மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

ஒரே நாடு தேர்தல் வாதமும், எதிர்வாதமும்
கப்ளிசேட், நவம்பர் 1- 15, 2024




வருங்காலங்களில் பா.ஜ.க நிறைய தோல்விகளைச் சந்திக்கும். அதற்காக மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்த முனைகிறது. இதை பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளே ஆதரிக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர 362 உறுப்பினர்களின் ஆதரவு மக்களவையில் தேவையாகும். ஆனால் மக்களவையில் பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை 293தான். ஆகவே இதனை நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் கொண்டு வருவது ஒரு ஏமாற்று வேலை.

 


பா.ஜ.கவின் கனவு என்று வர்ணிக்கப்படுகிற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட வடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சில ஆண்டுகளாகவே இந்த முயற்சியை முன்னெடுக்கும் மோடி அரசு அதற்கான வேலைகளைத் தொடங்கி இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதே ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election) திட்டமாகும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பலன் கிடைக்கும் என பா.ஜ.க கூறியது. ஆனால் இந்தத் தேர்தல் முறை ஆட்சியிலிருக்கிற பா.ஜ.க வெல்வதற்கான வாய்ப்புகளை உருவõக்கித் தருவதுடன் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும், ஜனநாயகத்திற்கு இது பெரும் ஆபத்து என எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றன.

இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 18,626 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இத்திட்டம் இந்த ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றப்படும் என்று கூறிவரும் நிலையில், இத்திட்டத்தை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி ஒப்புதல் வழங்கியுள்ளதால் நாடு முழுவதும் இது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

‘ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடத்தப்படுவதால் அரசுகள், வணிகங்கள், தொழிலாளர்கள், நீதி மன்றங்கள், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொதுச் சமூகத்திற்குப் பெரும் சுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும். இதற்காக அரசியலமைப்பில் குறைந்த பட்சத் திருத்தங்களைச் செய்யவேண்டும். மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்திவிட்டு அதிலிருந்து நூறு நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்திக் கொள்ளலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதோ, அல்லது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, புதிய தேர்தல் நடத்தலாம். இந்தப் புதிய தேர்தல் என்பது ஆட்சியின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே பொருந்தும். மாநிலங்களுக்குப் புதிய தேர்தல் நடத்தப்பட்டால், மக்களவையின் பதவிக்காலம் முடியும் வரையே அந்தச் சட்டமன்றம் நீடிக்கும். இதற்காக மக்களவைத் தேர்தல் நடக்கும் வரை சட்டமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டித்தோ, அல்லது குறைத்தோ சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண்டும்.

சட்டப்பிரிவு 83, 172 ஆகிய பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’. என்று ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்துள்ளது.இப் பரிந்துரைகள் ஒரு பக்கம் இருக்க, சட்டக் கமிஷனும் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை சட்டக் கமிஷன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் உட்பட 15 எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து இருக்கின்றன.

சிரமத்தைக் குறைக்கும் முயற்சியா?

இதற்கு முன்னர் நான்கு பொதுத் தேர்தல்களில் மக்களவை, மாநில சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேசிய அளவிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. எனவே 1967ஆம் ஆண்டு நான்காவது பொதுத்தேர்தல் வரை இது சாத்தியமாகி இருந்தது. பின்னர் காங்கிரஸ் மக்களவைத் தேர்தலை மட்டும் முன்னெடுத்ததால் பிறகு ஒரே தேர்தல் சாத்தியமில்லாமல் போனது. அதன் பிறகு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சுழற்சியில் இடையூறு ஏற்பட்டதால், நாடு இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் ஆறு தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. நகராட்சி, பஞ்சாயத்துத் தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.

அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் கருவூலத்திற்குச் சுமையாக இருக்கிறது. மேலும் ஒத்திசைவற்ற தேர்தல் குடிமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அரசு அதிகாரிகள் பாதுகாப்புப் படைகளை அடிக்கடி பயன்படுத்துவது அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடத்தை விதிமுறைகளை அடிக்கடி திணிப்பதால் கொள்கை முடக்கம் ஏற்பட்டு வளர்ச்சிகள் பாதிக்கிறது. தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம், ஸ்வீடன், ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை இந்தக்குழு ஆய்வு செய்தது. இதுபோல இந்தியாவிற்குப் பொருத்தமான மாதிரியை உருவாக்குவது சிறந்தது என குழு கருதுகிறது.

2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. 2017ஆம் ஆண்டு நிதி ஆயோக் இந்தத் திட்டத்தை ஆதரித்தது. அந்த ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தொடரில் தனது உரையில் இதனைக் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டு சட்ட ஆணையம் சட்ட அரசியலமைப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் வரைவு அறிக்கையை வெளியிட்டது. 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இதனை வலியுறுத்திப் பேசினார்.

இன்னும் குறைபாடுகள் உள்ளன

BBC ஹிந்தியின் தி லென்ஸ் என்ற வாராந்திர நிகழ்வில் ஒரே தேர்தல் முறை குறித்து நிபுணர்களுடன் விவாதம் ஒன்றை கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகவியல் இயக்குநர் முகேஷ் சர்மா நடத்தினார்.
BBC விவாத நிகழ்வில் முதலில் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவரும் Mகயுமான உபேந்திர குஷ்வாஹா இதன் நன்மைகளாகப் பல கருத்துகளைப் பட்டியலிட்டாலும், இதில் இன்னும் குறைபாடுகள் இருக்கின்றன. அவை மசோதாவாக அறிமுகமாகும்  போது  குறைபாடுகள் களையப்பட்டு தெளிவு கிடைக்கும் என்றார்.

திசை திருப்பும் முயற்சி
  -மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘இத்திட்டம் வெற்றி பெறப்போவதில்லை. மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’ மக்களைத் திசை திருப்பவே பா.ஜ.க இதனைக் கையில் எடுத்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா, ‘ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 80% மக்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இது மக்களை திசைதிருப்பி ஏமாற்றும் செயல். தங்கள் கட்சி இதனைக் கடுமையாக எதிர்க்கும்’ என்று கூறியுள்ளார்.

கூட்டாட்சியலைச் சிதைக்கும்
  -மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஙீ தள வலைப்பதிவில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்து பட்ட தேர்தல்களின் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாததும், கூட்டாச்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பது, அந்த மாநிலத்திற்குரிய பிரச்னைகள், ஆட்சி முன்னுரிமைகள் போன்ற பல காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஒவ்வாதது. யதார்த்தத்திற்கு முரணானது.

அனைத்து  மாநில  அரசுகளின் ஆட்சிக் காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது அரசு நிர்வாகத்திற்கு இடைஞ்சலை உருவாக்கும். இந்த முன்மொழிவு பா.ஜ.கவின் ஆணவத்தைத் திருப்திபடுத்தும் ஒரு நகர்வுதானேயொழிய இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு எப்போதும் வளையாது. ஒன்றிய அரசு இதுபோன்ற திசை திருப்பல்களைக் கைவிட்டு விட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்தல் போன்ற முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமரின் வித்தை
  -சித்தராமையா

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஜெண்டாவை பா.ஜ.க தீவிரமாக நகர்த்தத் தொடங்கி இருக்கிறது. வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதை மசோதாவாகத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘இது கூட்டாட்சி கூட்டமைப்பிற்கு எதிரானது. அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. இது தொடர்பான பரிந்துரையை ஏற்கும் ஒன்றிய அமைச்சரவையின் முடிவு பிரதமரின் வித்தையே! நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளும் பா.ஜ.கவின் நிகழ்ச்சிநிரலைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்.நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பணவீக்கம் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. தலித்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளன. ஒரு கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், இடைக்காலத் தேர்தல் ஒன்றே ஜனநாயக மரபாகும். தோல்வியடைந்த கட்சியைத் தேர்தல் வரும்வரை இடைக் கால அரசாகச் செயல்பட அனுமதிப்பது ஜனநாயக விரோதமாகும். நாடாளுமன்றம், நாடு முழுவதுமுள்ள சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வளமோ, திறனோ இப்போதைய தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அதை முழுவதுமாக வலுப்படுத்த மிக நீண்ட காலமாகும்.

புதிய தேர்தல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறைந்தது ஐந்து அத்தியாயங்களாவது திருத்தப்பட வேண்டும். இப்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திருத்தங்களை நிறைவேற்றத் தேவையான ஆதரவைப் பெறுவது கடினமானது. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் இந்தச் சட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது தங்கள் அரசின் தோல்விகளை மறைத்து மக்களைத் திசை திருப்பும் முயற்சி’ என அழுத்தமாகக் கூறினார்.

சட்ட விரோதச் செயல்
  -சுப்ரியா ஸ்ரீநாத்

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தொடர்புத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீநாத், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள வையின் காலம் நிறைவுறுகிற 2019ஆம் ஆண்டு 17 மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் இரண்டு, மூன்று ஆண்டுகள் மீதம் இருக்கும். அவற்றைக் கலைப்பது அரசியல் சட்ட விரோதம். கடந்த தேர்தலுக்கு 60,000 கோடி செலவிடப்பட்டது. இங்கு வேட்பாளர்களுக்குச் செலவு உச்சவரம்பு இருப்பதைப்போல தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

வருங்காலங்களில் பா.ஜ.க நிறைய தோல்விகளைச் சந்திக்கும். அதற்காக மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இதனைச் செயல்படுத்த முனைகிறது. இதை பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளே ஆதரிக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர 362 உறுப்பினர்களின் ஆதரவு மக்களவையில் தேவையாகும். ஆனால் மக்களவையில் பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை 293தான். ஆகவே இதனை நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் கொண்டு வருவது ஒரு ஏமாற்று வேலை’ என்றார். சமாஜ்வாடி கட்சியும் சுப்ரியாவின் இக்கருத்தை வரவேற்றுள்ளது.

இது எப்படி ஒரே தேர்தலாகும்?
  -எஸ்.ஒய்.குரைஷி

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஒய்.குரைஷி, ‘2014 ஆம் ஆண்டு மோடி பேசும்போது இந்தத் திட்டத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்றார். ஆனால் இன்று இது பெரும் விவாதங்களைக் கிளப்பி எதிர்கட்சிகள் அனைத்தும் எதிர்ப் பதால் தார்மிக ரீதியாக இதனைக் கைவிட வேண்டும். ஒரே தேர்தல் என்று கூறிவிட்டு பஞ்சாயத்துத் தேர்தல்களை நூறு நாள்கள் கழித்து நடத்துவதும், ஆட்சிகள் கவிழ்ந்தால் இடையில் தேர்தல் நடத்தப்படும் சூழலும் இருப்பதால், இது எப்படி ஒரே தேர்தல் நடைமுறையாகும்? செலவைக் குறைக்க அதனை 6,000 கோடியாக நிர்ணயித்து செலவைக் குறைக்கலாம். நாலரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு இறுதி நாள்களில் நலத்திட்டங்களை அறிவிப்பது ஏமாற்று வேலை. ஒரே நேர தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த உறுப்பினர்களையும், தலைவர்களையும் மக்கள் பார்க்கவே முடியாது. இதுபோல பல நேரங்களில் தேர்தல்கள் நடந்தால்தான் மாறி மாறி தலைவர்கள் வந்து செல்வர். மக்களுக்கான திட்டங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்’ என்கிறார்.

கட்சிகளுக்குக் கடிவாளம்
  -அபிஷேக் மிஸ்ரா

மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் மாறிமாறி வரும்போது மக்கள் தங்கள் வாக்குகளைச் சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அளிக்க முடியும். இதுவே அரசியல் கட்சிகளுக்குக் கடிவாளமாக இருக்கும் என்கிறார் சமாஜ்வாடி கட்சியின் அபிஷேக் மிஸ்ரா.

அதிபர் முறைபோல் ஆகிவிடும்
  -சஞ்சய் ஹெக்டே

மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே, இதை நடைமுறைப்படுத்த அரசு பல சட்டத்திருத்தங்களைச் செய்யவேண்டும். அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இது உச்சநீதிமன்ற பரிசீலினைக்காகச் செல்லும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அதிபர் முறை போல ஆகிவிடும். உங்களுக்கு நரேந்திர மோடியைப் பிடிக்குமா? அல்லது ராகுல் காந்தியைப் பிடிக்குமா? என்பதுபோல தேர்தல் ஆகிவிடும்’ என்கிறார்.

உரிமைப் பறிப்பு
  -பி.டி.டி.ஆச்சாரி

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்  அரசியல் அமைப்பின் ஏழாவது அட்ட வணையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் வருவதால் சட்டசபையைக் கலைத்தால் மாநிலத்தின் உரிமையைப் பறித்தது போலாகி விடும். கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பில் நீங்கள் எந்த திருத்தத்தையும் செய்யலாம். ஆனால் அதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது’ என்று மக்களவையின் முன்னாள் செயலாளரும் அரசியல் நிபுணருமான பி.டி.டி.ஆச்சாரி கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் நாம் ஆராயும் போது பா.ஜ.கவின் நிரந்தர ஆட்சி அஜெண்டா பளிச்சிடுகிறது. பா.ஜ.க தோல்வியிலிருந்து தப்பி தன் ஆட்சியை நிரந்தரமாக்கிக் கொள்ளவும், ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்த்தி அதிபர் ஆட்சி முறையாக்கி கீகுகுஇன் நூற்றாண்டுகால கனவான இந்து தேசம் என்ற நிலையை அடையவும் முயற்சிக்கிறது. பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களால் சூழப்பட்ட இந்தியாவை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் நாட்டின் ஜனநாயக மாண்புகளைப் பறிக்க மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் ஒரே குரலில் இதனை எதிர்க்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்