மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வயநாடு பேரழிவும் பேரன்பும்
-குளச்சல் அசீம், ஆகஸ்ட் 16-31, 2024


2024 ஜுலை 30

அதிகாலை இரண்டு மணி..

கடவுளின் தேசம் என்று பெருமிதத்துடன் குறிப்பிடப்படும் கேரள மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பிரியர்களின் மனம் கவர்ந்த வயநாடு
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்தது. தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்கள்
போன்று இயற்கையை ரசித்து ஓய்வெடுக்க சுற்றுலாப் பிரியர்களின் முதல் தேர்வாக அமையும் வயநாடு பேரிடரில் சிதைக்கப்பட்டு அலங்கோலமாகக் காட்சி தரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை எனும் இரண்டு கிராமத்தை முற்றிலும் நிர்மூலமாக்கி நூற்றுக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கிய துயரம் ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாள்களாகவே அந்தப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. எல்லோரையும் போல முந்தைய தினம் இரவில் உண்டு உறங்கிய ஐநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் நள்ளிரவு முதல் பெய்த கனமழை வெள்ளத்தின் தீவிரம் உணராமல் தங்கள் வீடுகளிலேயே இருந்ததால் மலை மேலிருந்து அதிகாலையில் உருண்டு விழுந்த பாறாங்கற்கள் நசுக்கி வீடுகளோடு பரிதாபமாக மண்ணில் புதைந்தனர்.
எங்கு பார்த்தாலும் மரண ஓலமும், உற்றார் உறவினர்களை இழந்தவர்களின் கண்ணீர் கதறல்களும் மட்டுமே வெளிப்பட பேரிடரின் தீவிரத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து உதவுவதற்கு முன்பு அந்தப் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கடிக் கப்பட்டதுடன் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சேறும்சகதி-யும் நிறைந்த பகுதி-களில் முன்னேறிச் செல்வது கூட மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.

வயநாடு  மலைப்பகுதியில் தோன்றி அமைதியாகப் பாயும் சாலியார் நதி வழக்கமான பாதையை விட்டு பேரிரைச்சலுடன் நாலா புறங்களிலும் பாய்ந்து மக்களின் உயிரையும் உடமைகளையும் கொண்டு போனது. ரப்பர் தோட்டங்களும், தேயிலைத் தோட்டங்களும் நிறைந்து காணப்படும் வயநாடு மலைப்பகுதி சாலியார் நதியின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நிலச்சரிவு ஏற்பட்டு அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களைச் சேறும் சகதியும் நிறைந்த மண்ணைக் கொண்டு மூழ்கடித்த கொடூரமான காட்சிகள் நம் நெஞ்சை
உலுக்கியெடுக்கின்றன. வயநாடு மாவட்டம் சந்தித்த பேரழிவுகள் நாட்டின் கவனம் பெற்று மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டது. கேரள மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் பேரிடர் மீட்புப் படையினர், இந்திய இராணுவத்தின் மீட்புப் படையினர், சமுதாய இயக்கங்களின் தன்னார்வலர்கள் என்று பெரும் எண்ணிக்கையிலான
மக்கள் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

உயிருக்குப் போராடியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து சுகாதார மையங்களில் சேர்த்த மீட்புக் குழுவினர் மண்ணில் புதைந்த உடல்களை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இந்தக் கட்டுரை எழுதும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை 406 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணித்தவர்களில் பலரின் உடல் பாகங்கள் இல்லாமலும், பாறையிடுக்குகளில் இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மட்டுமே மீட்க முடிந்தது. இதுபோக குழந்தைகள் பெண்கள் உட்பட காணாமல் போன 160 பேரைத் தீவிரமாகத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நூறு குடும்பங்களின் எதிர்காலம் கண நேரத்தில் காணாமல் போன வயநாடு பேரழிவின் காட்சிகள் பார்ப்போர் கண்களைப் பனிக்க வைக்கிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொத்த நபர்களும் மரணித்த வீடுகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோரை இழந்து அநாதையான குழந்தைகள் என்று எஞ்சிய அனைவரிடமும் ஒரு சோக வரலாறு மட்டுமே உள்ளது. ஜுலை மாதம் 29ஆம் தேதி வரை ஓரளவு வசதியான சூழலில் வாழ்ந்து பழகியவர்கள் மறுநாளே அனைத்தையும் இயற்கையின் தீராப்பசிக்கு இரையாகி நிவாரண முகாம்களில் நாள்களைக் கழிக்கும் பரிதாப நிலையை எண்ணி எண்ணி புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உற்றார் உறவினர்கள் உயிரோடு புதைந்த, இதுவரை உழைத்துச் சம்பாதித்த அனைத்தும் இழந்தது என எல்லாம் மறந்து இயல்பு நிலைக்கு அந்த மக்கள் திரும்ப நீண்ட காலம் ஆகலாம். இயற்கைப் பேரிடரிலிருந்து நாம் பாடம் பெற வேண்டும். இந்தப் பேரிழப்பு களிலும் நெகிழச் செய்யும் பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். வயநாடு மீண்டெழ வேண்டும். அனைவரும் தோள் கொடுப்போம்.

களப்பணியாளர்கள்

வயநாடு மாவட்டத்தில் மிகப்பெரிய எண்-ணிக்-கை-யில் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்ட சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரண உதவிகளுமாக ஆயிரக்கணக்கான மக்கள் களத்தில் இறங்கியது நெகிழ்வான செய்தி. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்களை வாரி வழங்கிய மலையாளிகளின் தாராளம் பாராட்டிற்குரியது. கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்குப் பணம் அனுப்பாதீர்கள் என்ற சங்கப் பரிவாரங்களின் அறைகூவலைப் புறக்கணித்து ஜாதி மதம் அரசியல் கடந்து கோடிக்கணக்கான ரூபாய் மனமுவந்து வழங்கிய மனிதர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தாய்ப்பால் தானம்

பேரழிவில் தாயை இழந்து முகாம் களில் பாதுகாக்கப்படும் பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தானமாகக் கொடுக்க முன்-வந்த இளம் பெண்களின் தயாளகுணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ‘பேரழிவில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவையெனில் எனது மனைவி தயாராக இருக்கிறார். எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது’ என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்த அஸீஸ் என்பவரின் அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்மணி தனது ஒரு வயதுப் பெண் குழந்தையுடன் கணவரின் லோடு ஆட்டோ விலேயே 200 கி.மீ பயணித்து நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்படும் குழந்தைகளுக்குப் பாலூட்ட விருப்பம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலும் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் முன்வந்தது பண்டைய காலத்தின் செவிலித்தாய் முறையை நினைவு படுத்தியது.
கேரள ஆயுதப்படை பெண் காவலர் ரஷ்மி தற்போது பிரசவ விடுப்பில் இருப்பதாகவும், பேரழிவில் மீட்கப்பட்ட ஏதாவது ஒரு குழந்தையைக் கொண்டு தந்தால் விடுமுறை காலம் முடிவதுவரை எனது ஆண் குழந்தையுடன் சேர்த்து பாலூட்டி பராமரிப்பேன் என்று கூறியது காக்கிச் சட்டைக்குள் சுரந்த கனிவு என்றே எழுதத் தோன்றுகிறது.
மற்றொரு வேண்டுகோளும் இந்தப் பேரழிவில் வெளிப்பட்ட வலியுடன் கூடிய வார்த்தைகள். இதற்கு முந்தைய எந்தப் பேரழிவிலும் எழாத வேண்டுகோளும் கூட! பெற்றோரை இழந்து அநாதையான குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க பலரும் முன்-வந்த-தைப் பார்க்க மனித நேயம் மரிக்கவில்லை என்பதை உணர்த்தியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவர்களின் பேட்டிகளைப் பார்க்கும் போது வார்த்தைகள் சங்கடத்தால் இடறியதைக் காண முடிந்தது. தங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத வேதனையில் வயநாடு பேரழிவில் மீட்கப்பட்ட குழந்தைகள் ஆணோ பெண்ணோ எந்த ஜாதியும் பார்க்காமல் நாங்கள் வளர்க்கிறோம் என்று தம்பதியராக விருப்பம் தெரிவித்த பலரின் குழந்தையின்மை குறித்த வலிகள் கூட வார்த்தைகளால் எழுத முடியாதது. குழந்தைகளைத் தத்தெடுக்க உடனடி யாக முடியாதது என்றும், அரசின் நிர்வாக ரீதியான நடைமுறைகள் உண்டு என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம் கொடுக்கும் அளவுக்குக் குழந்தைகளை வளர்க்க விருப்பம் தெரிவித்து வந்தவர்கள் எண்ணிக்கை இருந்தது.

களத்தில் IRW, Team Welfare

வயநாடு மலைப்பகுதியில் முண்டக்கை, சூரல்மலை கிராமங்கள் பெருமழை நிலச்சரிவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது எனும் தகவல் கேள்விப்
பட்டு அதிகாலையிலேயே அங்கு சென்று முதன் முதலில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பேரிடர் மீட்புப் பணியில் மேலாண்மை பயிற்சி
பெற்ற Ideal Realif Wng (IRW) தன்னார் வலர்கள். முதலில் சென்ற பத்துப் பேர் அடங்-கிய குழுவினர் பேரழிவின் தீவிரத்தை உணர்ந்து அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு பகுதி தன்னார்வலர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களும் மீட்பு உபகரணங்-களுடன் வந்து சேர நூற்றுக்கணக் கானவர்கள் இணைந்து மீட்புப் பணியில் அரசின் இதரத் துறையினரோடு களமிறங்கினர். ஆண்களுக்கு இணையாக IRW பெண் தன்னார்வலர்களின் சேவை, இக்கட்டான இந்தத் தருணத்தைக் கையாண்ட மன தைரியத்தை தொலைக்காட்சி சேனல்கள் மிகவும் பாராட்டி செய்தி வெளியிட்டன. வயநாடு முண்டக்கை பகுதியில் மீட்கப்படும் ஜனாஸாக்கள் நிலம்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக் குழுவினருக்கு அடையாளம் காண உதவவும், போஸ்ட்-மார்ட்டம் முடிந்து ஆண் பெண் ஜனாஸாக்கள் என்று வேறுபாடு பார்க்காமல் சுத்தப்படுத்தி கஃபன் பொதிந்து ஆம்புலன்ஸில் ஏற்றி அடக்கத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சேவைப்-பிரிவு IRW வின் பெண் தன்னார்வலர்கள்.

அதுபோலவே வெல்ஃபேர் கட்சியின் தன்னார்வலர்களைக் கொண்ட Team Welfare தன்னார்வலர்களும் இணைந்து அனைத்துப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர்.
உருக்குலைந்த நிலையிலும், கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட  நிலையிலும் வரும் ஜனாஸாக்களைப் பார்த்து ஆண்களே பின்வாங்கும் இக்கட்டான சூழ்நிலையில் மன தைரியத்துடன் நிலைமையை கையாண்ட சகோதரிகளின் தியாகத்துடன் கூடிய அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மாறாஞ்சேரி பகுதியில் பெண் ஜனாஸாக்களைக் குளிப்பாட்டி கஃபன் பொதியும் சேவைகள் செய்து வருகிறார் 21 வயது ஷிஃபா. இவரது வாப்பும்மா தன்னுடன் பேத்தி ஷிஃபா-வையும் 15 வயதிலேயே உடன் அழைத்துச் சென்று ஜனாஸாவுக்குச் செய்யும் நடைமுறைகளைக் கற்பித்தது இதுபோன்ற சூழலில் உதவுகிறது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அவரது தந்தை ஷிஹாப்.

அது என்ன IRW?

பேராசிரியர் சித்தீக் ஹஸன் சாஹிப் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கேரள மாநிலத் தலைவராக இருந்தபோது அவரது சிந்தையில் உதித்த பேரிடர் காலங்களில் மீட்பு, நிவாரணப் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டதுIdeal Realif Wng (IRW). கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தத் தன்னார்வலர்களின் தன்னலமற்ற சேவை, தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் கொரோனா பாதித்து மரணமடைந்த உடலை அடக்கம் செyய உதவியது என்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டதைப் பாராட்டி அன்றைய கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா விருது வழங்கிப் பாராட்டினார். இப்போது ஆண்களுக்கு இணை-யாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற பெண் தன்னார்வலர்களும் இந்த மகத்தான பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கேரள மாநில அரசின் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மத்தியில் IRW தன்னார்வலர்களின் சேவை எப்போதும் பேருதவியாக இருக்கும். பெரும் விபத்து, பேரிடர் காலங்களில் IRWவின் சேவைகள் எல்லோராலும் கவனிக்கப்படும் போது Ideal Realif Wng (IRW) என்ற ஒரு தன்னார்வ மேலாண்மை அமைப்பை நிறுவி அதன் பணிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேரும் போதும் மர்ஹும் சித்தீக் ஹஸன் சாஹிபும் நினைவில் வந்து போகிறார்.

பள்ளிவாசலும், இமாமும்

வயநாடு பேரழிவிற்கு முந்தைய தினம் மக்ரிப், இஷா தொழுகைக்கான பாங்கு சொல்லுவதுடன் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் செய்தார் பள்ளிவாசல் இமாம். ‘மழை மிக அதிகமாகப் பெய்கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்து கொள்ளுங்கள். தங்கள் குழந்தகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று பள்ளிவாசல் ஒலிபெருக்கியில்  தொடர்ந்து அறிவிப்பு செய்தார் வயநாடு முண்டக்கை பள்ளிவாசல் இமாம் ஷிஹாபுத்தீன் ஃபைஸி. மழைவிடாது பெய்து வந்த நிலையில் தனது வீட்டுக்குக் கூடச் செல்ல முடியாமல் இரவு வெகுநேரம் கழித்தே உறங்கச் சென்றார் இமாம். அதிகாலையில் கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளமும் பெரும் நிலச்சரிவும் பள்ளிவாசலையும் விட்டு வைக்கவில்லை. அந்த இமாமையும் விட்டு வைக்கவில்லை. மக்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட இமாமை பகல் முழுவதும் ஜமாஅத் மக்கள் தேடினர். மறுநாள் காலை பள்ளிவாசலில் அவர் தங்கியிருந்த அறையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டார். முண்டக்கை ஜும்ஆ பள்ளிவாசல் இப்போது தண்ணீர் அடித்துச் சென்ற கட்டிடத்தின் மீதமுள்ள ஒற்றைச் சுவருடன் உயர்ந்த மினாராக்களோடு காட்சி தருகிறது.

டாக்டர் லவீனா முஹம்மதுவும், சபீனாவும்

சூரல்மலை கிராமத்தை இரண்டாகப் பிளந்து சாலியார் நதி கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் தடம் தெரியாமல் உடைந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆற்றின் மறுகரையில் சிக்கிய மனிதர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், அபாயகரமான அந்த நதியின் குறுக்கே இராணுவ வீரர்களால் தற்காலிகமாக ஒரு வலிமையான கயிறு தயார் செய்யப்பட்டது. அந்தக் கயிற்றில் தொங்கியபடி இராணுவ வீரர்கள் மறுகரைக்குச் சென்று காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராகச் சுமந்து மீண்டும் கயிற்றில் தொங்கியபடித் திரும்பி வந்தனர். இது ஆபத்தான முயற்சி என்பதை உணர்ந்த இராணுவத்தினர் சுகாதார ஊழியர் ஒருவரை இந்தக் கயிறு வழியாக ஆற்றின் மறுகரைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சையளிக்க முடிவு செய்தனர்.

அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் யாராவது செல்வதற்குத் தயாரா என்று இராணுவத்தினர் தயங்கியபடி கேட்க ஆண்கள் ஒருவரும் தயாராகாத நிலையில் தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் முன்வந்தவர் தமிழ்நாட்டிலுள்ள கூடலூ-ரைச் சேர்ந்த நர்ஸ் சபீனா. சற்றும் தாமதிக்-காமல் பாதுகாப்பு உடையணிந்து மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டியைத் தோளில் சுமந்து கயிற்றில் தொங்கியபடி மறுகரைக்குச் சென்று படுகாயங்களுடன் போராடிய 36 பேருக்கு முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்றி தலைப்புச் செ#திகளில் இடம் பிடித்துள்ளார். சிறிதுநேரம் கழித்து இதே போன்ற சாகச  முறையில் கயிற்றில் தொங்கிய படி மறுகரைக்குச் சென்று சிகிச்சையளித்தவர் வயநாடு மிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் லவீனா முஹம்மது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்