்கின்றனர்.

தள்ளிப் போடுதல்  (Procrastination)

காலை பல் துலக்குவதிலிருந்து இரவு தூங்கும் வரைக்கும் அன்றாட வாழ்வின் மிக முக்கியமான அலுவல்கள் அனைத்தையும் தள்ளிப்போடும் தீய பழக்கம் உருவாகிறது. மிக முக்கியமான வேலைகளையும் அதன் அவசியமும் அறியாத அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். தனது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான கடமைகளைக் கூடத் தள்ளிப் போட்டு ஆபத்தான நிலைக்கு குடும்பச் சூழல் செல்ல நேரிடுகிறது. இறுதி நேரத்தில் பணிகளை அவசர அவசரமாகச் செய்வதனால் குழப்பமும் விரயமும் ஏற்படுகிறது.

திட்டமிடல் இல்லாமை (Lack of Planning)

தான் செய்யும் காரியங்களில் சரியான தெளிவு இல்லாமல் பயனுள்ள நேரங்களை எல்லாம் வீணாக்குகின்றனர். அவசியமில்லாத பல்வேறு வேலைகளைச் செய்வதனால் முறையற்ற வாழ்வை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படுகிறது. தான் செல்லும் பாதையிலும் தெளிவு இல்லாமலும் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்யாத சூழலும் தான் மிகைத்து இருக்கிறது. இதனால் பிறரின் ஆதரவையும் உதவியையும் எதிர்நோக்கியுள்ளனர்.

சுகாதாரப் பிரச்னை  (Health Issues)

முறையான தூக்கமும் உடற்பயிற்சியும் விளையாட்டுகளும் இல்லாமல் சோர்வுடனேயே நாள்களைக் கழிக்கின்றனர். சிறு வயதிலேயே உலகின் எல்லா நோய்களுக்கும் பலியாகின்றனர். இளம் வயதிலேயே தொடர் நோய்கள் தொற்றிக் கொள்கின்றன. காலை உணவை முறையாக எடுத்துக் கொள்ளத் தவறுகின்றனர். ஆபாச வலைதளங்களுக்கு நிர்பந்தமாகச் செல்வதால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

ஆரோக்கியமற்ற குடும்பம் (Unhealthy Family)

முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்பு ஏற்படுவதால் பெற்றோர்களுடனான நெருங்கிய தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. பெற்றோர்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழும் தன்மையை
இழந்து தனிமையை அதிகமாக விரும்பும் நிலை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தமும் உடல் பலவீனமும் நாளுக்கு நாள் அதிகமாகிறது.

சுகாதார புள்ளிவிவரங்களின்படி 70% நபர்கள் எதிர்மறையான உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 25% முதல் 50% வரையில் கல்வி மேம்பாட்டில் தடுமாறுகின்றனர். 30% மாணவர்கள் எதிர்மறையான உறவுகளில் சமூக வாழ்வை இழந்து போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.

இப்படியாகப் பல அதிர்ச்சியளிக்கும் பல்வேறு தாக்கங்களை இன்றைய இளைய சமுதாயம் சந்திக்கின்றனர். இத் தாக்கங்களில் சிக்கிவிடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கிச் செல்லும் மாணவர்களும் இந்தச் சமூகத்தில் வாழவே செய்கின்றனர். அவர்களைப் போன்ற சிறார்களை அதிகமாக்குவது நம்மீதான தார்மிகப் பொறுப்பாகிறது. அதற்கான வழிகளைப் பார்போம்.

பெற்றோர்களுக்கான கடமைகளும் பொறுப்புகளும்

அந்தக் கால குழந்தைகளைப்போல நிலாச் சோறு சாப்பிட பெரும்பாலான குழந்தைகள் இப்போது தயாராக இல்லை. இதற்குக் காரணம் மாறிவரும் சூழலும் பெற்றோர்களின் தவறான குழந்தை வளர்ப்பு முறைகளுமே ஆகும். கி.மு, கி.பி என்பது மருவி கொ.மு (கொரோனாவிற்கு முன்) கொ.பி (கொரோனாவிற்கு பின்) என்ற பேச்சு வழக்கு வந்தாலும் வியப்பதற்கில்லை. எனவே பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மீதான பெற்றோரின் கடமைகளும் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அதிகக் கவனம் செலுத்தி அவர்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் நல்வழிப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவ்வாறு கவனம் செலுத்தப்படாத பிள்ளைகளின் வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பது மட்டும் உறுதி.

போதுமான அளவிற்குப் பிள்ளைகளை அவ்வப்போது கண்காணிப்பது இன்றைய சூழலில் தேவையான ஒன்றாகும். தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களின் மூலமும் தவறான விசயங்கள் நுகரப்படுவதைக் கூடுமான வரையில் தடுக்க வழிசெய்திடல் வேண்டும். அதற்கு முன்பு அவர்களின் அலைப்பேசி பயன்பாட்டின் நேரத்தை நெறிப்படுத்தவேண்டும்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அலைப்பேசிகளில் கச்ணூஞுணணாச்டூ இணிணணாணூணிடூ என்னும் அமைப்பை நிறுவ வேண்டும்; அதுமட்டுமல்லாமல், தவறான திரைப்படங்களை பெற்றோர்கள் கொண்டாடும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும். தனி அறைகளில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் பார்ப்பதைத் தவிர்த்து எல்லோருக்கும் முன் பார்க்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் எவ்வழியோ, பிள்ளைகள் அவ்வழியே என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தாலே பிள்ளைகளின் வாழ்வை வழிகேட்டிலிருந்து தடுக்கலாம். பிள்ளைகளின் முன்னால் தங்களுக்குள் இருக்கும் ஊடல் கூடல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பிள்ளைகளின் ஒழுக்க நலனில் அக்கறை காட்டுவதே ஆகச் சிறந்த குழந்தை வளர்ப்பு என்பதை உணர்வது அவர்களின் கடமையாகும்.

ஆசிரியர்களுக்கான கடமைகளும் பொறுப்புகளும்

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக இளம்வயதினரின் நலனில் பெரும் அக்கறையும் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். சமுதாயத்தில் பிள்ளைகளின் நல்வழியை உறுதிசெய்ய அவர்களுக்கு இல்லாத அக்கறை வேறு எவருக்கு இருக்க முடியும்? 

பள்ளி கல்லூரிகளில் ஒழுக்க நெறியைப் போதிப்பதில் ஆசிரியர் சமூகம் மேலோங்கி நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே ஒவ்வொரு ஆசிரியரும் வாழும் உதாரணமாய்த் திகழ்வதே முறையாகும். ஆசிரியர் பணி என்பது சேவை மனப்பான்மையை முதன்மையாகக் கொண்ட தொழிலாகும். மற்ற எல்லாப் பணிகளைக் காட்டிலும் சமூகத்தின் விழுமங்களை உயர்த்திக் காட்டுவது இப்பணியின் முதன்மை நோக்கம்.

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவர்கள் வழி தவறிச் செல்வதைத் தடுக்க வேண்டும். கண்டிப்புகளைக் கையிலெடுத்துத் திருத்த வேண்டுமே தவிர கடுமையான தண்டிப்புகளுக்கு அவர்களை உள்ளாக்கக் கூடாது. இது எதிர்மறை வலுவேற்றம் (‡ஞுஞ்ச்ணாடிதிஞு ணூஞுடிணஞூணிணூஞிஞுட்ஞுணணா) என்னும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.

கல்வியின் முக்கியத்துவத்தையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதிக்க வேண்டும். நற்பண்புகளையும் சிந்தனைகளையும் ஒருசேர ஊட்டும் விதமாக
ஆசிரியர் சமூகம் உழைக்க வேண்டும். ‘பெற் றோரால் கவனிக்கப்படாத பிள்ளை தான் மட்டும் சீரழியும். ஆனால் ஆசிரியரால் கவனிக்கப்படாத பிள்ளைகள் சமூகத்தையும் சீரழிக்கும்’.

சமூகத்தின் மீதான பொறுப்புகளும் கடமைகளும்

சிறார்களின் வாழ்வியலை நெறிப்படுத்துவதும் முறைப்படுத்துவதும் சமூகத்தின் அங்கமாய்த் திகழ்கிற ஒவ்வொருவரின் மீதான கடமையாகும். பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளைச் சமூக சேவைகளில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் அலைப்பேசியோடு செலவிடும் நேரம் குறைய வாய்ப்பு உண்டு. சமூகப் பொறுப்புகளைச் சிறார்கள் உணரும் வகையிலான விழிப்பு உணர்வு நிகழ்வுகள் சமூகத்தில் அரங்கேற வேண்டும். வயதில் மூத்த இளைஞர்கள் சிறார்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். தவறான முன்னுதாரணங்களாய்த் திகழக் கூடாது. சமூகப் பெரியோர்கள் மதிப்பு, அனுபவக் கல்வியைத் தரத்தோடு சிறார்களுக்குப் போதிக்க வேண்டும்.

நாளைய தலைவர்கள் மட்டும் அல்ல நீங்கள். இன்றே ஆட்சி செய்பவர்கள் நீங்கள் என வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி நல்ல வாழ்க்கைச் சூழலை உருவாக்க பின்வரும் அம்சங்களைச் பின்பற்ற இறை வேதம் வழிகாட்டுகிறது.

நம்பிக்கை - வழிபாடு

எல்லா நேரங்களிலும் இறைவன் நம்மைக் கண்காணித்து கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தோடு தனது வழிபாடுகளை நிறைவேற்றுதல். இறைவேதத்துடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துதல். இறைவேதத்துடன் நட்பு கிடைத்துவிட்டால் உலகில் எந்தச் சக்தியினாலும் நம்மை வழிகெடுக்க முடியாது. (பார்க்க: திருக்குர்ஆன் 2:163, 4:103)

நபியைப் பின்பற்றல்

இறைத்தூதரின் வாழ்வே முன்மாதிரியாக இருக்கிறது. நமது வாழ்வினை சிறப்பாகவும் செம்மையாகவும் அமைத்துக் கொள்ள பல்வேறு சிறப்பான வழிகாட்டுதல்கள் இறைத்தூதரின் வாழ்வில் இருக்கிறது. இறைத்தூதரின் வாழ்வினைப் பின்பற்றும் இளைய சமுதாயம் இறைவனுக்கு நேசமானவர்களாக திகழ்கிறார்கள். அதனால் தவறான வழிகாட்டுதல்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்க வாய்ப்பு உருவாகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 33:21)

அறிவையும் திறமையையும் வளர்த்தல்

வாசிப்புப் பழக்கம் நமது அறிவை வளர்க்கும், செம்மைப்படுத்தும். இதன் மூலம் நல்ல திறமைகளும் ஆற்றல்களும் வளரும். காலச்சூழலுக்கு ஏற்ற பல்வேறு தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் அம்சங்களில் கவனத்தைத் திருப்ப வேண்டும். இதனால் நேர விரயம் இல்லாது தைரியமும் நம்பிக்கையும் ஏற்படும். தனிப்பட்ட திறமைகள் மூலம் மிக உயர்ந்த பொறுப்புகளை அடையும் ஆளுமைத் திறனை வளர்த்தல். (பார்க்க: திருக்குர்ஆன் 96:1 , 39:9)

நல்ல நட்புச் சூழல்

நமது நண்பர்கள் யார் என்பதை வைத்து நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். அந்த அளவிற்கு நமது ஆளுமைத் திறன் மேம்பாட்டில் நட்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் யாருடன் பழகுகிறோம் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். அதுபோல் தேவையற்ற நட்புகளை நாம் தேர்வு செய்யக்கூடாது. இத்தகைய தேர்வின் மூலமே சமூக வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களாகத் திகழ முடியும். ஆக்கப்பூர்வமான சமூக சேவை களில் ஈடுபட்டு நம்மை ஆரோக்கியமான வட்டத்திற்குள் துடிப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். (பார்க்க: திருக்குர்ஆன் 2:83)

குடும்ப உறவைப் பேணுதல்

நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர்களுடன் வீண் தர்க்கம் விவாதம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அவர்களது பிரார்த்தனை மூலம் தான் நமது வாழ்வு சிறக்கும். (பார்க்க: திருக்குர்ஆன் 31:14)

நீதி நியாயத்தைப் பேணுதல்

சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அடிப்படையான கூறுதான் நீதி நியாயத்தைப் பேணுவது. நமது எல்லாத் தொடர்புகளிலும் நீதி நியாயத்தைப் பேணும் பண்புகளை உருவாக்க வேண்டும்.

பொறுமையும் விடாமுயற்சியும் நம்பிக்கையான வெற்றிகரமான வாழ்விற்குப் பொறுமையும் விடாமுயற்சியும் மிக முக்கியமான அம்சமாகும். இலக்குகளைச் சரியாகத் தீர்மானித்து பொறுமையுடனும் நிதானத்துடனும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். விடாமுயற்சி இல்லையெனில் ஏமாற்றமும் பயமும் தொற்றிக் கொள்ளும். இறைவன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இம்மண்ணில் முன்னேற்றத்தின் பாதையில் வீறு நடைபோட்டு பயணிக்கலாம்.

Visit us : www.goodwordschool.in

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்