1982 முதல் 1985 வரை சென்னை புதுக்கல்லூரியில் மாணவனாக இருந்து வெளியே வந்த காலம். 1986..! இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (Student Islamic Movement of India) அறிமுகமான காலம். அங்குதான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற மாபெரும் இயக்கத்தைக் கண்டு கொண்டேன்.
பிரிக்கப்படாத இந்தியாவின் ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்த அல்லாமா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய குத்பா பேருரை புத்தகத்தைப் படித்தேன். அதன் மூலமாக ஓர் அற்புதமான மார்க்க அறிவும், தூர நோக்கும், தெளிந்த அரசியல் ஞானமும் கொண்ட இயக்கத் தலைவரைக் கண்டு கொண்டேன்.
அதுவரை, இஸ்லாம் என்றாலே சடங்குகளும், சம்பிரதாயங்களும் கொண்ட ஏனைய மதங்களைப் போன்ற ஒன்றுதான் என்ற என் எண்ணம் உடைத்தெறியப்பட்டது. இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் அற்புதம். பிறரை நல்வழியின்பால் அழைத்துச் செல்கின்ற உயரிய மார்க்கம். கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என எப்படி வேண்டுமானாலும் வாழலாம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பதெல்லாம் இல்லை. மனிதன் வாழ நெறி உண்டு, தெளிவு உண்டு, நல்லெண்ணம் உண்டு, பிறர் நலம் நாடும் நல்வினை உண்டு. மனிதன் பிறந்ததே இறைவனை வணங்கி இறைவழி நடப்பதற்கே என்பதை எடுத்துச் சொல்லி இதுதான் இஸ்லாம் என்று புரிய வைத்தது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் நூல்கள்தாம்..!
ஒன்றா, இரண்டா? எத்தனை வகையான நூல்கள், எத்தனை விதமான சிந்தனைகள்..! அத்தனையும் குர்ஆனையும், ஹதீஸையும் உள்ளடக்கி உலகத்தில் இன்று மட்டுமல்ல, உலகம் உள்ளவரை ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் தருகின்ற முத்துக்களாக அந்த நூல்களைப் பார்த்த போது ‘இதுதான் எனது சொத்துகள்’ என நான் வரிந்து கொண்டபோது என்னுள் ஏற்பட்ட இன்பத்தை இன்றைக்கும் சொற்களால் வரைந்துவிட முடியாது.
மொட்டையடித்து, தொப்பி போட்டு, தலைப்பாகை அணிந்து, வெள்ளைக் கைலி உடுத்தி, மிக நீண்ட ஜிப்பா அணிந்த பெரியவர்களாலும், பட்டம் பெற்றவர்களாலும் மட்டுமே இஸ்லாத்தைச் சொல்ல முடியும் என்ற நிலை இருந்தபோது, பேண்ட், சட்டை, பெல்ட், ஷூ, டை சகிதம் சிகை அலங்காரம் செய்த இளைஞர்களும் இஸ்லாத்தைச் சொல்லமுடியும் என்று உணர்த்தியவர்கள் இவர்கள்தாம்.
1991ஆம் ஆண்டு நான் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தமிழ் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர் மௌலானா ஏஜாஸ் அஸ்லம் சாஹிப் அவர்கள். அத்தனை நிர்வாகிகளும் மௌலானாவைச் சந்தித்தபோது எங்களுக்கு அறிவுரை வழங்கினார். சில வாதங்கள் எழுந்தது. எங்கள் கேள்விகளுக்கு முகத்தில் புன்னகை மாறாமல் பதிலளித்தார். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருந்தார்கள் என்பது என் எண்ணங்களில் நிழலாடுகிறது.
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் தளகர்த்தாவான மௌலானா ஜமீல் அஹமது சாஹிப் உர்து மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தபோதும் கூட நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழில் வரக் காரணமானவர். அவருடைய நினைவுகளை மறக்க முடியாது. அள்ள அள்ளக் குறையாத அறிவமுதம் அவர். அதுபோன்ற நினைவு கூரத்தக்க ஆளுமை மொழி பெயர்ப்புகள் அனைத்திலும் தமிழ் மொழியை அழகுற அமைத்த தொண்டியைச் சார்ந்த தண்ணன் மூஸா காக்கா.
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் உன்னதமான வெளியீடான அல்லாமா மௌதூதி அவர்கள் உருதுவில் மொழிபெயர்த்த திருக் குர்ஆனை தமிழ் மொழியில் அழகிய இலக்கிய நடையோடு, தேவையான இடங் களில் குறிப்புகளோடு, இன்றைக்கும் கூட பேராசிரியப் பெருந்தகைகளால் பாராட்டுப் பெற்ற திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவராகவும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத்தலைவராகவும் இருந்த மௌலவி குத்புத்தீன் அஹ்மது பாகவி அவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல்கள், கேள்வி பதில்கள், விவாதங்கள் என்றும் நினைவை விட்டு நீங்காதவை.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புக் குழுவில் மௌலானாவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி, செய்யது முஹம்மது மதனி இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி உலகளாவிய இஸ்லாமிய அறிவையும், வரலாற்றையும் எனது எண்ணத்தில் உறுதியாகப் பதித்தவர். செய்யது முஹம்மது மதனி ஹதீஸ்களை எப்படி அணுக வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான்.
அதுபோல உலக வியாபாரத்திற்கு மத்தியில் மறுமைக்கான வியாபாரம் செய்த இயக்க முன்னோடி ஹெச்.அப்துர் ரகீப் சாஹிப் இன்றும் சுறுசுறுப்புக் குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவரும் நம் அன்புக்குரியவர். எனது நினைவில் நீங்காமல் நிற்கின்ற மற்றொரு ஆளுமை எஸ்.என். சிக்கந்தர். மாணவர் பருவத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழகத் தலைவராக இருந்து இன்று வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியப் பொருளாளராகப் பணியாற்றி வருகிறார்.
எங்களுக்கு இஸ்லாமிய பயிற்சி கொடுத்து, ஒழுக்க வாழ்வை சிறக்கச் செய்ய உள்ளத்திற்கு வைத்தியம் பார்த்த, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் துணைத்தலைவராக இருக்கின்ற டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்களை எப்போதும் மறக்க இயலாது. இவர்கள் மட்டுமல்ல அண்ணன் குலாம் முஹம்மத் அவர்கள் என் அன்பிற்குரியவர், இன்றைக்கும் என்னோடு பாசத்தோடும், நேசத்தோடும், உரிமையோடும், உறவாடிக் கொண்டிருக்கின்ற, அன்றைய இந்திய மாணவர் இயக்கத்தில் எனக்குத் தலைவராக இருந்து வழிகாட்டிய பேராசிரியப் பெருந்தகை தமுமுக, மமகவின் தலைவராக இருக்கின்ற பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பை எனக்கு அறிமுகப்படுத்தியவர்.
எனக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்திற்குமிடையிலான உறவு, தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த உறவு இன்ஷா அல்லாஹ் தொடரும். ஏனென்றால் இது என் தாய்வீடு.
(2019 பிப்ரவரி 3ஆம் நாள் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டல மாநாட்டின்போது வெளியிடப்பட்ட மலரில் வெளியான கட்டுரை)