இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருப்பது நாட்டின் நாடாளுமன்றமும், பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள சட்டமன்றங்களுமாகும். ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியும், சட்டமன்றத் தொகுதியும் மக்கள் தொகையின் அடிப்படையில் அதன் எண்ணிக்கைகளும், எல்லைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. எல்லை ஆணைய சட்ட விதிகளின் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்ட தொகுதி சீரமைப்பு ஆணையம் (Delimitation commission of India) இறுதியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைப்பதைத் தனது பணியாகக் கொண்டுள்ளது.
தொகுதி எல்லைகளைச் சீரமைக்கும் பணியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மாற்றப்படாது. இருப்பினும் ஒரு மாநிலத்தின் பட்டியல் சாதியினர், பழங்குடியினர்களின் இடங்களின் எண்ணிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றப்படுகிறது. 2002ஆம் ஆண்டு எல்லை நிர்ணயச் சட்டப்படி, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போதைய தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் 81ஆவது பிரிவின்படி, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்கள், அந்த மாநிலத்தின் மக்கள் தொகையை வைத்து முடிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு மாநிலத் திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள், அந்த மாநிலத்தின் மக்கள் தொகை விகிதாசாரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும். உதாரணமாக தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அந்த மாநில மக்கள் தொகை அடிப்படையில் 80 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி வரையறை ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்பும் மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக 1952, 1963, 1973ஆம் ஆண்டுகளில் தொகுதி வரையறை செய்யப்பட்டது.
தொகுதிகள் வரையறை ஆணையம் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அமைக்கப்படுகிறது. அதனால் இந்த ஆணையத்தின் முடிவுகளை யாரும் திருத்தம் செய்துவிட முடியாது. அது எடுக்கும் முடிவில் நாடாளுமன்றமோ, நீதிமன்றமோ தலையிட முடியாது. இந்த ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி, இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லது இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். 42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில், 1972ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி வரையறை 2000ஆம் ஆண்டு வரை தொடரும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஏனெனில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை அப்போது அமலில் இருந்தது. மக்கள் தொகையைக் குறைத்தால் மக்களவையில் இடங்கள் குறைந்துவிடும் என்று மாநிலங்கள், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சரியாகச் செய்யமாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
84ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 2001ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் ஏற்கனவே இருக்கும் தொகுதி வரையறை 2026ஆம் ஆண்டு வரை தொடரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இந்தச் சட்டம் மொத்த இடங்கள் மாறாமல் தொகுதிகளை 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றது.அதற்குப் பிறகு 87ஆவது திருத்தம் 1991ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மறுசீரமைப்பு மட்டும் செய்ய வேண்டும் என்றது. இதனால் 2002ஆம் ஆண்டு தொகுதிகள் சீரமைப்பு ஆணையம் தொகுதிகள் மறுசீரமைப்பிற்காக அமைக்கப்பட்டது. இது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.
குல்தீப் சிங் குழுவினர், ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் பிற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தனர். ஆனால் இதில் அஸ்ஸாம், நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை தரவுகளின் குழப்பங்களால் கவுகாத்தி நீதிமன்றம் இந்த மாநிலங்களில் மறுசீரமைப்பு செய்ய தடை விதித்தது. பிறகு உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுவரையறைகள் செய்யப்பட்டது. அதில் மக்களவை மாறாமல் தொகுதிகள் மட்டும் சீரமைக்கப்பட்டன. பட்டியலின மக்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 330, 332 வழிவகுக்கிறது.
அதன்படி, 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுவரையறையின்படி, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 84 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கும், 47 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கு(குஇ, குகூ) ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் தொகுதிகளாகும். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 499 தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி சீரமைப்பு செய்யப்படவில்லை. மற்ற மாநிலங்களில் செய்யப்பட்ட மறு சீரமைப்புகளில் பெரும்பாலான தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்படவில்லை. ஆனால் புவியியல் அமைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 2002ஆம் ஆண்டு அரசியலமைப்பு 84ஆவது சட்டத்திருத்தத்தின்படி, 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மாறாது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் மாற்றங்கள் இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு இதன்படியே நடை பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புப் சட்டம் 81(1)(ஞ) படி ஒரு மக்களவைத் தொகுதியில் ஐந்து லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை வாக்காளர்கள் இருக்கலாம் என்று இருந்தது. அது திருத்தப்பட்டு, ஏழரை லட்சம் வாக்காளர்கள் என்ற வரையறை நீக்கப்பட்டது. இப்போது ஒரு மக்களவைத் தொகுதியில் 15 இலட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளது. தெலுங்கானாவில் உள்ள மல்கஜ்கிரி தொகுதியில் 31,50,303 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களின் மக்கள் தொகை மொத்த இந்திய மக்கள் தொகையில் 48.6 விழுக்காடாகும். ஆகவே மக்கள்தொகைபடி, தொகுதிகள் மறுவரையறை செய்தால் இந்த ஐந்து மாநிலங்களில் பாதி மக்களவை உறுப்பினர்கள் இருப்பார்கள். இது சமநிலையைக் குறைத்து, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து வளர்ச்சிகளைப் பாதித்துவிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதில் பா.ஜ.க, மேற்கு வங்கத்தில் ஓரளவும், மற்ற மாநிலங்களில் வலுவாகவும் இருப்பதால் இதுபோன்ற மக்களவை இடங்கள் அதிகரித்தால், தங்களின் ஆட்சியை அசைக்க முடியாது என்று கணக்கிடுகின்றனர். இதனை பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர் ஆலிஸ்டர் மெக்மிலன், மிலன் வைஸ்னவ், ஜாமி ஹின்ட்ஸோன் ஆகிய ஆய்வாளர்கள் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்னிந்திய மக்களவை பிரதிநிதித்துவம் குறைந்து வட இந்திய மக்களவை பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்று பல புள்ளிவிவரங்களைத் தங்களது ஆய்வுக்கட்டுரையில் எழுதியுள்ளனர்.
இந்திய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. இதனால் எல்லா மொழிவாரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் மக்களவையில் பங்கேற்க வேண்டும். இதில் குளறுபடிகள் ஏற்பட்டால் இந்தியாவின் சமநிலை சீர்குலைந்து பல்வேறு கலாச்சாரங்கள் மொழிகள் கொண்ட இந்திய துணைக்கண்டம் உடையும் என்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் ஆ.ராசா கூறினார். ஒரு மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் அருகிலுள்ள மாவட்டம் அல்லது ஊரின் பெயரைக் கொண்ட மக்களவைத் தொகுதியில் இடம் பெறுகிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெறுகின்றன. அதில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதிகள் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாவட்டத்தின் தொகுதிகளும் அந்த மக்களவைத் தொகுதியில் இடம் பெறுகின்றன.
உதாரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதி களோடு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் கோவை மக்கள வைத் தொகுதியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகியவற்றுடன் திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் சட்டமன்றத் தொகுதி இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே மாவட்டமாக ஒரு தொகுதி இல்லாமல் சில மாவட்டங்களின் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு நாடாளு மன்றத் தொகுதிக்குள் ஏன் வருகிறது என்ப தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒரு ஓட்டு, ஒரு மதிப்பு என்னும் கொள்கைப்படி, மறுசீரமைக்கப்படுகிறது. இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஏற்படுத்துவதற்கு முன்பு 500 மக்களøவத் தொகுதிக்குள் இருந்தன. 195152ஆம் ஆண்டுகளில் முதல் முதலாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்குப் பொதுத் தேர்தல் நடத்தியபோது, தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சட்டமன்றம், நாடாளுமன்றத் தொகுதிகளைச் சாத்தியமான வகையில் பிரித்தது.
இந்தியா முழுவதும் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைந்து அதன் பிரதிநித்துவம் குறையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தச் சூழலில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. 2026ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப்போகிறது. இது பொதுவாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி நடைபெற்றால், தென்னிந்திய மாநிலங்களுக்குத் தொகுதிகள் குறையும். இது மக்கள் தொகை கட்டுப்படுத்துதலை வெற்றி கரமாக நடத்திய தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிப்பது போல அமையும் என்றார்.
இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ் நாட்டில் 39 இடங்கள் என்பது 8 இடங்கள் குறைந்து 31 ஆக மாறும். ஒட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும், தமிழகத்திற்கான இடங்கள் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களுக்கு அதிக பிரதி நிதித்துவம் கிடைக்கும் என்றார்.
மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க, நாம் தமிழர், உள்ளிட்ட 5 சிறிய கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. மக்கள் தொகை கணக்கீட்டு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை இந்த கூட்டம் ஒரு மனதாக எதிர்க்கிறது.
2. 1971ஆம் ஆண்டு அடிப்படை யிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறுக்கப்படும் என்று 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, 2026இல் இருந்தே மேலும் 30 ஆண்டுகளுக்கு இதே நிலை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
3. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த விகிதத்தில் தொகுதி களின் எண்ணிக்கை உள்ளதோ அதே எண்ணிக்கையில் தென் மாநிலங்களுக்கும் அதிகரிக்கசட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
4. தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விழுக்காடான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது.
5. இது சார்ந்த போராட்டங்களை முன்னெ டுக்கவும், மக்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில நாடாளுமன்ற உறுப் பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக்குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு பற்றி யாரும் பேசாத நிலையில், முதலமைச்சர் கபட நாடகம் ஆடுவதாக வழக்கமான பொய்யை கட்டவிழ்த்து விட்டார். தொகுதிகள் மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் நடைபெறும் என்பதால் நாட்டிலுள்ள எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியதாக கோயம்புத்தூரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, எந்த வகையான விகிதாச்சாரம் என்று தெளிவுபடுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். இந்த விகிதாச்சார உயர்வு இப்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதா அல்லது மக்கள் தொகை அடிப்படையாகக் கொண் டதா என்று தெளிவு இல்லை என்றார். மேலும், தமிழ்நாட்டிற்குத் தொகுதிகளைக் குறைக் காமல் வடமாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுத்தாலும், அதுவும் அநீதிதான் என்றார்.
தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே புதிய நாடாளுமன்றத்தில், மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும், மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் போது மக்களவையில் 1224 பேர் வரை அமர்ந்து நிகழ்வில் பங்கேற்க முடியும். 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காணப்போகிறோம்’ என்று பேசியது கவனிக்கத்தக்கது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக South vs North: India's Great Divide நூலின் ஆசிரியர் ஆர்.எஸ்.நீலகண்டன், ஒன்றிய அரசின் அதிகாரங்களை வெகுவாக குறைக்க வேண்டும். பெரும்பாலான முடிவுகள் மாநில அளவிலும், பஞ்சாயத்து மட்டங்களிலும் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கான முக்கியத்துவம் குறையும். இப்போதுள்ள சூழலில் அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று குறிப்பிடுகின்றார். மேற்கு வங்க முன்னாள் ஆளுநரான கோபால் கிருஷ்ண காந்தி, Delimitation fallout needs no political forecasting என்ற தனது கட்டுரையில், எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலை பெறும் வரை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மக்கள் தொகை மட்டுமல்லாமல் வேறு சில கணக்கீடுகளையும் உள்ளடக்கி, தொகுதிகளை அதிகரிக்கலாம் என்கிறார்.
ஆனால் மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்க வேண்டும் என்று இருப்பதால் இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் அவசியம் ஏற்படும். இதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு ஒத்துழைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு, தென்மாநிலங்களுக்குப் பாதிப்புகள் வராதவாறு தொகுதிகளை அதிகரிக்கலாம் என்ற கருத்துகளுக்கு, தென்மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து செயல்படமுன் வரவேண்டும். இதில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று மக்களின் ஆதரவோடு முதல்வரின் குரலை வலுப்படுத்த வேண்டும்.