இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது பேஷனாகி விட்டது. அதற்குப் பதிலாக பகவான் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும். சொர்க்கத்திற்குப் போகலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப்பேச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷா தனது இந்தப் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்; அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இரண்டு நாள்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. கைகலப்பு தள்ளுமுள்ளு என இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் நடைபெறாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்த தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக தனது பேச்சை எதிர்க்கட்சிகள் திரித்துப் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும், பிற அமைச்சர்களும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை. அம்பேத்கருக்கு உரிய மரியாதையையும், கௌரவமும் கொடுத்தது பாஜக அரசுதான் என்று கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் மீது சுமத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசி யதை எதிர்க்கட்சிகள் அப்படியே கூறுகின்றன. அவரது உரை நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் வந்துள்ளது. பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. அவர் அம்பேத்கர் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகளை யாரும் திரித்து வெளியிடவில்லை. அவரது உரை மறைமுகமாக இல்லை. நேரடியாகவே இருக்கிறது. உண்மை என்னவென்றால் என்னதான் அம்பேத்கரை உதட்டளவில் புகழ்ந்து பேசினாலும், பாஜக தலைவர்கள் உள்ளத்தில் அம்பேத்கரைக் குறித்த நல்லெண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே அமித்ஷாவின் உள்ளத்தில் இருந்தவை தான் அவரது வார்த்தைகளில் வெளிவந்துள்ளன.
அம்பேத்கரும் இந்துத்துவமும்
R.S.S உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கும் அம்பேத்கருக்கும் ஒருபோதும் உறவு சுமூகமாக இருந்தது இல்லை. ஏனெனில் அம்பேத்கர் இந்து சமயத்தின் சாதியக் கட்டமைப்பையும், சனாதன தர்மத்தையும், மனுநீதியையும், புராண இதிகாசங்களையும் தனது உரைகளிலும், எழுத்துகளிலும் கடுமையாகச் சாடியுள்ளார். (தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா பெரியார் செய்தது போல) நான் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன் என வெளிப்படையாக அறிவித்து விட்டு இலட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் 14.10.1956 அன்று புத்த மதத்தில் இணைந்தார். அப்படிப்பட்ட ஒருவருடன் இந்துத்துவா தலைவர்கள் சுமூகமாக இருந்திட வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படையான உண்மைøயப் புரிந்து கொண்டால், அனைத்துப் பிரச்னைகளையும் புரிந்துகொள்ள முடியும்.
அம்பேத்கரும் காங்கிரஸும்
அன்றைய காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் சுமூகமான உறவு இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் அன்றைய காங்கிரஸ் கட்சியில் நேரு போன்ற சில தலைவர்களைத் தவிர, காந்தி உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் இந்து சமயத்தின் சாதிய முறைக்கும், சனாதன தர்மத்திற்கும் ஆதரவாகவே இருந்தனர். பண்டித மதன் மோகன் மாளவியா, சியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோர் தீவிர இந்துத்துவ மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர். மகாத்மா காந்தி, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்த போதிலும் இந்து சமயத்தின் சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே அதற்குத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார். காந்தியின் இந்த நிலைப்பாட்டைஅம்பேத்கர் ஏற்கவில்லை.
மேலும் அம்பேத்கர் தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதனை ஆங்கிலேய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால் இது, இந்து மதத்திலிருந்து தலித் மக்களை தனிமைப்படுத்தும் முயற்சி என காந்தி அறிவித்து இரட்டை வாக்குரிமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என அஞ்சிய காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரை நேரில் சந்தித்து இரட்டை வாக்குரிமை கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு காந்தியின் உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டினர். வேறு வழியில்லாமல் அம்பேத்கர் தனது கோரிக்கையிலிருந்து பின் வாங்கினார். தனது ஏழு நாள் உண்ணாவிரதத்தை காந்தி முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் மீது அவருக்குப் பெருமளவு நம்பிக்கை ஏற்படவில்லை.
அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர்
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் சட்ட அறிவையும், தலித் மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் உணர்ந்தே இருந்தனர். தலித் மக்களால் பெரிதும் போற்றக் கூடிய ஒரு தலைவரின் சட்ட நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என காந்தியும், நேருவும் விரும்பினர். அதன் மூலம் தலித் மக்களின் ஆதரவையும் பெற முடியும் என நம்பினர். நேரு அவரை நேரில் சந்தித்து அரசியல் சட்ட நிர்ணய சபையில் இடம் பெறுமாறு வேண்டவே அம்பேத்கரும் அதனை ஏற்றுக்கொண்டார். முதலில் முஸ்லிம் லீக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த வங்காள மாகாணத்திலிருந்து முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்று பாகிஸ்தான் என்ற புதிய நாடு உருவான போது வங்காள மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக, அம்பேத்கர், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து காங்கிரஸ் ஆதரவுடன் அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபு இராஜேந்திர பிரசாத் தலைமையிலான இந்த அரசியல் நிர்ணய சபையில், சட்டங்களைத் தொகுக்கும் குழுவிற்கு அம்பேத்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு தயாரித்தசட்ட அறிக்கை விவாதங்களுக்குப் பிறகு, சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தியது காங்கிரஸ் கட்சி.
அம்பேத்கர் சட்ட அமைச்சராக ஆனது எப்படி?
ஜவஹர்லால் நேருதான் இந்திய விடுதலைக்குப் பிறகு தனது தலைமையில் பதவிக்கு வந்த மத்திய அமைச்சரவையில் அம்பேத்கரை சட்ட அமைச்சராக நியமித்தார். அவர் காங்கிரஸ்காரராக இல்லாத நிலையிலும், அவரது சட்ட அறிவையும், அரசியல் சாசனத்தைத் தொகுத்த அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள நேரு விரும்பியே அவரைத் தனது அமைச்சரøவயில் சேர்த்துக் கொண்டார். எனினும் 27.09.1951 அன்று அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.
அம்பேத்கர் பதவி விலக நேருதான் காரணமா?
அம்பேத்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரு தான் காரணமென்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர்களான ஜே.பி. நட்டாவும், கிரின் ரிஜுஜும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இது அப்பட்டமான பொய். அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக இந்துத்துவவாதிகள் தõன் காரணமே தவிர, நேரு அல்ல. அப்போது இந்த சமூகத்தில் இருந்த பல்வேறு பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் சீர் திருத்தம் செய்யும் வகையில், இந்து சீர்திருத்த சட்டத் தொகுப்பு மசோதாவை 1950ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். திருமணம், கல்வி, சொத்துரிமை, வாரிசுரிமை, விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமண உரிமை, தத்தெடுக்கும் உரிமை, ஜீவனாம்சம் போன்ற பல அம்சங்கள் அந்தச் சட்டத் தொகுப்பில் இடம் பெற்று இருந்தன.
ஆனால் இந்தச் சட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, இந்துத்துவா தலைவர்களும், இந்து மடாதிபதிகளும் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். ஜனாதிபதியாக அப்போது பதவியில் இருந்த பாபு இராஜேந்திர பிரசாத்தே இதற்கு எதிராக இருந்தார். உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய்பட்டேல், சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற அமைச்சர்களும் இந்த மசோதாவுக்கு எதிராக இருந்தனர். சங்கேஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியர் அம்பேத்கரை எதிர்த்து யாத்திரை கிளம்பினார். அவர் அப்போது வெளியிட்ட அறிக்கையில் ‘புதிய சட்டம் என்ற பெயரில் பீமீஸ்மிருதியை எழுதியிருக்கிறார் அம்பேத்கர். இதற்கு மதத்தில் ஆதாரம் இருக்கிறது என்கிறார். மதத்திலிருந்து நாங்களும் ஆதாரம் காட்ட முடியும். மதத்தில் எதுதான் இல்லை? சாஸ்திரங்கள் மூலம் எதையும் நிரூபிக்க முடியும். ஆனால் அதைச் செய்யும் உரிமை அம்பேத்கருக்குக் கிடையாது. பால் எவ்வளவு தான் புனிதமானது என்றாலும் அதுசாக்கடை வழியாக வந்தால் யாரும் ஏற்க மாட்டார்கள்.
தீண்டத்தகாதவராகிய அம்பேத்கர் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவதும், அப்படியே ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இந்து மதத்தையே ஒழித்துக் கட்ட முயலுகிறார். (நவ பாரத் இதழ் 12.1.1950) தனது முதல் மனைவி இறந்த பிறகு அம்பேத்கர் ஒரு பிராமண டாக்டர் பெண்ணை இரண்டாவதாக மணந்து கொண்டார். அதனைத்தான் சங்க ராச்சாரியார் கொச்சைப்படுத்திக் கூறுகிறார்.காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திரரும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். இதனை ஆதரிக்கக் கூடாது என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதங்கள் எழுதினார்.
நாடாளுமன்றத்தில் மசோதாவை டாக்டர் அம்பேத்கர் தாக்கல் செய்ய பெரும் அமளி நிலவியது. ஜனாதிபதியும், சொந்தக் கட்சி உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்த செயல் பிரதமர் நேருவை நிலைகுலையச் செய்தது. எனவே நேரு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மசோதாவைக் கிடப்பில் போட முடிவு செய்தார். இதனால் மனம் வருந்திய அம்பேத்கர் 27.9.1951 அன்று சட்ட அமைசசர் பதவியிலிருந்து விலகினார். எனவே அம்பேத்கரின் பதவி விலகலுக்கு, நேரு காரணம் அல்ல. ஆனால் அன்று மசோதாவை எதிர்த்த இந்துத்துவவாதிகளின் அரசியல் வாரிசுகள் இன்றைக்கு அம்பேத்கரின் பதவி விலகலுக்கு நேருவைக் குற்றம் சாட்டுகின்றனர். இது அப்பட்டமான பொய்.
அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்ததா?
அம்பேத்கரை 1952 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடித்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரின் ரிஜுஜு குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் அம்பேத்கர் காங்கிரஸ்காரர் அல்ல. அக்கட்சியில் ஒருபோதும் அவர் அங்கம் வகித்ததில்லை. அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், அவர் செட்யூல்டு இனக் கூட்டமைப்பு என்ற கட்சியைத் தொடங்கி அக்கட்சியின் வேட்பாளராக 1952ஆம் ஆண்டு பம்பாய்தொகுதியில் (தனித் தொகுதி) போட்டியிட்டார். பிரஜா சோசலிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது. எனினும் அம்பேத்கர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இது அரசியல் ரீதியிலான போட்டியே. இதனை ஒரு குற்றமாக அல்லது தவறான செயலாகக் கருத முடியாது. பெருந்தலைவர் காமராஜர் கூட விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு (1967ஆம் ஆண்டில்) ஒரு திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். தேர்தலில் போட்டி என்பது சாதாரணமானது. ஜனநாயகப்பூர்வமான செயலேயாகும். இன்றைக்கு அம்பேத்கர் அடைந்திருக்கின்ற உன்னத நிலையில் அவர் 1952ஆம் ஆண்டு இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தை உணராமலேயே பாஜக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அல்லது தெரிந்தும் திரிபு வாதம் செய்கிறார்கள்.
அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததா?
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் காங்கிரஸ் அரசு அவரை அவமதித்து விட்டது என ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இதுவும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டே. அம்பேத்கரை அவமதிக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அவருக்கு அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவியை வழங்கி, அதன் மூலம் அவர் இந்திய அரசியல் சாசனத்தை தொகுக்கின்ற வாய்ப்பை வழங்கியது காங்கிரஸ் கட்சியே! நாடு விடுதலை பெற்றவுடன் மத்திய அமைச்சரவையில் அவரைச் சேர்த்துக் கொண்டதும் காங்கிரஸ் கட்சியே. இதனை விட அவருக்கு வேறு என்ன கௌரவம் வேண்டும்? அவருக்கு பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தது என்பதே உண்மை.
1947ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பாஜக கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. தவிரவும் தற்போது, ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆதாயங்களுக்காகவே பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சரண் சிங்கிற்கு அந்த விருது வழங்கி உ.பியில் அவரது பேரரின் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தோடு கூட்டணி அமைத்துக் கொண்டது.
பாஜக அம்பேத்கரைக் கொண்டாடுவது ஏன்?
பாஜக அண்மைக் காலமாக அம்பேத்கரைப் பெரிதும் கொண்டாடி வருகிறது. ஏன் தெரியுமா? 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்த பிறகு தான் அம்பேத்கரைப் புகழ ஆரம்பித்தனர். லண்டனில் அவர் வசித்த வீட்டை நினைவுச் சின்னமாக ஆக்க முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு முன்னர் பாஜகவும் அதன் தலைவர்களும் அம்பேத்கரின் பெயரைப் பெருமளவு பயன்படுத்தவில்லை. மாறாக சில பாஜக தலைவர்கள் அம்பேத்கர் குறித்து அவதூறுப் பரப்புரைகளில் ஈடுபட்டே வந்தனர். 1999 2004ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண் சௌரி அம்பேத்கரை இழிவுபடுத்தும் வண்ணம் Worshiping False Gods(பொய்யான கடவுள்களை வழிபடுதல்) என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருந்தார். இதற்கு தலித் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே அம்பேத்கர் தலித் மக்கள் போற்றக்கூடிய தலைவராக உருவெடுத்து விட்டார். இந்திய நாட்டில் தலித் மக்கள் 20 விழுக்காடு இருக்கின்றனர். இந்த மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே, பாஜகவும் அதன் தலைவர்களும் அம்பேத்கரைப் புகழ்ந்து வருகின்றனர். இது ஒரு வாக்கு வங்கி அரசியலே. இதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டனர். அவரை இந்து தேசியவாதி என்றும், இந்து சீர்திருத்தவாதி என்றும் தொடர்ந்து பேசி வந்தனர். வருகின்றனர்.
அம்பேத்கரைப் போல இந்து சமயத்தின் பிறப்பால் அமைந்த வேறுபாடுகளையும், சாதிய முறைகளையும், சனாதன தர்மத்தையும், புராண இதிகாசகங்களையும் கடுமையாக விமர்சித்து எழுதியும் பேசியும் வந்த ஈ.வே.ரா பெரியாரை இந்துத்துவவாதிகள் கொண்டாடுவது இல்லை. மாறாக நாளும் பொழுதும் அவரைத் தூற்றித் திரிகின்றனர். இத்தனைக்கும் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலகி புத்த மதத்தில் சேர்ந்து விட்டவர். ஆனால் பெரியார் அப்படி மதம் மாறவில்லை. நீங்கள் ஏன் இந்து மதத்திலிருந்து விலகி இஸ்லாத்திலோ அல்லது கிறித்தவத்திலோ சேரக் கூடாது எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பெரியார் இந்து மதத்தில் இருந்தால்தான் அதன் குறைபாடுகளைச் சுட்டிக் காட்ட முடியும். நான் வேறு மதத்திற்குச் சென்று விட்டால் அதனைச் செய்ய முடியாது எனப் பதிலளித்தார்.
அம்பேத்கருக்கும் பெரியாருக்குமிடையே இருக்கக் கூடிய ஒரே வேறுபாடு அம்பேத்கருக்கு 20 விழுக்காடு தலித் மக்களின் வாக்குகள் இருக்கின்றன. பெரியாருக்கு வாக்கு வங்கி அப்படி எதுவுமில்லை என்பதேயாகும். எனவே தலித் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே பாஜகவினர் அம்பேத்கரைப் புகழ்கின்றனர். ஆனால் அது உதட்டளவில் வாக்குகளைப் பெற பாஜக செய்கின்ற தந்திரமே; உள்ளப்பூர்வமானது அல்ல என்பதை அமித்ஷாவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பாஜக ஒரு நேர்மையான அரசியல் கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? அம்பேத்கர் குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றிருக்கச் செய்ய வேண்டும். தனது கருத்துகளுக்காக அவரை மன்னிப்புக் கேட்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அப்படிச் செய்யாமல், காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிப் பிரச்னையைத் திசை திருப்பி வருகிறது. பொய்யுரைத்தலும், திரித்தலும், மறைத்தலும், திசை திருப்புதலும் அவர்களின் வாடிக்கையான செயல்களே!