பெரியார் ஈ.வே.ரா எழுதியுள்ளதாக சில விஷயங்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என நிருபர்கள் கேட்டதற்கு அரசாங்கம் பெரியாரின் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும். அதன் பிறகு நான் ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியுள்ளார். எனவே ஆதாரம் இல்லாமல் தான் பெரியார் சொன்னதாகச் சில கருத்துகளை அவர் கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது. இனிமேல்தான் அவர் ஆதாரத்தைத் தேடித் தர வேண்டும்.
சீமான் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். முஸ்லிம்கள் குறித்தும் அவர் ஏராளமான சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கடந்த காலங்களில் தெரிவித்திருக்கிறார். ‘முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சாத்தான்களின் பிள்ளைகள்.’ ‘முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களிப்பதைத் தங்களது ஆறாவது கடமையாகக் கருதுகிறார்கள். முஹம்மது நபியே நேரில் வந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினாலும் கேட்க மாட்டார்கள்’. ‘உருது பேசுகின்ற முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல’ என்றெல்லாம் பேசியிருக்கின்றார்.
கடந்த ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று கூறினார். அது அம்மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வசிக்கின்ற தெலுங்கு பேசும் மக்களை தமிழர்கள் இல்லை என்று கூறி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால் தொடர்ந்து தனக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கும் என நினைக்கிறார். அப்படி நடக்கவும் செய்கிறது.
விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். ஆனால் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளையும், அதன் தலைவர் மறைந்த பிரபாகரனையும் தொடர்ந்து புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். சட்டம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இதன் காரணமாக அவர் துணிவு பெற்று கீழ்த்தரமான விமர்சனங்களில் இறங்குகிறார். சீமானின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து ஊடகங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு ஆதரவான முதல் குரல் பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையின் குரலாக இருக்கிறது. பல வலதுசாரி ஊடக வியலாளர்கள் சீமானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும், தலித் இயக்கங்களின் தலைவர்களும் பெரியார் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர் எனப் பரிந்து பேசி வருகிறார்கள்.
யார் இந்த ஈ.வே.ரா. பெரியார்?
பெரியார் என மக்களால் அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஒரு செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை வேங்கடப்ப நாயக்கர் ஒரு பெரிய பல சரக்குக் கடையை ஈரோட்டில் நடத்தி வந்தார். பட்டியலின மக்களுக்காகப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர், அய்யன் காளி, ஜோதிராவ் பூலே ஆகியோர் பட்டியலின சமூகத்தில் பிறந்தவர்கள். தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவர்கள். எனவே தங்களது சமூக மக்களுக்காக அவர்கள் போராடியதில் வியப்பு ஒன்றுமில்லை.
ஆனால் பெரியார் நாயக்கர் சமூகத்தில் பிறந்தவர். அவர் தனது இளமைக் காலத்தில் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கவில்லை. எனினும் அவர் ஒடுக்கப்பட்ட இந்த இரு பிரிவு மக்களுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் போராடியும் வந்தார். எனவே முதல் சுற்றிலேயே அவர் சமூக நீதிக்குப் போராடியவர்களோடு சேர்ந்து விடுகிறார்.
பெரியாரின் பொது வாழ்க்கைப் பயணம்
பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். (அன்றைய சென்னை மாகாணம்). அதற்கு முன்பு ஈரோடு நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கை ஏற்கப் படாததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். பின்னர் நீதிக்கட்சியின் ஆதரவாளராக மாறினார். அதன் பின்னர், திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். இறுதி மூச்சு அடங்கும் வரை அக்கட்சியிலேயே பயணித்தார். எனவே இரண்டாவது சுற்றிலும் அவர் சமூக நீதிக்குப் போராடியவர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார்.
வைக்கம் போராட்டமும் சமூக நீதியும்
கேரளாவில் வைக்கம் என்ற ஊரிலிருந்த சிவன் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களில் ஈழவர்களும், நாடார்களும், புலையர்களும், பட்டியலின மக்களும் நடந்து செல்ல முடியாது. இந்தத் தடையை நீக்கக் கோரி கேரளாவிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டங்கள் பல நடத்தினர். ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் அதற்குச் செவிசாய்க்கவில்லை. போராடிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராடிய தொண்டர்கள் உயர் சாதி வகுப்பினரõல் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில், கேரள காங்கிரஸ் தலைவர்கள் அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்த பெரியார் ஈ.வே.ராவை வைக்கம் வந்து போராட்டத்தை நடத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது அழைப்பை ஏற்று காந்தியின் அனுமதியையும் பெற்று பெரியார் 13.9.1924 அன்று வைக்கம் சென்று போராட்டத்தை நடத்தினார். அவர் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் போராட்டங்கள், காந்தியின் தலையீடு ஆகியன காரணமாக திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் வைக்கம் சிவன் கோயில் வீதிகளில் பட்டியலின மக்கள் செல்லக் கூடாது என்ற தடையை நீக்கி உத்தரவிட்டார்.
பெரியாரின் போராட்டம் வெற்றி பெற்றது. இந்தப் போராட்டமே சமஸ்தானத்திலுள்ள கோயில்களில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்வதற்கு வழிகோலியது. தமிழ்நாட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ தூண்டுகோலாக அமைந்தது. பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்தில் இது இன்னொரு மைல்கல்
இடஒதுக்கீட்டிற்கான முதல் அரசியல் சட்டத் திருத்தம்
நாடு விடுதலை அடைந்து புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த போது அதில் பட்டியலின மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. முன்பு நடைமுறையிலிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு தொடரவில்லை. எனினும் பழைய இடஒதுக்கீட்டின் படி பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, அதனை எதிர்த்துச் சில மாணவர்கள் உயர்நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று அந்த இடஒதுக்கீட்டினை ரத்து செய்யும் உத்தரவைப் பெற்றனர். இது தமிழ்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியது. பெரியார் ஈ.வே.ரா. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்பு இருந்தது போல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லையென்றால், அதில் திருத்தம் கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். அதனை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தினார்.
திமுகவும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக நின்றது. அன்றைய முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜரும் இக்கோரிக்øகயின் நியாயத்தை உணர்ந்து, பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். நேரில் சென்றும் வலியுறுத்தினார். பிரதமர் நேருவும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் இதுவே. இதனால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் பயன் பெற்றனர். பெரியாரின் முன்னெடுப்பே இதற்குக் காரணமாகும். இது இந்திய சமூகநீதி வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும்.
சாதிய அடையாளத்தை பெறாத பெரியார்
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை யாரும் விமர்சனம் செய்து பேசினால் நாடார் இன மக்கள் கொந்தளித்துக் குரல் கொடுக்கிறார்கள். போராடுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தேவரின மக்கள் தெய்வமாகவே கருதுகிறார்கள். எனவே அவரது அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய அனைவரும் அஞ்சுகிறார்கள். கப்பலோட்டிய தமிழர் வஉசியைக் குறை கூறினால் பிள்ளைமார் சமூக மக்கள் திரண்டு எழுகிறார்கள். இவர்கள் எல்லாம் சாதியத் தலைவர்கள் அல்ல. எனினும் சாதிய அடையாளத்தை இறந்த பிறகும் அவர்கள் இழக்கவில்லை. ஆனால் பெரியார் ஈவேராவை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். தரக்குறை வாகத் திட்டலாம். ஆனால் பெரியார் சார்ந்த நாயக்கர் இன மக்கள் அதனை எதிர்த்து ஒருபோதும் குரல் கொடுத்தது இல்லை. இதனாலேயே சீமான் போன்றவர்கள் மிகத் தைரியமாக பெரியார் மீது அவதூறு பரப்புகிறார்கள். இந்த வகையில் பெரியார் சாதியை வென்றவர். இது வரலாற்றில் யாரும் பெற்றிராத வெற்றியாகும்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்ற சமூக நீதி
தமிழ்நாடு பாஜகவில் ஹெச்.ராஜா, ராகவன், சீனிவாசன் போன்ற பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாஜக மாநிலத் தலைவர்களாக நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப் நியமனம் செய்யப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பொன்.இராதா கிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை ஆகியோரே தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். மத்தியிலும் நிலை அதுதான். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை முன்னிறுத்துவது பெரியார் போன்ற சமூக நீதித் தலைவர்கள் கடந்தபல்லாண்டுகளாக நடத்தி வந்த பரப்புரைகளுக்குக் கிடைத்த வெற்றியேயாகும்.
பெரியாரின் முரண்பாடுகள்
பெரியாரின் எழுத்துகளிலும், உரைகளிலும் காணப்பட்ட முரண்பாடுகளை பலரும் தற்போது வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெரியார் மிக நீண்ட காலம் (94 ஆண்டுகள்) அரசியலில் இருந்தவர். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில் அவர் தெரிவித்தகருத்துகளில் முரண்பாடுகள் இருந்தன என்பது உண்மையே. இராஜாஜி, காந்தி உள்ளிட்ட பல தலைவர்களிடமும் இந்த முரண்பாடுகளைக்காண முடியும்.
1937ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பு வகித்த போதுதான், நடுநிலைப்பள்ளிகளில் இந்தி மொழியையும் கற்பிக்க வகை செய்யும் ஆணையை வெளியிட்டார். ஆனால் அதே இராஜாஜி 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பதுதான் வரலாறு. பெரியார் நேரடித் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அவருக்கு அரசியல் ஆசை எதுவும் இல்லை. பதவிகள் பெற வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. எனவே அவர் தனக்குச் சரி என்று தோன்றுகின்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார், எழுதினார்.
அவரது எழுத்துகளும் உரைகளும் புத்தகங்கள் வடிவில் வந்துள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றைப் படித்து அவரது கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடியும். பற்று, சாதிப்பற்று, சமயப்பற்று என அனைத்தையும் பெரியார் சாடினார். எனவே இவற்றை வலியுறுத்தும் அனைத்துக் கருத்துகளையும் அவர் விமர்சனம் செய்தார். எனவே அவர் நாட்டுக்கு, மொழிக்கு எதிராகப் பேசினார் என்ற பிம்பம் ஏற்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற பொய்யான புராணக் கதைகளையும், மூடநம்பிக்கையை விதைக்கும் கருத்துகளையும் அவர் சாடினார். சிலப்பதிகாரமும், இராமாயணம், மகாபாரதம் போல ஒரு கற்பனைக் கதையே எனக் கூறினார்.
பெரியாரின் கருத்துகளில் ஒவ்வொரு தரப்பினரும் உடன்படும் அம்சங்களும் உள்ளன. முரண்படும் அம்சங்களும் உள்ளன. ஆனால் பெரியார், சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்களும், அவரின் சமூக நீதிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அவரது கருத்துகளில் காணப்பட்ட முரண்பாடுகளைப் பொருட்படுத்தவில்லை.
பெரியாரும் முஸ்லிம்களும்
பெரியார் ஈவேரா முஸ்லிம்களின் தனித் தொகுதி கோரிக்கையையும், இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஆதரித்தார். விடுதலை இதழிலும், தனது சொற்பொழிவுகளிலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தினார். முஸ்லிம்கள் பால் நல்லெண்ணம் கொண்டிருந்தார். அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஏனெனில் அவர் தேர்தல் அரசியலிலிருந்து விலகியே இருந்தார். இனஇழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே வழி என விடுதலையில் விரிவான கட்டுரை எழுதினார். ஏராளமான மீலாது விழாக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். சமத்துவம் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான் எனப் பேசினார். ஆனால் அந்த நேரத்தில் தர்கா கொண்டாட்டங்களை
அவர் கடுமையாகச் சாடினார். அவை இந்து மததத்தின் மிச்ச சொச்சங்கள் என்று கருதினார். இந்த விஷயத்தில் அவர் அறிஞர் பா.தாவூத் ஷா அவர்களின் கருத்துகளையே வழிமொழிந்தார். பெரியாரின் வழிகாட்டலின் அடிப்படையில்தான் நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பித்தது. அதில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்களுக்கு 16 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் காயிதே ஆஜம் ஜின்னா தனது திராவிட கோரிக்கைக்கு ஆதரவாக பெரிய அளவில் குரல் கொடுக்க வில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. முஸ்லிம் லீக் 1962, 1967 தேர்தல்களில் காமராஜரின் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அணியில் அதுவும் இராஜாஜியோடு சேர்ந்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே சில சமயங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இவை ஒன்றிரண்டு சம்பவங்களே. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பெரியார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்.
நாத்திகவாதியான பெரியாருக்கு முஸ்லிம் லீக் எப்படி ஆதரவு கொடுக்கலாம் என விடுதலைப் போராட்டக் கால கட்டத்தில் காங்கிரஸிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். பிறப்பின் அடிப்படையில் இந்து சமயத்தில் நிலவி வந்த பாகுபாடுகளையும், கொடுமைகளையும் எதிர்க்கவும், அதற்குக் காரணமான பிராமண மேலாதிக்கத்தைத் தகர்க்கவும், கடவுள் பெயரால் சொல்லப்பட்ட புராணங்களையும், இதிகாசங்களையும் எதிர்க்கவே பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்புரை செய்தார். கடவுள் இல்லை என்று சொல்வதன் மூலமே இந்த சமூக அவலங்களைப் போக்க முடியும் என எண்ணினார்.
எனவே அவரது கடவுள் மறுப்புக் கொள்கை அவர் சார்ந்திருந்த இந்து சமயத்தின் பால் கொண்ட வெறுப்பின் காரணமாகவே உருவானது. வேறு காரணங்கள் இல்லை. அவரின் மற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு முஸ்லிம் லீகிற்கு உடன்பாடு உண்டு எனவே பெரியாரை ஆதரிக்கிறோம் என முஸ்லிம் தலைவர்கள் அதற்குப் பதிலளித்தனர். இந்தப் புரிதல் இப்போதும் பொருந்தும். எப்போதும் பொருந்தும்.
தலைமுறை கடந்தும் பெரியார்
பெரியார் ஒரு திறந்த புத்தகம். பெரியார் இறந்து 50 ஆண்டுகள் கழித்து அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. அவர் எழுதிய அல்லது பேசிய அப்போதே இது தொடர்பான விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்தன. ஏற்கனவே நமக்கு முந்தைய தலைமுறையினர் பெரியார் குறித்துச் செய்த விமர்ச னங்களையே இந்தத் தலைமுறையினரும் செய்து வருகின்றனர். பெரியாரே ‘எனது கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்கள் சிந்தித்து முடிவு செய்யுங்கள்’ என்றே கூறினார். இன்றைக்குப் பெரியாரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கின்ற சீமானே நேற்றுவரை அவர்தான் எனது வழிகாட்டி என்று கூறிவந்தார். அவரது முரண்பட்ட பேச்சுகள் வலைதளங்களில் தொடர்ந்து தற்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என சீமான் கூறுகிறார். அப்படிச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு. ஆனால் திராவிடக் கருத்தியலை எதிர்ப்பேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இன்றைக்குத் திராவிடக் கருத்தியல் என்பது சமூக நீதிக் கொள்கையே என்ற புரிதல் அவருக்கு ஏற்படவில்லை. திமுகவை எதிர்ப்பதற்காக அவர் பெரியாரையே அவதூறு செய்யத் துணிந்து விட்டார். பெரியார் எதிர்ப்பில் சீமானும் பாஜக தலைவர்களும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். இது சீமான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும் பேசியும் வந்த நிலைப்பாட்டிற்கு முரணானதாகும்