மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

S.M.பாக்கர் : ஒரு நெடும் பயணம் நிறைவடைந்தது
வி.எஸ்.முஹம்மத் அமீன், ஜூலை 01-15, 2024






இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 2024 ஜூன் 20ஆம் நாள் இரவு இறைவனின் அழைப்பை ஏற்றார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். (நாம் இறைவனிடமிருந்தே வந்தோம். அவன் பக்கமே மீளக்கூடியவர்களாய் இருக்கின்றோம்)


மாணவர் பருவத்திலிருந்தே இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தில் தொடங்கிய பயணம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற நெடும்பயணத்தில் நிறைவடைந்திருக்கின்றது. தம் வாழ்நாளின் பெரும்பகுதியை சமுதாயக் களத்திற்குத் தந்தவர் அன்பு நண்பர் பாக்கர்.

போராட்டங்கள், மார்க்க உரைகள், அழைப்பியல் நிகழ்வுகள், தொலைக்காட்சி நிகழ்வுகள் என்று சுற்றிச் சுழன்றாடியவர். ஓங்கி ஒலிக்கும் குரல், கம்பீரமான தோற்றம் கொண்டிருந்தாலும் எஸ்.எம். பாக்கர் எளிமையும் இனிமையும் நிறைந்தவர். முதல் சந்திப்பிலேயே தோள்மீது கைபோட்டு உரிமையோடு பேசும் இயல்புடையவர். உள்ளத்தில் உதிப்பதை ஒளிவற்றுப் பேசுபவர். அவர் இருக்கும் அவை எப்போதும் விவாதத்திற்கும், சிரிப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். எளிதில் இரங்கும் மனம் அவருடையது. எல்லாருக்கும் கொடுப்பவர்.

1999 நவம்பரில் மானுட வசந்தம் தொலைக்காட்சி நிகழ்வை IFT தொடங்கிய சில வாரங்களிலேயே இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொடர் தொடங்கியது. மானுட வசந்தம் நிகழ்வின் எடிட்டிங்கிற்காக வடபழனி RC ஸ்டூடியோவுக்கு நாங்கள் செல்லும்போது பாக்கர் அவர்களும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வின் எடிட்டிங்கிற்காக வருவார். மிக நெருக்கமாகப் பேசும் வாய்ப்பு எங்களுக்கு அங்கே வாய்த்தது.

கூட்டமைப்புக் கூட்டங்கள், நிகழ்வுகளில் சந்தித்து உரையாடும் போதெல்லாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்தும், சமரசம் இதழ் குறித்தும் பேசுவார். ஜமாஅத் தலைவர்கள் குறித்த விசாரிப்புகள் எப்போதும் அவரிடம் இருக்கும். அவர் சிறந்த அழைப்பாளர். அழைப்பியலில் ஆர்வம் மிகுந்தவர். இதரமதச் சொந்தங்களுக்கு ஆயிரக்கணக்கில் திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்தவர். திருக்குர்ஆன் IFT வெளியீட்டை அதிகமாக வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.

2019 ஜனவரி 3ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டல மாநாட்டையொட்டி மலர் ஒன்று தயாரித்தோம். அந்த மலரில் அன்புச் சகோதரர் எஸ்.எம்.பாக்கரின் கட்டுரை இடம்பெற வேண்டும் என விரும்பினோம். தொடர்பு கொண்டோம். ‘ஜமாஅத்தே இஸ்லாமி எனது தாய்வீடு’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை உடனே அனுப்பித் தந்தார். (அந்தக் கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றுள்ளது)

‘ஜமாஅத்தே இஸ்லாமி எனது தாய்வீடு’ என்பதை ஜமாஅத் கூட்டங்களில் பேசும் போது மறக்காமல் குறிப்பிடுவார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமை அலுவலகம் வந்து எங்களுடன் உரையாடும்போதும் அதைச் சொல்லத் தவறமாட்டார்.

துடிப்பான களப்போராளி, சிறந்த ஊடகவியலாளர், சிந்தனையாளர், அருமையான சமுதாயத் தலைவர், மிகச் சிறந்த பண்பும் அன்பும் நிறைந்த நல் மாந்தர். எஸ்.எம்.பாக்கர் அவர்களுடையை இழப்பு இஸ்லாமிய தமிழ்ச் சமுதாயத்தின் இழப்பு.

சகோதரர் பாக்கர் அவர்களுடைய பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! அவருடைய பிழைகளை மன்னித்து அருள்வானாக! உயரிய சுவனத்தை அவருக்குப் பரிசாக வழங்குவானாக! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களும், நண்பர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்