கள்ளம் கபடமில்லாத, பார்த்தவுடன் பரிவை ஏற்படுத்தும் சாந்த முகம்; எப்போதும் கதர் அரைக்கைச் சட்டை, வேட்டி, துண்டு எனும் தோற்றப் பொலிவைக் கொண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு 99 வயதைக் கடந்து 100ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். பெரியார், இராஜாஜி, கலைஞருக்குக் கிடைக்காத நீண்ட ஆயுள் அவருக்குக் கிடைத்துள்ளது. அவரது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அர்த்தமுள்ளதாகவே இருந்தது, இருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் என்ற வைணவத் தலத்தில் 26.12.1925 அன்று இராமசாமி கருப்பாயி தம்பதியின் மகனாக நல்லகண்ணு பிறந்தார். அவரது குடும்பம் விவசாயக் குடும்பம். தனது தொடக்க, இடைநிலைக்கல்வியை ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் பள்ளியில் பயின்றஅவர்,திருநெல்வேலியிலுள்ள இந்துக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார்.
எனினும், அவர் அங்கு தொடர்ந்து படிக்கவில்லை. அப்போது நாட்டில் விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. பாரதியாரின் விடுதலை எழுச்சிப் பாடல்களும், வ.உ.சியின் தியாக வாழ்வும் அவரைப் பெரிதும் ஈர்த்தது. படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அதிலிருந்து அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. எனினும் காங்கிரஸ் கட்சியை விட கம்யூனிஸ்ட் கட்சியே சிறந்தது எனக் கருதிய அவர் 1943ஆம் ஆண்டு அக்கட்சியில் சேர்ந்தார். ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள ஒரு கிட்டங்கியில் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி இதழில் எழுதினார். இதுதான் அவரது முதல் கட்சி அரசியல் நடவடிக்கையாகும். சில ஆண்டுகளிலேயே ஸ்ரீவைகுண்டம் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலும், நாங்குநேரி தாலுகாவிலும் நடைபெற்ற விவசாயச் சங்கங்களில் இணைந்து பணியாற்றினார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1952ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஆயுதம் தாங்கிய புரட்சி மூலமாக அரசைக் கவிழ்க்க அக்கட்சி மறைமுகத் திட்டங்களைத் தீட்டி வருகிறது என்று குற்றம் சாட்டி ஒன்றிய அரசு அக்கட்சியைத் தடை செய்தது. கட்சியின்உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கைகளைத் தவிர்ப்ப தற்காகப் பல தலைவர்கள் தலைமறைவாகினர். சிறையில் அடைக்கப்பட்ட, தலைமறைவான தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடரப்பட்டது.
நல்லகண்ணுவும் அப்போது கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் ஏழாண்டுகள் சிறைவாசத்திற்குப்பின்னர் அரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்பட்ட உடன் படிக்கையின் அடிப்படையில் கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட போது நல்லகண்ணுவும் விடுதலை செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக இருந்த போது நல்லகண்ணு சிறை அதிகாரிகளால் பெரிதும் துன்புறுத்தப்பட்டார். அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு அடித்தனர். மீசையில் தீக்குச்சிகளை வைத்துப் பொசுக்கினர். அதற்குப் பிறகு தான் அவர் மீசை வைத்துக் கொள்வதில்லை. சிறையிலிருந்து விடுதலையான தோழர் நல்லகண்ணு 1958ஆம் ஆண்டு அன்னாச்சாமி மகள் ஆசிரியர் ரஞ்சிதம் அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்.
தொடர்ந்து தோழர் நல்லகண்ணு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். தோழர் ஜீவானந்தத்தின் வழிகாட்டலின் கீழ் கட்சிப் பணியாற்றினார். கிளைச் செயலாளராகப் பணியைத் தொடங்கிய அவர், கட்சியின் விவசாயச் சங்கத்தின் மாநிலச் செயலாளராக 25 ஆண்டுகளும், கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகளும் பொறுப்பு வகித்துத் திறம்படப் பணியாற்றினார். அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. கட்சிப் பணிகள் தவிர்த்து, அவர் பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காகவும் போராடினார். பட்டியலின மக்கள் குடியிருப்புகள் பெறுவதற்காகப் போராடினார். தமிழ்நாட்டில் சமய மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த விவசாய நிலங்களின் விவரங்களைத் தொகுத்து வெளியிட்டார். சாதியக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தினார்.
குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ் கோர்ஸ் அமைக்க அரசு திட்டமிட்டிருந்த போது போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தினார். தாமிரபரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி, 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், உண்மை அறியும் குழுவினரை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கை பெற்று மணல் கொள்ளையைத் தடுக்க ஆணைகள் பிறப்பித்தனர்.சமூக நல்லிணக்கத்திற்கு ஆதரவாகவும், சாதிய மோதல்களுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி கிராமங்களில் பஞ்சாயத்துத்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை ஆதிக்கசாதியினர் பதவி ஏற்க விடாமல் தடுத்த நிகழ்வுக்காக மக்களைத்திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். 1997ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் தேவரின மக்களுக்கும், தலித் இன மக்களுக்கும்வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்த போது இவரது மாமனார் அன்னாச்சாமி ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டார். எனினும் தோழர்நல்லகண்ணு தனக்கு ஏற்பட்ட இந்த தனிப்பட்ட இழப்புகளைப் பொருட்படுத்தாமல்ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்.
தோழர்நல்லகண்ணுவாசிப்பைப் பெரிதும் நேசித்தவர். சிறந்த படைப்புகளை அவர் கொண்டாடி மகிழ்வார். எழுத்தாளர்களைப் பாராட்டி ஊக்குவிப்பார். பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார். டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு, கவிஞர் தமிழ்ஒளி வாழ்க்கை வரலாறு, விவசாயிகள் சங்கத்தின் வரலாறு ஆகியன அவர் எழுதியுள்ள முக்கிய நூல்களாகும். தனது வீட்டில் ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி வைத்துள்ளார். எனினும் 2015ஆம் ஆண்டு சென்னை நகரில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது இவரது வீடும் மூழ்கியது. இவர் சேகரித்து வைத்திருந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட நூல்கள் முற்றிலும் நனைந்து சேதமாகியது. இதனால் பெரும் வேதனைக்கு உள்ளானார்.
மிக எளிமையாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் நல்லகண்ணு. ஆசிரியராகப் பணியாற்றிய தனது மனைவி, ஒதுக்கீட்டில் பெற்ற அரசுக் குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்தார். எனினும் அவரது மனைவி யின் மரணத்திற்குப் பின்னர், அந்தக் குடியிருப்பைக் காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டபோது, அதற்கு எதிராகத் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தனர். எனவே அரசு பணிந்தது. தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. தோழர் நல்லகண்ணு பொருளின் மீது பற்றில்லாதவராகவே வாழ்ந்து வருகிறார். கட்சியின் 80ஆவது ஆண்டு விழாவின் போது தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாயைத் தம் கட்சிக்கே வழங்கினார். தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கிய போது கொடுக்கப்பட்ட நிதியை யும் கட்சியின் வளர்ச்சிக்கும், விவசாய சங்க வளர்ச்சிக்கும் வழங்கினார். தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதுடன் வழங்கிய ரூபாய் பத்து இலட்சத்தை அத்துடன் ரூபாய் 5000 சேர்த்து ரூ. 10,05,000 ஆக முதல்வரிடம் திரும்ப வழங்கினார். இவருக் கென சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. இதனைக் கேள்வியுற்ற அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் அருணாச்சலம் கார் ஒன்றைப் பரிசளித்தார். ஆனால் அந்தக் காரையும் கட்சிக்கே கொடுத்து விட்டார்.
இத்தகைய தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான தோழர் நல்லகண்ணுக்கு நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அறிகின்ற போது நமக்கு வேதனையே ஏற்படுகிறது. 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியிலும், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோயமுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். வேட்பாளரின் தகுதி பார்த்து வாக்களிக்காமல், கட்சி பார்த்து வாக்களிக்கின்ற நிலையே இதற்குக் காரணம் எனலாம். எனினும் இழப்பு மக்களுக்கே அவருக்கல்ல. நல்லகண்ணு, ரஞ்சிதம் தம்பதியினருக்கு இரண்டு பெண் மக்கள். மூத்த மகள் காசி பாரதி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இளைய மகள் ஆண்டாள். சென்னையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மனைவி ரஞ்சிதம் 2016ஆம் ஆண்டு மரணமடைந்து விட்டார். அதன் பின்னர் தனது மகள்களின் பராமரிப்பில் சென்னையில் வாழ்ந்து வருகிறார். தோழர் நல்லகண்ணு பிறந்தநாளில் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதாக இன்றைய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் குறிப்பிடுகின்றார்.
கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது மத்தியக் குழுவின் உறுப்பினராக இருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக, உழைக்கின்ற மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்படுகின்ற தலைவராக அவர் விளங்கி வருகிறார். அவரது வாழ்க்கை எளிமையும், நேர்மையும், தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டதாகும். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாச மில்லாத வாழ்க்கை அவருடையது. அவரது 100ஆவது பிறந்தநாளில் அவரின் நல் வாழ்வுக்கு நாம் வாழ்த்துவோம்.