கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலைப் பயிற்சி பெண் மருத்துவர் ஆகஸ்ட் 8ஆம் நாள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இச்சூழலில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவையின் இருநாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை அம்மாநில சட்ட அமைச்சர் மலோய் கதக் தாக்கல் செய்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இம் மசோதாவிற்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து அபராஜிதா 2024 சட்டம் நிறைவேற்றப்பட்டது.
‘அபராஜிதா பெண்கள், குழந்தைகள் மசோதா 2024’ என்ற இச்சட்டத் திருத்தம், பெண்களைப் பாலியல் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கவும், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குப் பிணையின்றி ஆயுள் தண்டனை வழங்கவும் வகை செய்கிறது. இந்த விவாதத்தின்போது, பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ‘அபராஜிதா காவல்படை’ என்ற சிறப்புப் படை உருவாக்கப்பட உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. பெண்களைச் சிதைத்துக் கொல்கின்ற கயவர்களைத் தூக்கிலிட வேண்டும். இச்சட்டத்தின் மூலம் பாலியல் வன்கொடுமைகள் ஓரளவுக்குக்
குறையலாம். ஆனால் பாலியல் வன்கொடுமைகளை முழுமையாக ஒழிக்க முடியாது. சிந்தனை மாற்றமும், ஒழுக்க விழுமங்களும் இங்கே கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இஸ்லாம் தண்டனைகளைக் கடுமையாக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தீமையின் வாசல்களை அடைத்துவிடுகிறது. தீய பார்வை, தீய பேச்சு, ஆண் பெண் கலப்பு, சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறுதல், மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் போன்ற அனைத்து வாசல்களையும் அடைத்துவிடுகிறது இஸ்லாம். இதற்கு மாற்றாக நெறிசார்ந்த இல்லற வாழ்வை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, அதற்கும் வழிகாட்டுகிறது.
பெண்கள் குறித்த சிந்தனையை, பார்வையை இஸ்லாம் மிகத் தெளிவாக வழங்குகிறது. ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றவர்கள். அவர்கள் இணைகள். உடல் அமைப்பைப் பொறுத்து ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொறுப்புகளை இஸ்லாம் வேறுபடுத்திக் காட்டுகின்ற வேளையில் பெண்களுக்குச் சமநீதி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. பெண்களைப் பாதுகாப்பதும், அவளுக்கான கண்ணியத்தையும், உரிமையையும் வழங்குவதையும் இஸ்லாம் ஆணுக்குக் கட்டளையிடுகிறது. பெண்கள் குறித்த சிந்தனை மாற்றம், குற்றம் ஏற்படாத வகையிலான சூழல் மாற்றம், முறையான நீதிவிசாரணை, சாட்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகே இஸ்லாம் மரண தண்டனை விதிக்கச் சொல்கிறது.இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நிகழ்வதை நாம் உணர முடியும்.
இறைவன் வகுத்துத் தந்த வாழ்வியல் சட்டங்களை ஆய்ந்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் குற்றங்களை முழுமையாக ஒழிக்க முடியும்.