பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித்கள், அரசை எதிர்ப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபடுவர்கள், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் நடைமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு, பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் அரசின் செயலைக் கடுமையாக விமர்சித்தனர்.
நீதிபதிகள் ஒய்.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு இவ்வழக்கு வந்தபோது, ‘குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகளை, கட்டிடங்களை மட்டும் இடிப்பது என்பது அரசியல் அமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது. குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களை மட்டும் இடிப்பது ஏன்? என்று அவர்கள் கேள்வியெழுப்பியதுடன் அக்டோபர் 1 வரை வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றைப் புல்டோசர் மூலம் இடிக்கத் தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி குடிசைப்பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றங்களை அகற்ற பாஜக பரப்புரை மேற்கொண்டது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் ‘ஆபரேஷன் கிளீனிங் டிரைவ்’ பரப்புரையை மேற்கொண்டது. முஸ்லிம்கள், தலித்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் குறியீடாகப் புல்டோசரைப் பயன்படுத்தி தன் ஆதிக்கத்தை நிறுவ ‘புல்டோசர் பாபா’வாக யோகி ஆதித்யநாத் தன்னை அடையாளம் காட்டினார். அதனால் பாஜக ஆதரவாளர்கள் தங்கள் கைகளில் புல்டோசரைப் பச்சை குத்திக் கொள்ளும் அவலம் ஏற்பட்டது. மே 17ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசும் போது ‘புல்டோசர்களை எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆதித்யநாத்திடம் பாடம் பெறவேண்டும்’ என அறிவுறுத்தினார்.
வீடு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21இன் கீழ் வாழும் உரிமையின் ஓர் அம்சம். அமைப்புச் சட்ட விதி 14ஐயும் மீறும் செயல் இது. ‘புல்டோசர் நீதி’, ‘புல்டோசர் ராஜ்ஜியம்’ என்று ஃபாசிஸம் சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறுவதாகவும், சட்ட நிறுவனங்களின் மீது மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் சட்ட நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
சர்வதேச மனித உரிமையை அப்பட்டமாக மீறும் இச்செயல் உலகளவில் சர்வதேச அமைப்புகளின் கண்டனத்திற்கு வழிவகுக்கும். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி சகாப்தத்திற்கு நிகராக இந்தியாவில் இத்தகைய இடிப்புகள் நிகழ்வதாகத் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘சட்டப் பூர்வமாக நோட்டீஸ் கொடுத்து அதன் பிறகே அகற்ற முடியும். இடிப்பு என்பது இறுதி நடவடிக்கை. புல்டோசர் நீதி சட்டத்தின் ஆட்சியைத் தகர்ப்பதாகும்’ என்கிறார்.
வீட்டுவசதி, நில உரிமைகள் தொடர்பியல்(ஏஃகீN) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 1.5 இலட்சம் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டதாகவும், 7 இலட்சம் பேர் வீடற்றவர்களாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் முன்வந்தது வரவேற்கத்தக்கது. ஃபாசிஸ ஆட்சியாளர்களை அகற்றுவதன் மூலமே இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.