மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வக்ஃப் உரிமையை அபகரிக்கும் திட்டம்
அமீன், ஆகஸ்ட் 16-31, 2024


ஆகஸ்ட் 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான சிறுபான்மை விவகார அமைச்சகம் ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன், மேம்பாட்டுச் சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் வக்ஃப் வாரியம் தொடர்பான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. 44 திருத்தங்களைக் கொண்ட இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் எழுப்பியதால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆ#வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது.

மனிதர்கள் இயற்றும் எந்த ஒரு சட்டமும் திருத்தத்திற்கு உள்ளாவது இயல்பே! ஒரு சட்டம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்காகக் காலச்சூழலுக்கேற்ப அச்சட்டம் திருத்தத்திற்கு உள்ளாவது அவசியம். வக்ஃப் சட்டம் 1954இல் இயற்றப்-பட்டது. 1995இல் இச்சட்டம் திருத்தங்களுடன் முழுமை
பெற்றது. 2013ஆம் ஆண்டிலும் இச்சட்டம் திருத்தப்பட்டு வக்ஃப் வாரியத்-திற்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அப்போதெல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. இப்போதுள்ள சட்டத் திருத்தம் வக்ஃப் உரிமையை அபகரிக்கும் நோக்கில், மதச் சுதந்திரத்தைத் தகர்க்கும் வகையில், அரசியல் அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26, 30க்கு எதிராக இருப்பதுதான் எதிர்ப்புக்கான காரணம்.

முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் ஏராளமான சொத்துகளை முஸ்லிம் சமுதாய நலனுக்காகத் தானமாக வழங்கிய வக்ஃப் சொத்துகள் பள்ளிவாசல், மதரஸா, கல்வி உதவி நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வக்ஃப் வாரியத்தின் கீழ் 7,85,934 சொத்துகளும், 9.4 இலட்சம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 3.56 இலட்சம் எஸ்டேட்களும் உள்ளன. இந்திய இராணுவம், இரயில்வேக்கு அடுத்தபடியாக அதிகச் சொத்துகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் வாரியச் சொத்துகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியே இந்தச் சட்டத் திருத்த மசோதா.

வக்ஃப் நிலத்தில் உரிமை கோர வக்ஃப் கவுன்சிலுக்கோ, வாரியத்திற்கோ உரிமை இல்லை. உரிமை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே இருக்கிறது என்றும் இஸ்லாமியப் பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க இச்சட்டத் திருத்த மசோதா வழிவகை செ#கிறது. ஆனால் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக பதர் சயீத் பொறுப்பு வகித்துள்ளார். இப்போதுள்ள 12 உறுப்பினர்களில் இருவர் பெண்கள். மத்திய வாரியப் பொறுப்பில் பெண்கள் அங்கம் வகித்திருக்கின்றார்கள். உண்மை இவ்வாறு இருக்க ஒன்றிய அரசு பெண்களுக்கான உரிமையைப் பெறுத் தருவதைப்போன்ற போலித் தோற்றத்தைச் சித்திரிக்க முயல்கிறது. ஒரு சமயத்தவரின் வழிபாட்டு முறையில், சொத்துகளில் இன்னொரு வழிபாட்டு முறையில் உள்ளவர்களை நியமிப்பது பெரும் குழப்பதையே ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட வக்ஃப் வாரியம் கண்காணித்து, நிர்வகிக்கிறது. வக்ஃப் வாரிய நிலங்கள் மாநில அரசின் வருவா#த்துறை நில அளவை ஆணையர் தலைமையில்தான் அளவிடப்படுகின்றன. எனவே இத் திருத்தத்திற்கான தேவை இப்போது என்ன எழுந்துள்ளது? வக்ஃப் சொத்துகள் ஒன்றிய, மாநில அரசுகளால், தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். அவற்றை மீட்க வாரியத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பது தவறான முடிவாகும். அப்படியே திருத்தம் தேவைப்பட்டால் அதை வக்ஃப் வாரியம், கவுன்சில், முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஆலோசித்தே முடிவு செ#யப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு இப்போது கொண்டுவரத் துடிக்கும் வக்ஃப் சட்டத் திருத்தம் அரசியல் அமைப்பு வழங்கிய மதச் சுதந்திரத்தைத் தகர்க்கும் ஆபத்தான நடவடிக்கையாகும். இஸ்லாமிய சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும் சொத்துகளில் அரசு தலையிடுவது இந்திய மதச் சார்பின்மைக்கு எதிரானது. இது சிறுபான்மை உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல மதத்தின் தனித்தன்மைக்கு உலை வைக்கக்கூடிய செயலாகும்.

இது ஜனநாயக, மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடியது, நல்லிணக்கத்தைப் பாதிக்ககூடியது. எனவேதான் உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிராகரிக்கப்பட வேண்டும். கூட்டுக் குழுவில் இம்மசோதா தோல்வியடைய வேண்டும். ஒன்றிய அரசு இதுபோன்ற மதவெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்