சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. மனிதன் சுதந்திரமானவன். தான் விரும்புகின்ற மதத்தை, கொள்கையை ஏற்றுக் கொள்ள, பின்பற்ற அவனுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பும் உடையை அணிய, விரும்பும் உணவை உண்ண, தன் கருத்தைச் சொல்ல, தான் விரும்பியபடி வாழ்வதற்கு மனிதனுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவையாவும் ஓர் வரம்பிற்கு உட்பட்டது. எல்லையற்ற, கட்டுப்பாடற்ற சுதந்திரம் எதுவும் இல்லை. சமூக அமைதிக்கு உட்பட்டுச் செயல்படுவதுதான் சுதந்திரம்.
தன் எண்ணங்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இறைவனுக்கோ, சட்டத்திற்கோ, சமூகத்திற்கோ இல்லை எனக் கருதி மனிதன் தன் சுயவிருப்பங்களைச் சுதந்திர வேட்கை மூலம் அடைந்து கொள்ளத் துணிகிறான். இதனால் சமூக நலன்கள் சீரழிவதைப் பற்றி அவன் கவலை கொள்வதில்லை. சுதந்திரம், தனிமனித உரிமை என்ற பெயரில் தார்மிக நெறிமுறைகள் மீறப்படுவதை ஆதரிக்கும் அமைப்புகளும், அதற்கு ஆதரவானவர்களும் இதன் மூலம் தங்களை முற்போக்குவாதிகளாக முன்நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. ஆபாசம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு மாற்றமான உறவுகள் அதிகரிக்கின்றன. ஒழுக்கக்கேடானவை என்று கருதப்பட்டவை இப்போது இயல்பாகிக் கொண்டு வருகிறது.
திரைமறைவில், இருளில் செய்தவற்றை இப்போது எவ்வித வெட்க உணர்வும், குற்ற உணர்வுமின்றி செய்யத் தலைப்-பட்டுவிட்டனர். இயற்கைக்கு மாறான உறவுகளுக்கு ஆதரவாகச் சட்ட ரீதியான அங்கீகாரத்திற்கும் முயற்சிகள் நடக்கின்றன. ‘என் வாழ்க்கை, என் முடிவு’ என்பன போன்ற முழக்கங்கள் இளைஞர்களை குழப்பம், தனிமை, விரக்தி, மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் தனி மனிதன் மட்டுமின்றி சமூகத்தின், நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடைப்படுகிறது. சமூகத்தில் தீமைகள் வேகமாகப் பரவி வருகின்றன.
முழு பிரபஞ்சத்தின் செயல்பாட்டை நாம் ஆய்வு செய்தால் சீரான செயல்பாட்டிற்குச் சில ஒழுங்குமுறைகள் தேவை என்பதை உணர முடியும். நம் உடல் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைவில் உள்ளது. நம்மையும் முழு பிரபஞ்சத்தையும் படைத்த இறைவன் இந்த உலகிலும், மறு உலகிலும் அமைதியான, வெற்றியான வாழ்வைப் பெற சில விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் வகுத்தளித்துள்ளான். அவற்றை நாம் தார்மிக விழுமங்கள் என்று அழைக்கின்றோம். இந்த தார்மிக விழுமங்கள் பின்பற்றப்படாததால் ஏற்படும் ஆபத்துகளை எடுத் துரைத்து விழிப்பு உணர்வை ஊட்டுவது நமது கடமையாகும். சுதந்திரம் குறித்த தவறான கருத்தாக்கங்களில் தனிநபர்களைச் சிக்க வைக்கும் தாரளவாத சித்தாந்தங்களின் தவறுகளையும், ஆபத்தையும் விளக்குவதுடன், அவற்றின் பிடியிலிருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். உண்மையான சுதந்திரத்தை உணர்த்தி ஒழுக்க வாழ்வின் பக்கம் அவனைத் திருப்ப வேண்டும். அதன் மூலமே இந்த உலகிலும் மறு உலகிலும் மனிதன் வெற்றி பெற முடியும்.
அனைவரும் ஒன்றிணைந்து களமாடுவோம்
இந்த நோக்கத்திற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி 2024 செப்டம்பர் மாதம் முழுவதும் ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் அகில இந்திய- அளவில் பரப்புரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஓ.மும்தாஜ் பேகம் பரப்புரை குறித்து நம்மிடம் பேசும்போது ‘ஒழுக்கமே சுதந்திரம் (Morality is freedom) என்ற மையக்-கருத்தில் அகில இந்திய அளவில் இந்தப் பரப்புரையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மகளிர் அணி முன்னெடுக்கிறது. பெண்கள் முன்னின்று நடத்துகின்-றோமே தவிர இது பெண்களுக்கான பரப்புரை அல்ல. ஆண்களும் இதில் பங்கேற்க வேண்டும். ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதுபோல இது முஸ்லிம்களுக்கான பரப்பு-ரை-யும் அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தை நோக்கி இந்த அழைப்பை விடுக்கின்றோம்.
வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தார்மிக விழுமங்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை முதலில் எங்கள் ஊழியர்களிடமிருந்து தொடங்குகின்றோம். திருக்குர்ஆன், நபிவழியின் அடிப்படையில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நடைமுறை உதாரணங்களாகத் திகழ்வது இயக்கப் பணியின் ஒரு பகுதி என்பதை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகின்றோம். ஒழுங்கு மீறல் இயக்க வாழ்வை மட்டுமின்றி இந்த உலக, மறு உலக வாழ்வையும் பாதிக்கும் என்பதை இதன் மூலம் அவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் மூலம் இஸ்லாமிய அறிவைப் பெற வேண்டியதன் அவசியத்தை விளக்கி, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதைக் குறித்த விழிப்பு உணர்வை இஸ்லாமிய சமுதாய மக்களிடம் ஏற்படுத்த விரும்புகின்றோம். தார்மிக விழுமங்களை வலுப்-படுத்துவதிலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பொறுப்பை உணர்த்த விரும்பு-கின்றோம். ஒழுக்க விழுமங்களின் அடிப்-படையில் சமுதாயத்தை வழிநடத்த சமுதாயத் தலைவர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுச் சமூகத்திற்கு ‘உண்மையான சுதந்திரத்தின் அடிப்படையே அற நெறி தான் என்பதை எடுத்துரைக்கின்றோம். பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல், உண்மையான மகிழ்ச்சியைத் தரும் சுதந்திரத்தைப் பின்பற்றி வாழ ஒவ்ö-வாரு--வரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். திருமண உறவிற்கு அப்பாற்பட்ட எந்த ஒரு தவறான உறவும் ஆபத்தானவை என்பதை விளங்க வைத்து அறநெறி, ஒழுக்க வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்து-வதோடு கட்டற்ற சுதந்திரத்தின் ஆபத்துகள் குறித்தும் இளைய தலைமுறைக்கு அழுத்தமான செய்தியை விடுக்கின்றோம்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் உள்ள பொதுவான தார்மிக விழுமங்களைக் கவனப்படுத்துவதோடு அமைதி, வளர்ச்சியை உள்ளடக்கிய, அனைவருக்குமான உரிய சுதந்திரத்திற்கான பாதையை இஸ்லாமிய வாழ்வியல் ஒளியில் விளக்குவதற்காக முழு முயற்சி மேற்கொள்ள உள்ளோம்.
இதற்காக பொதுமக்கள் சந்திப்பு, அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பள்ளி, கல்லூரி, மதரஸா மாணவ, மாணவியர் சந்திப்பு, பெற்றோர் சந்திப்புகளை நடத்த உள்ளோம். மஹல்லா நிர்வாகிகள், ஜும்ஆ உரைகள் என இதில் ஆண்களின் பங்களிப்பும் பெரிதும் இருக்கும். சகோதர சமுதாயச் சொந்தங்களுடன் இணைந்து மது, போதை, ஆபாசம், வரம்பு மீறிய உறவுகள் போன்ற பெரும் தீமைகளுக்கு எதிராகக் களமாட பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளோம்.’ என்று குறிப்பிட்டார்.