நாட்டில் செயல்பட்டு வருகின்ற மதரஸாக்களை மூட வேண்டுமென்று ஒன்றிய அரசின் அமைப்பான தேசியக் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு ஆணையம் (NCPCR) பரிந்துரைத்திருப்பதாக சில நாள்களுக்கு முன்னர் செய்திகள் வந்தன. ஆனால் மறுநாளே அந்த ஆணையத்தின் தலைவர் பிரியாங் கனுங்கோ, மதரஸாக்களை மூட வேண்டுமென்று தமது ஆணையம் பரிந்துரை செய்யவில்லையென்றும், அவற்றுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தற்போது வழங்கி வருகின்ற நிதிஉதவி, மானியங்களை நிறுத்த வேண்டுமென்று மட்டுமே பரிந்துரைத் திருப்பதாக விளக்கம் அளித்தார். 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்றிய அரசின் இந்த ஆணையம் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த மதரஸாக்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படவில்லையென்றும், இவற்றில் வழங்கப்படும் கல்வி தரமானதாக இல்லையென்றும் இந்த ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கின்ற பாஜக, சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குப் பல்லாண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உரிமைகளையும், நலன்களையும் பறிக்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கின்ற முஸ்லிம் ஏழை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மௌலானா ஆசாத் பவுண்டேஷன் கல்வி உதவி நிதியை (Scholarship) திடீரென்று நிறுத்தி ஆணை வெளியிட்டது. தற்போது மதரஸாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகளையும், மானியங்களையும் நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஏழை முஸ்லிம் மாணவர்கள் படிக்கக் கூடாது என்ற ஒரே ஒரு கெட்ட நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கங்களும் ஒன்றிய அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய நாட்டில், தற்போது இஸ்லாமிய மார்க்கக் கல்வியை மட்டுமே வழங்கி வருகின்ற மக்தப் மதரஸாக்களுக்கும், அரபிக் கல்லூரிகளுக்கும், ஜாமிஆக்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் நிதி உதவியோ, மானியமோ வழங்கவில்லை. (தேவ்பந்த், வேலூர், லால்பேட்டை போன்ற அரபிக் கல்லூரிகள், ஜாமிஆக்கள்). இவையனைத்தும் அந்தந்த ஊர்களிலிருக்கும் முஹல்லா ஜமாஅத்களாலும், பொது நிறுவனங்களாலும் அறக்கட்டளைகளாலும் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் செல்வந்தர்களும், வணிகர்களும், பொதுமக்களுமே இந்த மதரஸாக்களுக்கும் கல்லூரிகளுக்கும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
நிதி உதவி பெறும் மதரஸாக்கள்
ஆங்கிலேய ஆட்சியின் போது லார்டு மெக்காலே பரிந்துரைத்த கல்விக் கொள்கையின் அடிப்படையில், நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அப்போது அன்றைய பிரிக்கப்படாத வங்காள மாகாணத்திலும், உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாகாணங்களிலும் முஸ்லிம் ஜமாஅத்களும், முஸ்லிம் பொது நல அமைப்புகளும் குர்ஆன் மதரஸாக்களை நடத்தி வந்தன. இந்த மதரஸாக்களில் உலகக் கல்விக்கு அதாவது பொதுக் கல்விக்கு இடமில்லை. இந்நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆலோசனைகளை ஏற்று, இந்தக் குர்ஆன் மதரஸாக்களில் பொதுப் பாடங்களையும் கற்பிக்க மதரஸாக்களை நடத்தி வந்த நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், இம்மதரஸாக்கள் மார்க்கக் கல்வியுடன் கணிதம், அறிவியல், வரலாறு, மொழிப்பாடம் ஆகியவற்றையும் கற்பிக்க அனுமதிக்கப்பட்டன. இவற்றுக்கு அரசு ஓரளவு நிதி உதவியும் செய்து வந்தது. அதாவது உள் கட்டமைப்பு வசதிகளை மதரஸா நிர்வாகங்களே ஏற்படுத்திக் கொண்டனர். ஆசிரியர்களுக்கு அரசாங்கம் குறைந்த அளவில் மாத ஊதியம் வழங்கி வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட நிறுவனக் கல்விக் கூடங்கள் தவிர, முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வந்த மதரஸாக்களும் பொதுக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வந்தன. அன்றைய வங்காள மாகாணத்தில் இம்மதரஸாக்கள் சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றின. முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் இம்மதரஸாக்களில் சேர்ந்து பயின்று வந்தனர். வங்காளத்தில் இராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட பல இந்து சமயப் பிரமுகர்கள் மதரஸாக்களில் கல்வி பயின்றவர்களே!
ஆரம்பக் கட்டத்தில், தொடக்கக் கல்வியை மட்டுமே வழங்கி வந்த இம்மதரஸாக்கள், நாளாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மதரஸாக்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்த மதரஸாக்களை நிர்வகிக்க வங்காளம், உ.பி. போன்ற வடமாநிலங்களில் ‘மதரஸா வாரியங்கள் (Madarasa Board) அமைக்கப்பட்டன. இந்த மதரஸா வாரியங்களே பொதுத் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டன. பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் பட்டப் படிப்பில் சேரத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். நாடு விடுதலை பெற்ற பின்னரும் இந்த மதரஸாக்கள் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு கல்விப் பணியாற்றி வருகின்றன.’
நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தில்தான் மதரஸாக்கள் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அங்கு மாநில அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மதரஸா ஆசிரியர்களுக்கும் வழங்கி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்திலும் ஏராளமான மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இயங்கி வருகின்ற மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குக் குறைந்த அளவே
ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன.
வடமாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் கல்வித் தரம் நாம் அறியாதது அல்ல. அவற்றின் கல்வித் தரத்தை விட மதரஸாக்களின் கல்வித் தரம் மோசமாக இல்லை. |
அவ்வப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் போது, மதரஸா ஆசிரியர்களுக்கும் சிறிதளவு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. தற்போதைய புள்ளி விவரங்களின் படி, மதரஸாக்களில் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.6000. அதிக பட்ச ஊதியம் ரூ.30,000/ இந்த ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. மாநில மதரஸா வாரி யங்கள் மாதந்தோறும் ஒரு சிறு விழுக்காடு தொகையை ஆசிரியர்களிடமிருந்து வசூல் செய்து, அதனைக் கொண்டு ஒரு நிதியத்தை உருவாக்கி அதிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 1500 முதல் ரூ. 3000 வரை ஓய்வூதியமாக வழங்குகிறது. மதரஸாக்களில் பணியாற்றும் ஆசிரியர்களை அந்தந்த மதரஸா நிர்வாகங்களே நியமித்துக் கொள்ளலாம். அதில் அரசின் தலையீடு பெருமளவு இல்லை. மதரஸாக்களில் தற்போதைய புள்ளி விவரங்களின் படி சுமார் 40 விழுக்காடு இந்துக்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான இந்த சமய மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.
மேற்கு வங்காளத்திலும், பிற வடமாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மதரஸாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றன. குறைந்த ஊதியமேயாயினும் அதனைக் கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இதுதான் மதரஸாக்களின் நிலைமை. NCPCR பரிந்துரைகளை ஏற்று மாநில அரசுகள் மதரஸாக்களுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்தினால், அங்கு பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது. எனவே ஒன்று அந்த மதரஸா நிர்வாகங்கள் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். முடியாவிட்டால் மதரஸாக்களை மூட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட வேண்டுமென்று தான் ஒன்றிய அரசு நினைக்கிறது. அதற்கு NCPCR போன்ற தன்னாட்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.
மதரஸாக்கள் என்றாலே இந்துத்துவாதிகளுக்கு அலர்ஜிதான். மதரஸாக்களில் நவீனக் கல்வி இல்லை. தரமான கல்வி இல்லை. அங்கு தீவிரவாதச் சிந்தனைகள் பரப்பப்படுகின்றன எனத் தொடர்ந்து அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவற்றில் எள்ளளவும் உண்மையில்லை. மதரஸாக்கள் வெளிப்படையாகச் செயல்படுகின்றன. மதரஸா வாரியங்கள் வகுத்துத் தந்த பாடத்திட்டம் அவற்றில் பின்பற்றப்படுகிறது. மதரஸா வாரியங்களின் தலைவர்களை மாநில அரசுகளே நியமனம் செய்கின்றன. கல்வித் துறையின் நேரடிக் கண்காணிப்பும் இருக்கிறது. கணிசமான எண்ணிக்கை யில் இந்து சமயத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மதரஸாக்களில் பணி யாற்றுகின்றனர்.
இந்நிலையில் தீவிரவாதச் சிந்தனை பரப்பப்படுகிறது என்ற இந்துத்துவ சக்திகளின் குற்றச்சாட்டில் உண்மை சிறிதும் இருக்க வாய்ப்பில்லை. மதரஸா, இஸ்லாமிய மார்க்கக் கல்வி என்றாலே அவர்களுக்கு வேப்பம் காயாகக் கசக்கிறது. எனவே இந்துத்துவவாதிகள் மதரஸாக்களுக்குக் குறி வைப்பதன் முக்கிய நோக்கமே முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாமிய சமயக் கல்வி பயின்று விடக் கூடாது என்பதேயாகும். மதரஸாக்களின் கல்வி முறையும் நவீனமயமாகி வருகின்றன. மதரஸாக்களில் தரமான கல்வி இல்லை என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. உ.பி. போன்ற வடமாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் கல்வித் தரம் நாம் அறியாதது அல்ல. அவற்றின் கல்வித் தரத்தை விட மதரஸாக்களின் கல்வித் தரம் மோசமாக இல்லை.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களின் அடையாளங்களை அழிக்க முயற்சிக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தம், பொது சிவில் சட்டம், வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்களைப் பறிக்கின்ற சட்டம் எனத் தொடர்ந்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக மதரஸாக்கள் மீதான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும்.ஒன்றிய அரசின் தாக்குல்கள் தொடர்ந்து வருகின்ற இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்களுக்கிடையேயான அனைத்துக் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றுபட வேண்டிய தருணமிது. இந்தத் தாக்குதல்களை எதிர்த்து சட்ட ரீதியாகவும், ஜனநாயக வழிமுறைகளிலும் போராடுவதைத் தவிர வேறு வழி நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற ஓரளவு மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் கட்சிகளிலும், பொது இயக்கங்களிலும் காணப்படுகின்ற சிறு சிறு குறைபாடுகளை ஊதிப் பெரிதாக்காமல், அவர்களுக்குத் துணையாக நாம் நிற்க வேண்டும். இந்த அணுகுமுறையையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.