14 ஆம் நூற்றாண்டின் இருள் சூழ்ந்த உலகின் இருளை அகற்றி ஒளி விளக்காய் சுடர் வீச வந்த தூதர் தாம் நபி(ஸல்) அவர்கள். உலகில் வரலாறு படைத்தவர்கள் சிலர்; வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர். வரலாறாகவே வாழ்ந்து காட்டியவர் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. ஈரம், கருணை, தொலைநோக்குப் பார்வை, அறிவு எனப் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.
23 ஆண்டுகளில் அரபுலகத்தை மாற்றியமைத்து உலகத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். ஆன்மிகத் தலைவராகவும், குடும்பத் தலைவராகவும், படைத் தளபதியாகவும், ஆட்சியாளராகவும், நீதிபதியாகவும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே!
அன்றைய உலகம் அடிமைத்தனம், அடக்குமுறையின் உறைவிடமாக இருந்தது. வட்டி, விபச்சாரம், பெண்அடிமை, மது என்ற தீமைகள் அரபுலகிலும் கோலோச்சின. காட்டுமிராண்டிகளாக, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பிரிவினையோடு சதா சண்டையிட்டுக் கொண்டிருந்த சமுதாயமாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட ஒழுக்கச் சீரற்ற சமுதாயத்தில் தான் ஒழுக்கத்தை விதைத்து தீமைகளை வேரோடு பிடுங்கி நாகரிகமிக்க நற்சமுதாயமாக நபி(ஸல்) அவர்கள் மாற்றிக் காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சிறு வயது முதல் பொய் பேசியது இல்லை. சிலைகளை ஒருபோதும் வணங்கியது இல்லை. ஆபாசப் பேச்சுகளை அவர்கள் பேசியதில்லை. ஒழுக்கத்தின் பிறப்பிடமாக இருந்தார்கள். நாயகம் நற்குணத்தின் தாயகம் என்று சொன்னால் மிகையல்ல. சிறந்த முன்மாதிரி என அல்லாஹ் குர்ஆனில் நபிகளாரின் நற்குணத்திற்குச் சான்று கூறுகின்றான். ‘(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங் கருணையுடையவனுமாவான்.’ (திருக்குர்ஆன் 3:31)
திண்ணமாக நற்குணத்தின் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றீர் என்று இறைவன் கூறுவதிலிருந்தும், நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காக வந்திருக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் தம்மைக் குறித்துச் சொல்வதிலிருந்தும் அண்ணல் நாயகத்தின் வாழ்க்கை நோக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். வெளியில் ஒருவர் சிறந்தவராக இருப்பார். ஆனால் வீட்டிற்குள் அவரைக் குறித்து நன்மதிப்பு இருக்காது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலும் சிறந்து விளங்கினார்கள். மனைவிகளிடத்தில் அன்பு மட்டுமல்ல, நீதியுடன் நடந்தார்கள். மதிப்பு மிக்கவராகவும் இருந்தார்கள். மனைவியரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தார்கள். ஒருமுறை அபிசீனியர்கள் ஈட்டி எறிந்து விளையாடுவதைக் காண நபி(ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா(ரலி) விருப்பப்பட்ட போது, நபி(ஸல்) அவர்கள் விளையாட்டைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். தமது முதுகுக்குப் பின்னால் நின்று பார்க்க வைத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரிடத்தில் ஆலோசனை செய்த பண்பு நம்மை வியக்க வைக்கிறது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான உம்மு ஸலமா(ரலி) கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் மக்காவிற்குச் சென்று உம்ரா செய்யாமல் திரும்பியபோது எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சம்பவமாகவும், மனைவியின் ஆலோசனை தன் வாழ்க்கையின் மிக முக்கியப் பங்கு என்பதை நிரூபிக்கக் கூடிய தருணமாகவும் அமைந்துள்ளது. ஒரு தந்தையாக நபி(ஸல்) அவர்கள் தம் மக்களிடத்தில் காட்டிய பரிவும், பாசமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். பேரக்குழந்தைகளை வாரி அணைத்துக் கொஞ்சி விளையாடு வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அன்றைய அரபுலகத்தில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கக் கூடிய பழக்கத்தை மாற்றி மக்களிடத்தில் பெண்கள் குறித்த உயரிய பார்வையைக் கொண்டு வந்து சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
குடும்பத்தில் மட்டுமல்ல, அரசியலுக்கும் அவர்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்த ஆலோசனையும், தகுதியற்ற தலைவரை அமர வைத்தால் மக்களுக்கு நாம் செய்யக்கூடிய துரோகம் என்றும், பணம், பெருமைக்காக அலைபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், பதவிகளை விரும்பாதவர்களையும் பொறுப்பு சுமப்ப வர்களையுமே ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் கூறி அரசியலுக்கும் வழிகாட்டினார்கள். சகிப்புத்தன்மை, எளிமை, மன்னிக்கும் குணம், தூய்மை, நேர்மையான வியாபாரம் என அனைத்திற்கும் அழகிய வழிகாட்டுதல்களை வழங்கிய நபி(ஸல்) அவர்கள் அனைத்து விவகாரங்களிலும் ஒழுங்கைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் ஒருபோதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை.
தோழர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதும், பேசும் தோழர்களிடம் பொறுமையாகக் கேட்கும் தன்மையும் அவர்களுக்கு இருந்தது. தம்மிடம் இருப்பவைகளை நற்காரியங்களுக்கு வாரி வாரி வழங்குவதிலும் அவர்கள் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்ந்தார்கள். ஒழுக்கத்தின் இலக்கணமாய் வாழ்ந்து நமக்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியாக, முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வை வாசித்து அவர்களின் வாழ்வுப் பாதைக்குத் திரும்ப வேண்டும். ஆம்..! அண்ணல் நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழிகாட்ட வந்தவர்களல்ல. அவர்கள் மனித குலத்திற்கு வழிகாட்ட வந்த அழகிய முன்மாதிரி.