தங்கள் சொந்த மண் இஸ்ரேலியர்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் நாள் நடத்திய தாக்குதலில், 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதும், 200க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பிணைக்கைதிகளாகக் கடத்தப்பட்டதும் நடந்து முடிந்து ஓராண்டு ஆகிறது.
ஃபலஸ்தீனின் காஸா பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல், அதை மீட்கப் போராடிக்கொண்டிருக்கும் ஹமாஸ் போராளிகளையும், ஹமாஸ் இயக்கத்தையும் அடியோடு ஒழிக்காமல் விடப்போவதில்லை எனவும், பிணைக்கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டெடுப்போம் எனவும் சபதம் செய்து காஸாவின் மீது போர் தொடுத்தது. இதற்கிடையே பிணைக்கைதிகளை மீட்க ஹமாஸ் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஃபலஸ்தீன கைதிகளுக்குப் பகரமாக பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஒப்பந்தம் செய்தது. அந்த அடிப்படையில் 110 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 240 ஃபலஸ்தீன சிறைக்கைதிகளும் 2023 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்காமல், இஸ்ரேல் தரப்பிலிருந்து முறிக்கப்பட்டு, தங்களது தாக்குதலை மீண்டும் தொடங்கினர்.
ஃபலஸ்தீனின் அனைத்துப் பகுதிகளிலும், அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தி வருகிறது. காஸாவின் கட்டமைப்பைச் சீர்குலைத்து, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மக்கள் நலக் கூடங்கள்,
நீர்நிலைகள், அன்றாடம் மக்கள் பயன் படுத்தும் சந்தைகள், சாலைகள், குடியிருந்த வீடுகள் என எல்லாவற்றையும் அழித்து வருகிறது. கிட்டத்தட்ட 90 விழுக்காடு காஸாவில் ஒன்றுமே இல்லை. இடித்துத் தள்ளப்பட்ட கான்கிரீட் கட்டிடங்களால், கான்கிரீட் காடுகளாகத் தான் காஸா காட்சியளிக்கிறது. இஸ்ரேல் இந்த ஓராண்டு காலத்தில், ஃபலஸ்தீனின் மீது நடத்திய தாக்குல்களுக்காகப் பெரும் தொகையைச் செலவழித்த தோடு அல்லாமல், நிறைய இஸ்ரேலிய வீரர்களையும், தன் குடிமக்களாகிய இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் இழந்திருக்கிறது. அமெரிக்கா பெரும் செலவில் இஸ்ரேலுக்கு உதவி இருக்கிறது. பொருளுதவி மட்டுமல்லாமல் இராணுவ உதவி, உளவு அமைப்பின் மூலம் உதவி, வெடிமருந்துகள், ஆயுதங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள், ட்ரோன்கள் என அனைத்தையும் கொடுத்து வருகிறது.
300 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக அமெரிக்காவிடமிருந்து கிடைத்த உதவித்தொகையைச் செலவழித்தும் கூட, சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, தன் சொந்த நாட்டு மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் இஸ்ரேல் திக்கு முக்காடி வருகிறது. பிணைக்கைதிகளின் குடும்பத்தார்களோடு சேர்ந்து கொண்டு இலட்சக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் இறங்கி, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வருவது இஸ்ரேல் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தந்து இருக்கிறது.
கடந்த ஓராண்டில், இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபை கொண்டு வந்த பல தீர்மானங்களை அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது. ஐ.நா
சபையால் காஸா போரை நிறுத்த எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. ஏமன் நாட்டு ஹவுதிகள் இஸ்ரேலுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி தங்களுடைய எதிர்ப்பைக் காண்பித்தனர். அவர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல்களைத் தொடுத்தன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டது போல, இஸ்ரேல் ஹமாஸை அழிக்கும் முயற்சியில் தோல்வி
யைக் கண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியதால், இந்தத் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல், மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பெரிய அளவில் லெபனான் மீது தன் தாக்குதல்களைத் தொடங்கி இருக்கிறது. இதுவரை தெற்கு லெபனானில் 569 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் காஸாவை 100 விழுக்காடு கொண்டு வந்த பிறகும் கூட, இஸ்ரேலால் ஹமாஸை வெல்ல முடியவில்லை. இஸ்ரேலின் மிகப்பெரிய தோல்வி இது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும், இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்க முடியாமல் திணறி வருகிறது. இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்வில் இருந்து வெறும் நூறு கிலோ மீட்டர் தூரமே உள்ள காஸாவில் இருக்கும் பிணைக்கைதிகளை அவர்களால் விடுவிக்க முடியவில்லை. ஒரு புறம் கடல் எல்லை இருக்க, மற்ற நிலப்பகுதிகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலால் எதுவும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. ஆனால் பல நூறு ஏன் ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவு தாண்டி, தன் மொஸாத் உளவு அமைப்பின் மூலம் ஹமாஸின் முக்கியத் தலைவர்கள், சிரியாவில் இருந்த ஈரானிய அதிகாரிகள், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து தன்னுடைய தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட தாக்குதல்கள் மூலம் தன் சொந்த நாட்டு பிணைக்கைதிகளைப் பணயம் வைத்து, அவர்களை விடுவிக்க முடியாமல், மக்களின் எதிர்ப்பைச் சமாளித்து வருகிறது. மேலும், மேற்குக்கரை பகுதியிலும் தாக்குதல்களை நடத்தி அங்கும் பலரைக் கொன்று குவித்தது.
இஸ்ரேல் சிறைகளில் ஃபலஸ்தீன கைதிகளை இஸ்ரேலிய இராணுவத்தினர் வன்புணர்வு செய்ததை இஸ்ரேலிய பத்திரிகைகளே ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்ட போது, இஸ்ரேலியத் தீவிரவாதிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்ரிக்காவால் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதன் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது.
2024 செப்டம்பர் 23ஆம் நாள் வரை, தங்கள் சொந்த நாட்டை மீட்பதற்காக 41,455 அப்பாவி ஃபலஸ்தீனர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். 95,878 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இதில் பெண்களும் 16,500 குழந்தைகளும் அடங்குவர். காயம்பட்டவர்களில் 14,000 பேர் சிகிச்சைக்காக காஸாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மருத்துவச் சிகிச்சைக்காக வெளியேற கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இஸ்ரேலால் நிராகரிப்பட்டிருக்கின்றன. சில நபர்களுக்கு மட்டுமே அவ்வப்பொழுது அனுமதி வழங்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 10,000 பேருக்கும் மேலாக இறந்து இருக்கலாம் என்று காஸா
வின் சுகாதார அமைச்சரவை அறிவித்திருக்கிறது. இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருக்கும் மேற்குக்கரைப் பகுதியில் இதுவரை 160 குழந்தைகள் உள்பட 716 பேர் கொல்லப்பட்டும், 5700 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். 207க்கும் மேற்பட்ட ஐ.நா சபையின் பணியாளர்கள் (க்Nகீஙிஅ குழு உறுப்பினர்கள்) இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.
உலகில் எங்கும் நடக்காத வகையில், இதுவரை உலக வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவில், பெரும் எண்ணிக்கையில், காஸாவின் மீடியா அமைச்சகத்தின் அறிக்கையின்படி 173 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேலிய தொடர் தாக்குதல்களால் மக்கள் ஒதுங்க இடமின்றி, கடற்கரையோரம் கூடாரங்களில் தங்க ஆரம்பித்து உள்ளனர். 2024 செப்டம்பர் 22ஆம் நாள் பெய்த மழையில் மழைத்தண்ணீர் கூடாரங்களுக்குள் புகுந்து மக்கள் படாதபாடு பட்டார்கள். குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. ஜன நெருக்கடி மிகுந்த இடத்தில், பிளாஸ்டிக் ஷீட்டுகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் கூடாரங்களில், மழைத்தண்ணீரால் ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது. மழையையும், வர இருக்கும் குளிரையும் சமாளிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் அவர்களுக்கு இதுவரை செய்து தரப்படவில்லை. கடும் குளிர் ஆரம்பமானால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சேதமடைந்தவைகள் :
80 விழுக்காடு வணிக வளாகங்கள்
65 விழுக்காடு சாலைகள்
65 விழுக்காடு விளைநிலங்கள்
60 விழுக்காடு குடியிருப்புக் கட்டிடங்கள்
85 விழுக்காடு (309 அரசாங்கப்பள்ளிகள், 187 ஐ.நாவால் நடத்தப்படும் பள்ளிகள், 68 தனியார்) பள்ளிக்கூட கட்டிடங்கள்
மொத்தமுள்ள 36 மருத்துவமனைகளில், 17 மருத்துவமனைகள் மாத்திரமே பகுதி நேர வேலை செய்து வருகின்றன.
ஒவ்வொரு மணி நேரமும்
15 பேர் கொல்லப்படுகிறார்கள். அதில் 6 குழந்தைகள் அடங்குவர்
35 பேர் காயமடைகிறார்கள்
42 வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன
12 கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன.
கடந்த ஓராண்டில் காஸா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, உடைமைகளை அள்ளிக்கொண்டு பலமுறை இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். ஓர் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால், ஜூலை மாதத்திலிருந்து, ஆகஸ்ட் மாதம் வரை 16 முறை இடம் மாறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் இராணுவம் பிறப்பித்தது. இந்த இடம்பெயர்தல் மூலமாக, சொல்லொணா துன்பத்தை அனுபவிக்கிறார்கள். பள்ளிக் கூடத்திற்கு, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமலும், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கிறார்கள். நோயாளிகளின் பாடோ சொல்லி மாளாது. மயக்க மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
சிகிச்சைக்கான மருந்துகள் இல்லை.குடிக்கத் தண்ணீர் இல்லை. குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் தேவைப்படும் தண்ணீருக்காக அலைகிறார்கள்.
2024 செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற்ற ஐ.நா சபை கூட்டத்தில், அடுத்த 12 மாதங்களுக்குள் இஸ்ரேல் காஸாவை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்ற இறுதிக்கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள ஐ.நா சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 124 நாடுகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டது.
90 விழுக்காடு காஸாவில் ஒன்றுமே இல்லை. இடித்துத் தள்ளப்பட்ட கான்கிரீட் கட்டிடங்களால், கான்கிரீட் காடுகளாகத் தான் காஸா காட்சியளிக் |
சர்வதேச சட்டங்களைத் தொடர்ந்து மீறி வருவதும், பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அந்தத் தீர்மானத்தில் அடங்கி இருந்தது.
10,800 ஃபலஸ்தீனர்கள் இதுவரை சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். காஸா பகுதியில் சுகாதாரமில்லாத சூழலில், போலியோ நோய் கண்டுபிடிக்கப்பட்டு 5,60,000 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஒரு மாதத்திற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது. இஸ்ரேல் அனுமதித்தால், காஸாவில் கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தேவையான கட்டமைப்பைக் கட்டி முடிக்க குறைந்தது 2040ஆம் ஆண்டு வரை ஆகும் என்று ஐ.நாவின் அறிக்கை சொல்கிறது. அந்த அளவிற்குச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக, கூடிய விரைவில் உடனடிப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் சிறைகளில் வாடும் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கண்டெய்னர்கள் மூலம் உதவிப்பொருட்களும், அத்தியாவசியப் பொருட்களும் காஸாவிற்குள் செல்ல உடனடி ஏற்பாடுகள் ஐ,நா சபையின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாகச் செய்து தரப்பட வேண்டும். காஸா மறு கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும். காஸா மக்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். ஃபலஸ்தீன மக்களுக்கு விடியல் மிகச் சீக்கிரம் கிடைக்க வேண்டும். வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்பதுடன் அவர்கள் பக்கம் நாம் நிற்பதற்கான குரலை உரத்து முழங்கிக் கொண்டிருக்க வேண்டும். சத்தியம் வெல்லும்;அசத்தியம் அழியும். இன்ஷா அல்லாஹ் ஃபலஸ்தீன் வெல்லும்.