இந்த நூற்றாண்டின் இரண்டாவது ஹிட்லராகத் திகழ்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இவரது செயல்பாட்டால் இஸ்ரேல் மக்களால் ஒரு கட்டத்தில்
அரசியலில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தவர் தான் இவர். ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் மக்களை தான் மட்டுமே காக்க முடியும் என்று கருணையற்ற கடுமையான போரை ஃபலஸ்தீனர்கள் மீது தொடங்கினார். சோவியத் யூனியன் உடைந்த காரணத்தாலும் ரஷ்யா தனது முழுக் கவனத்தையும் உக்ரைன் போரில் காட்டி வருவதாலும் சீனாவோ மிகப்பெரிய வல்லரசாகத் திகழ்கின்ற போதும் தைவானை எப்படிக் கபளீகரம் செய்வது, ஹாலந்தை எப்படித் தன் கட்டுப்பட்டிற்குள் வைத்திருப்பது, இந்தியா ஏமாந்தால் எப்படி அதன் எல்லைக்குள் புகுந்து நிலங்களை ஆக்கிரமிப்பது என்பதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தனிப்பெரும் வல்லாதிக்க நாடாகத் திகழ்ந்துவரும் அமெ ரிக்கா அநியாய, அக்கிரம, அடக்குமுறை, மனிதநேயமில்லாத செயல்களைச் செய்து வரும் இஸ்ரேலைத் தூண்டிவிடும் வண்ணம் அந்நாட்டிற்குக் கிட்டத்தட்ட 10,000 கோடி டாலருக்கு மேல் அதாவது இந்திய மதிப்பில் 10 இலட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை, விமானங்களை, ட்ரோன்களை, வீரர்களை அனுப்பி ஃபலஸ்தீனர்களைப் படுகொலை செய்ய உதவி வருகிறது. இதேபோல் தான் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கான போரில் ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 4800 கோடி டாலர் மதிப்பிலான அதாவது இந்திய பண மதிப்பில் 5 இலட்சம் கோடி அளவிலான ஆயுதங்களை, வெடிபொருட்களை, ஏவுகணைகளை, ட்ரோன்களை அனுப்பி உதவி வருகிறது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு நிதி உதவியாகப் பல்லாயிரம் கோடிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் பிரதமர்கள் இஸ்ரேலுக்கு நேரில் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து நெதன்யாகுவை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
இப்படி ஒருபக்கம் போருக்குத் துணையாக இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் முழுமையாக நவீன ஆயுதங்களையும் நிதியையும் வாரி வழங்கும் அமெரிக்கா மறுபுறம் இந்தப் போரை உடனே நிறுத்த வேண்டும் அதற்கு இந்திய பிரதமர் மோடி உதவ முன்வர வேண்டுமென்று கூறி நாடகம் ஆடிவருகிறது. நாடகத்தின் கதாநாயகனே அமெரிக்கா தான்.
உண்மையிலேயே அமெரிக்காவிற்கு அக்கறை இருக்குமானால் இந்த பூமியில் அமைதி நிலவி சீரழிவு ஒழிய வேண்டுமென்றால் இஸ்ரேல் பிரதமரிடம் கண்டிப்பாகவும் கடுமையாகவும் கூறி உடனே போரை நிறுத்து இல்லையேல் அமெரிக்கா இனி உதவாது உனக்கு எதிராக மாற நேரிடும் என்று அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிவிப்பை அமெரிக்கா வெளியிடாது. கருவாடு தின்னாத பூனையை எப்படி காண முடியாதோ அதைப் போல் மக்கள் வடிக்கும் இரத்தத்தையே பார்த்து ரசித்து பழக்கப்பட்ட நாடு தான் அமெரிக்கா. ஜோ பைடன் வயதான காலத்தில் கூட இப்படி ரத்தவெறி கொண்டவராக இருப்பதை நினைத்தால் வேதனை தான் வருகிறது.
இந்தியாவின் இரட்டை நிலை
மகாத்மா காந்தி இஸ்ரேலை என்றுமே ஆதரித்ததில்லை. அது அரபு நாடுகளின் மண். அந்த அரபு நாடுகளோடு பேசி சுமுகமாக நட்புறவோடு வேண்டுமானால் இஸ்ரேலில் இருந்து கொண்டு அங்கு யூதர்கள் வாழலாம். தனிநாடு அரபு நாடுகளில் ஒன்றான ஃபலஸ்தீனில் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். நேருவும் இஸ்ரேலை அங்கீகரித்ததில்லை. இந்திராவும் விரும்பவில்லை. ஆனால் 1950இல் தான் அங்கீகாரமே கொடுத்தார். நரசிம்மராவ் தான் 1992இல் நல்லுறவை இஸ்ரேலுடன் ஏற்படுத்தினார்.
இதுதான் இஸ்ரேலோடு இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் இஸ்ரேல் தன்னை ஒரு நாடு என்று அறிவித்த சில நொடிகளில் அமெரிக்கா அதனை அங்கீகரித்தது. ஆனால் இந்தியா யாசர் அரஃபாத்தின் ஃபலஸ்தீன விடுதலை இயக்கத்தையே அங்கீகரித்தது. எப்போதுமே இந்தியா ஃபலஸ்தீனுக்குத்தான் ஆதரவாகவே இருந்துள்ளது.
ஆனால் இன்று பிரதமர் மோடியோ இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கியதும் உடனே தனது ஆதரவைத் தெரிவித்து பிறகு கண்டனங்கள் வர ஃபலஸ்தீன மக்களுக்கு உணவு வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இஸ்ரேலை பகைத்துக் கொள்ள மோடிக்கு தெம்பில்லையா? துணிவில்லையா? எதற்காக ஃபலஸ்தீன மக்களுக்காகப் பரிதாபப்படுவதாக அறிக்கை எப்போதாவது வெளியிடுகிறார். யாரை ஏமாற்ற இந்த அக்கிரம வேலை? இவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தில் சில நாள்களுக்கு முன்பு 1200 ஆண்டுகள் பழமையான தர்கா 50க்கும் மேற்பட்ட புல்டோசர்களைக் கொண்டு பா.ஜ.க அரசு இடித்துத் தள்ளியுள்ளது.
பிரதமர் மோடி தன் மாநிலத்தில் இந்த வேலையைச் செய்ய தனது கட்சித் தொண்டர்களை ஏன் அனுமதித்தார்? உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சாமியார் வேஷம் போட்டுக் கொண்டே குற்ற வழக்கு உள்ளவர்கள் என்று இதுவரை 8000 பேருக்கு மேல் கைது செய்து அடைத்துள்ளார். அதில் 95 விழுக்காடு இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் தான். ஆனால் படுகொலை செய்தவர்கள் கடும் குற்றங்களைச் செய்தவர்கள் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதில்லை. காரணம் அவர்கள் பா.ஜ.கவினர். இதுதான் மோடி அரசியல். பில்கிஸ் பானுவை வன்புணர்ந்து அவரது பச்சிழங் குழந்தையையும் சுவற்றில் அடித்துக் கொன்ற கொடுமையாளர்களை முன்கூட்டியே விடுதலை செய்து அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்த அமித்ஷா தானே இந்நாட்டு உள்துறை அமைச்சர். அவர்களிடம் என்ன நியாயத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அப்படி விடுதலையானவர்களை உச்சநீதிமன்றம் தலையிட்டு மீண்டும் சிறைக்குள் தள்ளியுள்ளது. பா.ஜ.க, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியாவில் வாழத் தகுதியுள்ளவர்கள் என்று அறிவித்தாலும் வியப்பில்லை.
சிறுபான்மை மக்கள், பட்டியலின மக்கள் குற்றவாளிகள் என்று கூறி உ.பியில் மட்டும் 700 பேரை என்கவுண்டர் செய்து கொன்றுள்ளனர். இது பா.ஜ.க ஆட்சியில் தான் நடந்துள்ளது. இப்படிப்பட்ட பிரதமர் மோடி தான் இஸ்ரேல் ஃபலஸ்தீன், ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமாம் அமெரிக்கா கூறுகிறது. ஃபலஸ்தீனர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகத் தான் இஸ்ரேல் அவர்களைக் கொல்வதை மோடி அரசு மகிழ்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு இந்தியா 1 இலட்சம் இளைஞர்களை இடிந்து கிடக்கும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிக்கு அனுப்ப உள்ளது. ஆயுதங்கள், ஏவுகணைகள், வாகன உபகரணங்களையும் அனுப்பியுள்ளது. கடந்த 15 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை நடத்து வருகிறது. அந்த மாநிலத்திற்குச் சென்று இதுவரை மோடி பார்க்கவில்லை. நாளுக்குநாள் மணிப்பூரில் கலவரமும் மோதலும் நடப்பது அதிகரித்து வருகிறது. அதை ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த மோடியால் இஸ்ரேல் ஃபலஸ்தீனப் போரையும், ரஷ்யா உக்ரைன் போரையும் எப்படி நிறுத்த முடியும்? உள்ளூரிலேயே கரப்பான் பூச்சியைக் கண்டுபிடித்து அடக்க முடியாதவர் அயல்நாட்டில் போய் எப்படி காண்டா மிருகத்தை அடக்குவார்? இது ஜோ பைடன், மோடி சேர்ந்து நடத்தும் நாடகம்.
ஐ.நாவில் சில நாள்களுக்கு முன்பு ஃபலஸ்தீன் கொண்டு வந்த ஓராண்டுக்குள் இஸ்ரேல் ஃபலஸ்தீனிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை. அமெரிக்கா உட்பட 14 நாடுகள் அதை எதிர்த்து வாக்களித்தன. 124 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. உண்மையிலேயே போரை நிறுத்த வேண்டுமென்று இந்தியா விரும்பினால் அதனை ஆதரித்துத் தானே வாக்களித்து இருக்க வேண்டும். இதேபோல் 2022 டிசம்பர் 31இல் ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்திலும் இந்தியா ஆதரித்து வாக்களிக்கவில்லை. 2022லும் இஸ்ரேல் ஃபலஸ்தீன் இடையே போர் நடக்கக்கூடாது நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.
இப்படி ஒரு சார்பாக இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் தான் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று பேசுகின்றனர். இதுவரை 15000 மாணவர்கள், 750 பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகள், காஸாவில் இருந்த மருத்துவமனைகள், ஆலயங்கள், நூலகங்கள் ஏன் ஐ.நா ஊழியர்கள் 152 பேர் ஐ.நா சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் 140க்கும் மேல் என காஸாவை முற்றிலும் அழித்துவிட்டது இஸ்ரேல். 1945இல் தொடங்கப்பட்ட ஐ.நா மீது இப்படிப்பட்ட பெரிய தாக்குதலை வேறு எந்த நாடும் நடத்தவில்லை. தற்போது போரை நிறுத்தப் போராடும் ஐ.நா செயலர் அன்டோனியோ குட்டெரெஸியை இஸ்ரேலுக்குள் நுழையக்கூடாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுவரை பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவச் செல்வங்கள், மருத்துவர்கள் என்று 45000 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. நிச்சயமாக உண்மையான கணக்கு இதைவிட அதிகமாகத் தான் இருக்கும்.
இதுவரை இல்லாத அளவிற்கு பேஜர், வாக்கிடாக்கிகளை வெடிக்கச் செய்து அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்
துள்ளனர். ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரைத் தாக்க லெபனான் மீது விமானத் தாக்குதல் நடத்தி ஒரே நாளில் 1900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் அறிவித்துள்ளது. லெபனான் மீது தரை வழித் தாக்குதலையும் இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் தொடங்கிவிட்டது. போப் ஆண்டவர் இஸ்ரேல் செய்யும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்ததோடு போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளை மயான பூமியாக்க இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. நெதன்யாகு ஐ.நாவிலேயே போரை நிறுத்த மாட்டோம் என்று திமிரோடு பேசியுள்ளார். எனவே சீனா, ரஷ்யா, அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து போரை நிறுத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் இல்லையேல் மூன்றாம் உலகப் போர் வருவதை யாராலும் தடுக்க முடியாது.