மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நீதியும், நியாயமும்..!
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1 - 15 டிசம்பர் 2024


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய உறுப்பினர்கள் மாநாடு

 


தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தின் மலைகள் நிறைந்த அழகிய பகுதி தான் வாதியே ஹுதா. நேர்வழியின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்தப் பெரும் பரப்பளவில் தான் 2024 நவம்பர் 15,16,17 மூன்று நாள்களும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய உறுப்பினர்கள் மாநாடு நடைபெற்றது. 1980இல் இதே இடத்தில் தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆறாவது அகில இந்திய மாநாடும், 1997, 2015இல் இரண்டு அகில இந்திய மாநாடுகளும் நடந்தன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அகில இந்திய மாநாடு இது. இந்தியா முழுவதிலிருந்தும் 26 மாநிலங்களின் 466 மாவட்டங்களிலிருந்து சற்றேறக் குறைய 18,000 உறுப்பினர்கள் நவம்பர் 14ஆம் நாளிலிருந்தே வாதியே ஹுதாவிற்கு வரத் தொடங்கினர். நிகழ்ச்சி அரங்கு, உணவரங்கு, உளூ, தொழுகைக்கான வசதி, கழிவறை, குளியலறை ஏற்பாடுகள் என எல்லாமே மிக நேர்த்தியான திட்டமிடலுடன் ஒழுங்குடன் அமைக்கப் பெற்றிருந்தது ஒருபுறம் என்றால் ஒரு ராணுவக் கட்டுக்கோப்புடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள் சலசலப்பு, ஆரவாரம் இன்றி மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

நேர ஒழுங்கு, வரிசை ஒழுங்கு என எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே அரங்கு நிறைந்திருப்பதும், மிகச் சரியான நேரத்திற்கு நிகழ்வு தொடங்கி, முடிந்ததிலும் அந்த ஒழுங்கு மாநாடு முழுவதும் இருந்தது. மொழி கடந்து ஓர் இஸ்லாமிய இயக்கத்தின் குடும்ப அங்கத்தினராய் இயக்கத் தோழர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் உதவினார்கள், முன்னுரிமை அளித்தார்கள். தங்குமிடங்களும், உணவரங்கங்களும் ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியே பிரிக்கப்பட்டதைப் போலவே மாநிலவாரியான ஏற்பாடுகளும் மாநாட்டுச் சிறப்புகளில் ஒன்று. வட இந்தியா, கேரளா, நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு என அவரவருடைய விருப்பத்திற்கேற்ற உணவு ஏற்பாடு மூன்று உணவுக்கூடங்களிலும் செய் யப்பட்டிருந்தது. பெண் உறுப்பினர்களுக்கும், வயதானவர்களுக்கும் துணையாக அவர்களுடைய வீட்டிலிருந்து கணவரும், குடும்பத்தினரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். குடும்பத்தோடு குழந்தைகளோடு கலந்து கொண்டவர்களுக்காகச் சிறப்பு ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்தது. அவர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தங்குமிடம், உணவுடன் அவர்களுக்கான நிகழ்வு ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்தன.

மையக்கருத்து

அரசியல் மாநாடுகள், கோரிக்கை மாநாடுகள் எனப் பல்வேறு நோக்கங்களுக்காக மாநாடுகள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் இந்த மாநாடு முற்றிலும் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கொள்கை, கோட்பாடுகளைப் புரிந்து கொண்டு இகாமத்தே தீன் எனும் இறைமார்க்கத்தை இந்த மண்ணில் மேலோங்கச் செய் வதை தம் வாழ்நாள் குறிக்கோளாக ஏற்றுப் பயணிக்கின்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்து கொள்கை சார்ந்த தெளிவையும், புத்துணர்வையும் வழங்குவதுடன் அவர்களுக்குச் சரியான பாதைக்கான பயிற்சிகளும் வழங்குவதற்காத்தான் இந்த ஒன்றுகூடல். எனவே ஜமாஅத்தின் மாநாடுகள் திருக்குர்ஆன் வசனத்தை மையக்கருத்தாகக் கொண்டிருப்பது வழக்கம். அந்தக் கருத்தை மையப்படுத்தியே மாநாட்டு உரைகள் அமைந்திருக்கும்.இந்த முறை மாநாட்டின் மையக்கருத்து திருமறைக் குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்திகின்ற அத்ல் வ கிஸ்த் (நீதியும், நியாயமும்) என்பதுதான்.

உரைகள் தமிழில்..!

இந்த மாநாட்டில் நவீன டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டன. மாநாட்டுக்காகப் பதிவு செய் யும்போதே இணைய செயலி(அகக) ஒன்று உருவாக்கப்பட்டு உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை ஒவ்வொரு இடத்திலும் QR CODE மூலமாக ஸ்கேன் செய் யப்பட்டு நுழைவுக்கான அனுமதி வழங்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய் தனர். மாநாட்டு நிரல் மட்டுமின்றி ஒவ்வொரு உரையும் தமிழில் உடனுக்குடன் கேட்கும் வண்ணம் ஆப்பில் வசதி செய் யப்பட்டிருந்தது. ஆங்கிலம், உர்து, மலையாளம், பெங்காலி, தமிழ், கன்னடா ஆகிய மொழிகளில் மொழிப் பிரச்னையின்றி அனைவரும் கேட்கும் வண்ணம் மொழிபெயர்ப்பு இருந்தது.

மொழிபெயர்ப்புக்குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு ஆலோசனைக் குழு உறுப்பினர் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் தலைமையில் ரிஸ்வானா ஷகீல், மௌலவி ஸமியுல்லாஹ் உமரி, ஷஃபீக் அஹமத், நஸீம் அக்தர், அப்துல் ஹை தாஹா, ஆஃப்ரிதா, ஜுவைரியா, செய் யாறு அஹமத் ஹுஸைனி, குல்பர்கா சிராஜுல் ஹஸன் ஆகியோர் அடங்கிய மொழிபெயர்ப்புக் குழு திறம்பட பணியாற்றினர். ஒரு மாத காலமாகத் தொடர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு உரைகள்  அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய் தனர். பின்னர் அந்த உரைகளைப் பதிவு செய் து ஆப்பில் பதிவேற்றம் செய் து உரிய நேரத்தில் உரைகளைக் கேட்கும் வண்ணம் செய் திருந்தனர். அகில இந்தியத் தலைவரின் இறுதி உரை உள்ளிட்ட ஒரு சில உரைகள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு  வழங்கப்பட்டன. ஷஃபீக் அஹமதுவும், அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்வும் நேரடி மொழியாக்கத்தை வழங்கினர்.

மாநாட்டில் ஒலித்த தமிழ்

மாநாட்டில் அகில இந்தியத் தலைவர்கள், அறிஞர்கள், SIO, GIO பொறுப்பாளர்கள், மகளிர் அணித் தலைவர், மாநிலத்  தலைவர்கள், பொறுப்பாளர்கள் எனப் பலரும் உரைகளை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு உரையும் ஆழமும், உணர்வும் நிரம்பியவை.திருக்குர்ஆன்  விரிவு ரைகள், அறிக்கைகள், ஜும்ஆ உரை, கருத்தரங்க உரைகள், கேள்வி பதில்கள், விருப்ப இணை அமர்வுகள், பெண்களுக்கான தனி அமர்வுகள், கலை, பண்பாட்டு இரவு, உடற்பயிற்சி என மாநாடு பல்வகைகளில் மிகச் சிறப்பான நிகழ்வுகளைக் கொண் டிருந்தது.

இஸ்லாமியக் குடும்பம், கல்வி, ஊடகம், இலக்கியம், மார்க்கம், தொழில், வணிகம், மருத்துவம், சட்டம், வட்டி இல்லா நிதி, இளைஞர், பெண்கள், குழந்தைகள், வக்ஃப் என 15 இணை அமர்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. துறை சார்ந்தவர்கள் அந்தந்த அமர்வுகளில் கலந்து பயன் பெற்றனர். ஒவ்வொரு அமர்விலும் துறை சார்ந்த நிபுணர்கள், அறிஞர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினர். அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் ஏதேனும் ஓர் அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அகில இந்தியத் தலைவரும் ஓர் அமர்வில் பார்வையாளராய் க் கலந்து கொண்டார். மாநாட்டில் இரண்டாம் நாள் காலை அமர்வில் அழைப்புப் பணியின் தாக் கங்கள் என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ அழகு தமிழில் கம்பீரமான குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தார். அவருடைய தமிழ் உரை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரும் கேட்டு பயனடைந்தனர். இரண்டாம் நாள் மாலை அமர்வு உறுப்பினர்கள், ஊழியர்கள், ஜமாஅத்தைச் சார்ந்தோருக்கான பொது அமர்வாக இருந்தது. இதில் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து பயனடைந்தனர்.

தூய்மையும், அழகும்

மாநாட்டு அரங்கமைப்பும், ஒலி, ஒளி அமைப்பும் மிகச் சிறப்பாக இருந்தன. மாநாட்டு உரைகளை அனைவரும் ஒரே நேரத்தில் கேட்கும் வண்ணம் அகன்ற LED திரைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. அனைத்துப் பகுதிகளும் உடனுக்குடன் தூய் மைப்படுத்தப்பட்டுக்  கொண்டே இருந்தன. எங்கும் தூய் மையும், அழகும் நிரம்பியிருந்தன. தொழுகைக்கான திடலில் ஏழு வளைவுகளைக் கொண்ட கிப்லா மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வளைவிலும் திருக்குர்ஆனின் வசனங்கள் பொறிக் கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் ஒளி விளக்குகளால் பிரமாண்ட பள்ளிவாசலைப்போன்று ஜொலித்துக் கொண்டிருந்தது. தொழும் திடலில் ஃபலஸ்தீன மக்களுடன் நாங்களும் இருக்கின்றோம் என்பதைப் பறைசாற்ற ஃபலஸ்தீன அடையாளமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் பிரம்மாண்ட வடிவமைப்பு நிறுவப்பட்டிருந்தது. வந்திருந்தவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றிலும் இருந்த கற்குன்றுகளில் திருமறை வாசகங்களை அற்புதமாகத் தீட்டி வண்ண விளக்குகளை ஒளிரச் செய் ததுடன், செயற்கை நீர் வீழ்ச்சியும், புகைப்பட வண்ணத் தோட்டமும் அனை வரையும் கவர்ந்தன.

இத்ராக் தஹ்ரீக் ஷோகேஸ் (IDRAAK), எக்ஸ்போ

நிகழ்ச்சி நேரம் தவிர்த்த ஓய் வு நேரங்களில் உறுப்பினர்கள் பார்வையிடுவதற்காக இத்ராக் தஹ்ரீக் ஷோகேஸ் அமைக்கப்பட்டிருந்தது. இராஜாளியை நினைவு படுத்தும் இந்த கண்காட்சியின் இலட்சினை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அளவிலான பணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தன்னார்வலர்கள் கூடுதலான தகவல்களைத் தந்தார்கள். வீடியோக்கள், மாடல்கள் என ஒவ்வொரு அரங்கும் தனிக் கவனம் பெற்றது. மீடியா ஒன் சேனலுக்கான தனி அரங்கும், SIO, GIOக்கான தனி அரங்குகளும் இருந்தன. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) அரங்கில் செல்ஃபி பாய் ண்ட் வைக்கப்பட்டிருந்தது. SIOவில் பயணித்த தோழர்கள் அவர்கள் விடைபெற்ற ஆண்டுகளைக் குறிப்பிட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரலாறு, மூத்த தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், ஜமாஅத் கடந்து வந்த பாதை என மிகச் சிறப்பான கண்காட்சியும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. ரிஃபா சேம்பர் அரங்கு, புத்தக விற்பனை நிலையம் என மாநாட்டுத் திடல் முழுவதும் ஒவ்வொரு நிமிடங்களையும் உறுப்பினர்கள் பயனுள்ள வழிகளில் அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. வயதான உறுப்பினர்கள், நோயினால் சிரமப்படுபவர்கள், இயலாத உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு உறுப்பினர்கள் தவிர்க்கவில்லை, தட்டிக்கழிக்கவில்லை. தங்களால் இயன்றவரை இகாமத்தே தீனுடைய பணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தள்ளாத வயதிலும் பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகள், சக்கர நாற்காலியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்து கொண்டவர்களும் அந்த மாநாட்டில் இருந்தார்கள். புதிய தலைமுறைப் பிள்ளைகள் நிறைந்திருந்தார்கள்.

இறைமார்க்கத்தை இந்த மண்ணில் மேலோங்கச்  செய் வதற்காகவும், நீதியையும், நியாயத்தையும் நிலை நிறுத்துவதற்காகவும் கூடிய மகத்தான கொள்கைப் பட்டாளத்திலிருந்து  இஸ்லாத்தின் பட்டொளியும், வளமான நீதம் நிறைந்த இந்தியாவின் நம்பிக்கைக் கீற்றும் மாநாட்டு வண்ண விளக்குகளைப் போல் திசையெங்கும் ஒளிவீசி இருள் கிழித்துக் கொண்டிருக்க புதிய உத்வேகத்துடன் உறுப்பினர்கள் கண்ணீர்த் துளிகளேந்தி விடை பெற்றுக் கொண்டனர்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்